Published:Updated:

தலை நிமிர்கிறது தமிழ்!

Vikatan Correspondent

தமிழில் படித்து, தமிழில் தேர்வு எழுதி...

இந்திய மாணவர்களில் பெரும்பாலானவர்களின் கனவு யூ.பி.எஸ்.சி தேர்வு எழுதி 'ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்’ ஆவதுதான். இந்த ஆண்டு மட்டும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் முதல்கட்ட தேர்வு எழுதினார்கள். இதில், இறுதிகட்ட நேர்முகத் தேர்வுக்கு 3,003 பேர் தேர்ச்சி பெற்று நேர்காணலுக்கு அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 264 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். நேர்முகத் தேர்வு கடந்த ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் இரண்டு கட்டங்களாக டெல்லி யூ.பி.எஸ்.சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. இந்த ஆண்டு யூ.பி.எஸ்.சி முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. இதில் 1,122 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வடமாநிலங்களைச் சேர்ந்த கவுரவ் அகர்வால் தேசிய அளவில் முதலிடத்தையும், முனீஷ் சர்மா இரண்டாம் இடத்தையும் பிடித்தனர். டாப் ரேங்கில் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு குறைவு என்றும் சொல்லப்படுகிறது!

தமிழால் தமிழகத்தில் முதலிடம்!

தலை நிமிர்கிறது தமிழ்!

அகில இந்திய அளவிலும் 45-வது இடத்தையும், தமிழகத்தில் முதல் இடத்தையும் பிடித்து இருப்பவர் வீ.பி.ஜெயசீலன். தமிழை விருப்பப் பாடமாகத் தேர்ந்தெடுத்து தேர்வு எழுதியவர் இவர். இது தமிழை விருப்பப் பாடமாக எடுத்து, படித்து வருபவர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது.  ஜெயசீலன் நம்மிடம் பேசும்போது, ''நான் தொடக்கப்பள்ளியில் இருந்து தமிழில்தான் படித்தேன். தமிழ் மொழி மீது அப்போது இருந்தே எனக்கு ஆர்வம் இருந்தது. 11-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோதுதான் எனக்கு ஐ.ஏ.எஸ் கனவு துளிர்விட்டது. என் சொந்த ஊர் கொடைக்கானல் மலைக்கு கீழ் இருக்கும் கெங்குவார்பட்டி கல்லுப்பட்டி என்ற சின்ன கிராமம். பள்ளிப் படிப்பை முடித்ததும் இளநிலை பட்டமாக வேளாண்மை படித்தேன். படித்துக்கொண்டிருக்கும்போதே சிவில் சர்வீஸ் தேர்வுக்கும் படிக்க ஆரம்பித்தேன். ஒவ்வொரு தேர்வுக்கும் என்னை தயார்படுத்திக்கொண்டேன். தமிழில் தேர்வு எழுதுவதால் இதற்கான பாடப் புத்தகங்கள் கிடைப்பதில் சற்று சிரமம்தான். ஆனால், தொடர் முயற்சியால் பல ஆசிரியர்களின் வழிகாட்டுதலால் சிறப்பாக தமிழில் தேர்வு எழுத முடிந்தது. 2010-ல் முதன்முதலில் மத்திய பொதுப்பணியாளர் தேர்வாணையத்தில் (யூ.பி.எஸ்.சி) தேர்வு எழுதத் தொடங்கினேன். அந்த ஆண்டு ஐ.ஆர்.எஸ் தேர்ச்சியானேன். ஆனால், என்னுடைய இலக்கு முழுவதும் ஐ.ஏ.எஸ் என்பதால், மீண்டும் விடாமல் எழுதி இந்த முறை வாங்கிவிட்டேன்'' என்றவரிடம்,

''கடந்த ஆண்டைவிட தமிழக மாணவர்கள் இந்த ஆண்டு குறைவாகத் தேர்வாகி இருப்பதாகச் சொல்கிறார்களே?'' என்று கேட்டோம்.

''தமிழகத்தில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தேர்ச்சி சதவிகிதம் சற்று குறைவாக இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. ஆனால், ஆண்டுதோறும் வடமாநில மாணவர்களும் தென்னக மாணவர்களும் மாறி மாறித்தான் வந்துகொண்டிருக்கிறார்கள். பொதுவாக 21 விருப்பப் பாடத்தில் நாம் ஏதாவது இரண்டைத் தேர்ந்தெடுத்து எழுதலாம். இந்த ஆண்டு பாடத்திட்டத்தை கொஞ்சம் மாற்றியிருக்கிறார்கள். ஏதாவது ஒரு விருப்பப் பாடத்தைத் தேர்ந்தெடுத்தால் போதும் என்று சொல்லியிருந்தார்கள். திடீர் மாற்றத்தால் சிலர் தடுமாறியிருக்கலாம். ஆனால், அகில இந்திய அளவில் தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 100-க்கும் மேற்பட்டவர்கள் தேர்வாகி இருக்கிறார்கள். 28 மாநிலங்கள் இருக்கும்போது தமிழகத்தில் இருந்து 100 பேர் என்பதே நமக்குப் பெருமைதான். தமிழைத் தேர்ந்தெடுத்து இன்னும் பலர் வர வேண்டும்' என்ற வேண்டுகோளுடன் முடித்தார்.

''மொழிப் பாடத்தில்தான் அதிக மதிப்பெண் எடுக்க முடியும்!''

தலை நிமிர்கிறது தமிழ்!

சென்னையைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி பெண் பெனோ செபின், அகில இந்திய அளவில் யூ.பி.எஸ்.சி தேர்வில் 343-வது இடம் பிடித்திருக்கிறார். அவரிடம் பேசியபோது, ''எனக்கு சென்னைதான் எல்லாமே. எனக்கு பார்வை குறைபாடு இருந்தாலும், அதையெல்லாம் தாண்டித்தான் இப்போது வெற்றி பெற்று இருக்கிறேன். நான் விருப்பப் பாடமாக தேர்ந்தெடுத்து எழுதியது ஆங்கிலம். நான் இளநிலை, முதுநிலை வரை ஆங்கிலம்தான் படித்தேன். அதனால், எனக்குச் சுலபமாக இருந்தது. விருப்பப் பாடமாக ஆங்கிலத்தையும், தமிழையும் மிக அரிதாகத்தான் தேர்ந்தெடுப்பார்கள். கல்லூரியில் சேர்ந்த பிறகு தமிழ் மீதும் ஆங்கிலம் மீதும் ஆர்வம் ஏற்பட்டது. அதுவரை பொழுதுபோக்குக்காகப் படித்து வந்தாலும், இலக்கிய வகுப்பில் சேர்ந்த பிறகு இரண்டு மொழி படைப்புகளையும் பொருத்திப் பார்க்கிற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இரண்டிலும் நல்ல ஆளுமை பெற்றேன். அப்பா சார்லஸ், ரயில்வே ஊழியர். ஆனால், ரொம்ப சிரமப்பட்டு என்னை ஐ.ஏ.எஸ் படிக்க வைத்தார். நான் ப்ரெய்லி முறையில்தான் முழுக்க படித்தேன். பல சமயம் அம்மா எனக்காக வாசித்துக்காட்டுவார். மொழியில்தான் அதிக அளவில் நாம் மார்க் எடுக்க முடியும். நாம் சிந்திப்பதை அப்படியே எழுத்தாகும்போது சுலபமாக வென்றுவிடலாம். வெற்றிக்கு ரகசியம் எல்லாம் என்னிடம் இல்லை. 'நீங்கள் எப்படியோ, அப்படியே உங்களை ஏற்றுக்கொள்ளுங்கள். இருக்கும் திறமையை வைத்து முன்னேறுங்கள்’ இதுதான் நான் சொல்லும் செய்தி'' என்றார் உத்வேகமாக.

கைவிட்ட ஹிந்தி... வாய்ப்பளித்த தமிழ்!

போட்டித் தேர்வுகளுக்கான ஏராளமான புத்தகங்களைத் தயாரித்து வழங்கும் டாக்டர் சங்கர சரவணனிடம் பேசினோம். ''ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெறுவதில் தமிழக மாணவர்களின் பங்கு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. எல்லா ஆண்டும் தமிழ் இலக்கியத்தை விருப்பப் பாடமாக எடுத்துப் படித்த மாணவர்கள் வெற்றி பெறுகிறார்கள். இந்த ஆண்டு முழுத் தேர்வையும் தமிழில் எழுதி ஜெயசீலன் அகில இந்திய அளவில் 45-வது இடத்தைப் பெற்று இருப்பது மகிழ்ச்சியும் நம்பிக்கையும் அளிக்கிறது.

இந்த ஆண்டு சுஜிதா என்ற மாணவியும் இந்தத் தேர்வில் வெற்றி பெற்று உள்ளார். அவர் பள்ளியில் தமிழ் மொழிவழி பாடம் படித்தவர் இல்லை. ஐ.ஏ.எஸ் தேர்வில் கட்டாயமாக இந்திய மொழி ஒன்றில் தேர்ச்சி பெற வேண்டும். அவ்வாறு தேர்ச்சி பெற்றால்தான் அந்தத் தேர்வர் எழுதும் மற்ற விடைத்தாள்கள் திருத்தப்படும் என்பதால், பள்ளியில் படித்த ஹிந்தியை வைத்து கடந்த ஆண்டு மொழித்தாளில் தேர்ச்சி அடையாமல் வெற்றி வாய்ப்பை தவறவிட்டார். இந்த ஆண்டு தமிழ் மொழி பாடத்தை எடுத்து ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்று உள்ளார். இலக்கியம், மொழிப்பாடம், முழுத்தேர்வும் எழுதும் பயிற்று மொழி... என மூன்று நிலைகளுக்கும் இந்த ஆண்டு தமிழ்நாட்டில் வெற்றியாளர்கள் கிடைத்திருப்பது கவனிக்கத்தக்கது.

1987-ம் ஆண்டிலேயே தமிழ் மொழியில் முழுத்தேர்வையும் எழுதி முதன்முதலாக வெற்றி பெற்றவர் ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். அதன் பின்பு பல நண்பர்கள் முழுத்தேர்வையும் தமிழில் எழுதி

தலை நிமிர்கிறது தமிழ்!

குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்று இருக்கிறார்கள். இப்போது ராமநாதபுரம் ஆட்சியராக இருக்கும் நண்பர் நந்தகுமார் போன்றவர்கள் இதற்கு எடுத்துக்காட்டு. இருப்பினும், தேர்வுக்கு முழுமையாக தமிழில் படிக்கக்கூடிய அளவுக்கு கருவி நூல்கள் இன்னும் பெருகவில்லை. சில புத்தகங்கள் ஆங்கிலத்தில்தான் இருக்கின்றன. அதனை தமிழில் மாற்றினால் இன்னும் பல மாணவர்கள் தமிழில் தேர்வு எழுத முன்வருவார்கள். இதனை தமிழக அரசு ஊக்கப்படுத்த வேண்டும்'' என்றார்.

''மனப்பாடக் கல்வி வேண்டாம்!''

ஐ.ஏ.எஸ் பயிற்சி மையம் நடத்திவரும் சங்கர் நம்மிடம் பேசினார். ''கடந்த ஆண்டு 1,000 காலியிடங்கள் இருந்தன. ஆனால், 98 பேர்தான் தேர்வானார்கள். இந்த ஆண்டு காலியிடங்கள் கடந்த ஆண்டைவிட அதிகம். ஆனால், தமிழகத்தில் இருந்து குறைவான மாணவர்கள்தான் தேர்வு பெற்றுள்ளார்கள். பொதுத் தேர்வு எழுதியவர்கள் அதிகம். அதேபோல்,  நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டவர்களும் அதிகம். ஆனால், சர்வீஸ் அதிகமாக வரவில்லை. புதிய பாடத்திட்டங்களில் மாணவர்கள் கொஞ்சம் தடுமாறிக்கொண்டுதான் இருக்கிறார்கள். நம்முடைய கல்விமுறை, மனப்பாடம் செய்து ஒப்பிப்பதாகவும், புத்தகத்தில் இருப்பதை அப்படியே எழுதுவதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட மாணவர்களால் இந்தத் தேர்வுகளில் வெல்ல முடியாது. இப்போது சர்வீஸ் வாங்கி இருக்கும் மாணவர்களில்

60 பேர் எனக்கு நன்கு அறிமுகம் ஆனவர்கள். அவர்கள் மனப்பாடம் செய்யாமல் பரந்துபட்ட வாசிப்பு அனுபவம் உள்ளவர்களாக இருப்பவர்கள். அவர்கள்தான் வென்றுள்ளார்கள். இப்படிப்பட்ட மாணவர்கள் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு முயற்சிக்க வேண்டும். தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் படிப்புக்கான ஆர்வம் அதிகம் ஆகிக்கொண்டு இருக்கிறது என்பதும் உண்மை!'' என்று சொன்னார்.

இந்திய ஆட்சிப் பணியை தமிழக மாணவர்கள் அதிகம் கைப்பற்றட்டும்!

- நா.சிபிச்சக்கரவர்த்தி

படங்கள்: வீ.நாகமணி, ப.சரவணகுமார்