Published:Updated:

முதல்வருக்கு எதிரான மனுவை கவர்னர் கண்டுகொள்ளவில்லை!

தில் டிராஃபிக் ராமசாமி

பிரீமியம் ஸ்டோரி

''பொறுப்புள்ள பதவியில் இருக்கும் முதல்வர் ஜெயலலிதா தன் மீதுள்ள சொத்துக் குவிப்பு வழக்கில்

முதல்வருக்கு எதிரான மனுவை கவர்னர் கண்டுகொள்ளவில்லை!

தடை மேல் தடை கேட்டு தப்பித்து வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கவர்னரும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார். அதனால்தான் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு மீது வழக்குத் தொடுத்திருக்கிறேன்'' என்று தடாலடி கிளப்பிவருகிறார் டிராஃபிக் ராமசாமி.

கடந்த 26-ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதி சவுகான், முதல்வர் ஜெயலலிதா மீது பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் சொத்துக் குவிப்பு வழக்கை நடத்த 10 நாட்களுக்கு இடைக்கால தடை விதித்தார். அந்தத் தடை இப்போது மேலும் 10 நாட்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதை எதிர்த்துதான் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் டிராஃபிக் ராமசாமி வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இதுபற்றி டிராஃபிக் ராமசாமி நம்மிடம் பேசினார். ''ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு கடந்த 18 வருடமாக இழுத்துக்கொண்டிருக்கிறது. சாதாரண மக்களுக்கும் தங்கள் மீதான வழக்கை இதுபோன்று இழுத்தடிக்கும் சலுகை கிடைக்குமா? ஸ்பெஷல் கோர்ட் போட்ட பிறகும் ஸ்டே வாங்கிக்கொண்டு இருப்பது எந்த விதத்தில் நியாயம்? அரசியல் சாசன சட்டப்படி ஒரு முதல்வர், பதவி பிரமாணம் செய்துகொள்ளும்போது, எந்த குற்றச் செயல்களிலும் ஈடுபட மாட்டேன் என்று உறுதிமொழி எடுத்துக்கொள்கிறார். அந்த உறுதிமொழியை மீறி செயல்பட்டபோது அரசாங்கம் அவர் மீது வழக்குத் தொடுக்கிறது. இப்போது அரசாங்கப் பொறுப்பில் இருந்துகொண்டு, அரசு தொடர்ந்த வழக்குக்குத் தடை வாங்குகிறார்.  ஜெயலலிதா என்ற ஒரு தனிநபர், முதல்வர் பதவியை வைத்துக்கொண்டு, உச்ச நீதிமன்றம் சென்று தடை உத்தரவு கேட்கிறார். நீதிபதி மன்றம் தடை கொடுத்துள்ளது.    

இந்திய தண்டனைச் சட்டம் 177, 181 விதிகளின்படி, ஓர் அரசு ஊழியர் பதவி பிரமாணத்துக்கு எதிராக உண்மையை மறைத்தாலோ, அரசுக்கு எதிராக செயல்பட்டாலோ இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கலாம். ஜெயலலிதா ஓர் அரசு ஊழியர். அரசாங்க பதவி வகித்துக்கொண்டு, அரசாங்கம் தொடுத்த வழக்குக்கு எதிராகத் தடை வாங்குகிறார் என்றால், அது சட்டத்துக்குப் புறம்பானது. அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமை கவர்னருக்கு உண்டு. அதனால்தான், முதல்வர் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி கவர்னரிடம் மனு கொடுத்தேன். ஆனால், கவர்னர் கண்டுகொள்ளவில்லை.

முதல்வருக்கு எதிரான மனுவை கவர்னர் கண்டுகொள்ளவில்லை!

அதன் பிறகு, பெங்களூரு ஸ்பெஷல் கோர்ட்டில் மனு போட்டேன். என் மனு மீது தீர்ப்பளித்த நீதிபதி குன்ஹா, 'எனக்கு இந்த சொத்துக் குவிப்பு வழக்கை மட்டும்தான் விசாரிக்க உரிமை உண்டு. உங்கள் மனுவை விசாரிக்க எனக்கு அதிகாரம் இல்லை’ என்று தன் கைப்பட எழுதி என் மனுவை திருப்பிக் கொடுத்தார். அதன் பிறகு, 9-ம் தேதி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவாக தாக்கல் செய்துள்ளேன்.

முதல்வருக்கு எதிரான மனுவை கவர்னர் கண்டுகொள்ளவில்லை!

ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான பி.சி.சி.ஐ சேர்மன் சீனிவாசனை உச்ச நீதிமன்றம் நீக்கியதுபோல, பொறுப்புள்ள முதல்வர் பதவியைத் தவறாகப் பயன்படுத்திய ஜெயலலிதாவையும் டிஸ்மிஸ் செய்ய வேண்டும். அதற்கு முன்பாகவே எடியூரப்பா, அசோக்சவான் போன்று ஜெயலலிதாவே தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வது நலம்'' என்று சொன்ன அவர்,  

''சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜரான அரசு வழக்கறிஞர் பவானி சிங்குக்கு ஒன்பது மாதங்களாக சம்பளம் தரவில்லை. கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிதான் அவரை நியமித்தார். தமிழக அரசோடு அவர் பேசி, சம்பளத்தைப் பெற்றுத்தந்திருக்க வேண்டும். அவர் பெற்றுத்தராததால் அதுகுறித்தும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கடிதம் கொடுத்திருக்கிறேன். பிறகு, பவானி சிங்கையும் சந்தித்தேன். அவர் என்னைப் பார்த்து ரொம்ப ஆச்சர்யம் அடைந்தார். தமிழ்நாட்டில் இருந்து எங்களுக்கு சம்பளம் பெற்றுத்தர வந்திருப்பதை நினைத்து பெருமைப்படுவதாகச் சொன்னார். என்னைப் பொறுத்தவரை சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை நீதிமன்றங்கள் நிரூபிக்க வேண்டும்'' என்றார்.

இவரது மனுவுக்கு என்ன ரியாக்ஷன் கிடைக்குமோ தெரியவில்லை!

- வீ.கே.ரமேஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு