பிரீமியம் ஸ்டோரி

வி.தமிழ்ப்பித்தன், நன்மங்கலம்.

 நாடாளுமன்றத்தில் முன்பெல்லாம் தி.மு.க உறுப்பினர்கள் ஆங்கிலத்தில் பதவி ஏற்றார்கள். இப்போது அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தமிழில் பதவி ஏற்றது பற்றி?

பி.ஜே.பி மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் மட்டுமல்ல, பா.ம.க அன்புமணியும் அ.தி.மு.க-வில் தென்காசி வாசுகி முருகேசன் உள்ளிட்ட சிலரும் தமிழில் பதவி ஏற்றுள்ளனர். இவர்களது செய்கை பாராட்டப்பட வேண்டிய ஒன்று. சமீபத்தில் திருச்சி சிவா கூட தமிழில்தான் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார். முன்பும் சில உறுப்பினர்கள் இப்படி பதவிப்பிரமாணம் எடுத்துள்ளார்கள்.

வடமாநிலத்தைச் சேர்ந்த எம்.பி-கள் பெரும்பாலும் அவரவர் தாய் மொழியில்தான் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர். இந்தப் பாதையை தமிழக உறுப்பினர்களும் இனியாவது பின்பற்ற வேண்டும்.

 கலைப்ரியன், திருச்செங்கோடு.

இரு கம்யூனிஸ்ட்களும் இணைவதால் மட்டுமே மக்கள் மத்தியில் செல்வாக்கும் அரசியல் ஸ்திரத்தன்மையும் பெற்றுவிட முடியுமா?

  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இணைவதால் மக்கள் செல்வாக்கை அடைய முடியுமா என்பதுகூட இரண்டாம் பட்சம்தான். இரண்டு இயக்கங்களும் இணைவதன் மூலமாக அவர்களது கொள்கைகளுக்குக் கூடுதல் பலம் கிடைக்கும். இதுவே முக்கியம். இரண்டு இயக்கங்களும் இணைய வேண்டும் என்பது தேர்தல் வெற்றி, தோல்விகளுக்காக அல்ல. கொள்கையின் வெற்றி, தோல்விகளுக்காகவே. மேலும், இந்தியாவில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய இரண்டு மட்டுமே கம்யூனிஸ்ட் இயக்கங்கள் இல்லை. பல நூறு இயக்கங்களாக, சிறுசிறு குழுக்களாக மாநிலத்துக்கு மாநிலம் பிரிந்து கிடக்கின்றன. இந்த இயக்கங்களும் ஒன்றிணைவதே சரியானது. ஒரே இயக்கமாக, ஒரு தலைமையின் கீழ் வராவிட்டாலும் கூட்டு இயக்கங்களாகவாவது ஒன்றிணைய வேண்டும். திராவிட இயக்கங்களின் கூட்டுக்கு கி.வீரமணியும், தமிழ் தேசிய இயக்கங்களின் ஒற்றுமைக்கு பழ.நெடுமாறனும், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளின் இணைப்புக்கு மூத்த தலைவர்கள் ஆர்.நல்லகண்ணு, என்.சங்கரய்யாவும் பேசி இருப்பது இன்றைய வரலாற்றுத் தேவை.

 பிடல் சேகுவேரா, ராசிபுரம்.

கழுகார் பதில்கள்!

தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மாகாணத்தில் போலீஸ் அதிகாரத்தைத் தரமறுக்கும் இலங்கை அரசின் நிலைப்பாடு எதை உணர்த்துகிறது?

  மகிந்த ராஜபக்ஷே இன்னும் திருந்தவில்லை, திருந்த மாட்டார் என்பதையே இது உணர்த்துகிறது. 'ஜெயவர்த்தனா உண்மையான பௌத்தராக இருந்திருப்பாரேயானால் நாங்கள் ஆயுதம் தூக்க வேண்டிய அவசியமே வந்திருக்காது’ என்று விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் சொன்னார். ராஜபக்ஷே, பௌத்தத்தின் மீது இம்மி அளவு நம்பிக்கையும் இல்லாதவர் என்பதன் அடையாளம் இது.

'தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மாகாணத்தில்’ என்று நீங்கள் குறிப்பிட்டு உள்ளீர்கள். 2009-க்குப் பிறகு வடக்கு மாகாணத்தில் சிங்களவர் குடியேற்றம் தொடர்ந்து நடந்து வருகிறது. இன்னும் ஐந்து ஆண்டுகள் கழித்து வடக்கு மாகாணத்தில் தமிழர்கள் சிறுபான்மை ஆக்கப்பட்டு விடுவார்கள் என்பதே கசப்பான உண்மை.

 கே.வெங்கட், விழுப்புரம்.

புதுச்சேரியில் முழு மதுவிலக்கு கொண்டுவந்தால்?

தமிழ்நாட்டின் வடக்கு மாவட்டங்களில் விற்பனை ஏகபோகமாக இருக்கும். 'சுற்றிலும் எரியும் நெருப்பு வளையத்துக்குள் தீ பிடிக்காத கற்பூரம் இருக்க முடியாது’ என்று கருணாநிதி ஒரு முறை சொன்னார். எனவே தனிப்பட்ட மாநிலத்தில் மதுவிலக்கு கொண்டுவருவதால் எந்தப் பயனும் இல்லை. மதுவிலக்கைப் பொறுத்தவரை அகில இந்திய அளவில் பொதுக் கொள்கை உருவாக்கப்பட வேண்டும்.

 மேட்டுப்பாளையம் மனோகர், சென்னை-18.

இந்தியப் பிரதமரும் தமிழக முதல்வரும் சமீபத்தில் சந்தித்துப் பேசியதன் விளைவாக தமிழகம் பயனடையும் என்று நம்பலாமா?

தமிழகம் பயனடைய வேண்டும் என்று பிரார்த்திப்போம்.

 இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

2016 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க - பி.ஜே.பி கூட்டணி நிச்சயம் என்கிறார்களே?

பி.ஜே.பி-யில் உள்ள சிலருக்கு அப்படி ஒரு ஆசை இருக்கிறது. அ.தி.மு.க-வுடன் சேர்ந்தால் பத்து, பதினைந்து பேருக்கு எம்.எல்.ஏ ஆகும் வாய்ப்பு கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால் டெல்லி தலைமையில் அத்தகைய சிந்தனை இப்போதைக்கு இல்லை. சமீபத்திய குழு கூட்டத்தில் பேசிய மோடி, 'மத்தியில் ஆட்சிக்கு வந்ததோடு நம்முடைய லட்சியம் நிறைவேறிவிடவில்லை. அனைத்து மாநிலங்களிலும் பி.ஜே.பி ஆட்சி என்பதுதான் என்னுடைய லட்சியம்’ என்று சொல்லியிருக்கிறார். எனவே அ.தி.மு.க-வுடன் முன்பைப் போல 'சரணாகதிக் கூட்டணி’யை பி.ஜே.பி தலைமை வைக்காது என்றே இப்போதைக்கு சொல்லத் தோன்றுகிறது. மேலும், ஜெயலலிதாவைப் பொறுத்தவரை நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து நின்று வென்றவர் என்ற பெருமையைப் பெற்றது மாதிரி சட்டமன்றத் தேர்தலிலும் சாதித்துக் காட்டவே நினைப்பார். எனவே, 234 தொகுதியிலும் தனித்துப் போட்டி என்றே கிளம்புவார்.

 பி.எஸ்.பூவராகவன், படியூர்.

தமிழகக் கட்சிகள் அனைத்துமே தேர்தல் தோல்விக்குத் தேர்தல் ஆணையத்தையே குறை சொல்கிறதே?

தேர்தல் பிரசாரத்தின்போதே, தேர்தல் ஆணையத்தை ஜெயலலிதா குறை சொல்லிப் பேசினார். மற்ற கட்சிகள், தேர்தல் முடிந்த பிறகு குற்றம்சாட்டுகின்றன. இதுதான் ஆளும் கட்சிக்கும் மற்ற கட்சிக்கும் வித்தியாசம்.

தேர்தல் பிரசாரக் கூட்டங்களின் சுமார் 10-க்கும் மேற்பட்ட ஊர்களில் தேர்தல் ஆணையத்தைக் கடுமையாக விமர்சித்துப் பேசிய முதல்வர் ஜெயலலிதா, தேர்தல் அன்று வாக்களித்துவிட்டுத் திரும்பும்போது, திடீர் பல்டியாக, தேர்தல் ஆணையத்தைப் பாராட்டிப் பேசியதன் உள் அர்த்தம் இதுவரை பிடிபடாதது. இதனால்தான் தேர்தல் ஆணையம் விமர்சனத்துக்கு உள்ளாகிறது. தேர்தல் ஆணையம் என்பது விமர்சிக்கக் கூடாத உச்ச நீதிமன்றம் அல்ல. அது ஒரு நிர்வாக அமைப்பு.

 மு.கல்யாண சுந்தரம், மேட்டுப்பாளையம்.

ராஜீவ் கொலையில் தூக்குத் தண்டனை பெற்றவர்களை தடாலடியாக விடுதலை உத்தரவு வழங்கிய தமிழக அரசின் அடுத்தகட்ட நடவடிக்கையில் என்ன முன்னேற்றம் கண்டுள்ளது?

இப்போது தமிழக அரசின் கையில் எதுவும் இல்லை. அரசியல் அமைப்பு அமர்வுக்கு சில கேள்விகளை எழுப்பி விடை கூறச் சொல்லி இருக்கிறது உச்ச நீதிமன்றம். எனவே இறுதி முடிவு அவர்கள் கையில் இருக்கிறது. ஒருவேளை தமிழக அரசின் கருத்தை, அந்த அமர்வு கேட்டால் அப்போது தன் நிலைப்பாட்டில் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும்.

 எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.

ஜி.கே.வாசன் மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸைத் தொடங்க இது சரியான நேரம்தானா?

சட்டமன்றத் தேர்தலுக்கான முஸ்தீபுகள் தொடங்கும்போது த.மா.கா-வை புதுப்பிக்கலாம் என்று ஜி.கே.வாசனுக்கு சிலர் ஆலோசனை சொன்னதாகக் கேள்வி.

கழுகார் பதில்கள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு