Published:Updated:

''விநாயகர் கோயில் நிலத்திலும் விளையாடிவிட்டார்!''

அழகிரிக்கு எதிராக அடுத்த புகார்

''விநாயகர் கோயில் நிலத்திலும் விளையாடிவிட்டார்!''

அழகிரிக்கு எதிராக அடுத்த புகார்

Published:Updated:

ஆட்சியிலும் கட்சியிலும் பவர் போயிருந்தாலும், அழகிரி மீது புகார்கள் மட்டும் புதுசு புதுசாக  வந்தவண்ணம் உள்ளது. ஏற்கெனவே திருமங்கலம் சிவரக்கோட்டை அருகே அவர் கட்டிய தயா பொறியியல் கல்லூரி, அரசு நிலத்தில் உள்ள பாசனக் கால்வாய்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாகப் புகார் எழுந்தது. அதன் பிறகு பல்வேறு காரணங்களைக் கூறி இன்று வரை அந்தக் கல்லூரியைத் திறக்க அரசு அனுமதி அளிக்கவில்லை. இந்த நிலையில், அந்தக் கல்லூரியை ஒட்டியுள்ள அறநிலையத் துறைக்குச் சொந்தமான நிலத்தை அழகிரி பெயரில் கிரயம் வாங்கியிருப்பதாகக் கூறி, கடந்த 20-ம் தேதி மதுரை மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியனிடம் விவசாய சங்கத் தலைவர் சிவரக்கோட்டை ராமலிங்கம் புகார் மனு கொடுத்தார். இவர்தான் தயா பொறியியல் கல்லூரி கட்டியுள்ளதில் நிலமோசடி நடந்துள்ளதாக ஏற்கெனவே புகார் எழுப்பியவர்.

''விநாயகர் கோயில் நிலத்திலும் விளையாடிவிட்டார்!''

புதிய புகார் பற்றி ராமலிங்கத்திடம் கேட்டோம். ''தன் மகன் பெயரில் கல்லூரி கட்டுவதற்காக சிவரகோட்டையில் மு.க.அழகிரி 15 ஏக்கர் நிலம் வாங்கினார். கூடவே அருகில் இருந்த அறநிலையத் துறையின் விநாயகர் கோயிலுக்குச் சொந்தமான 44 சென்ட் நிலத்தையும் 2010-ல், மோசடியாக தன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''விநாயகர் கோயில் நிலத்திலும் விளையாடிவிட்டார்!''

பெயரில் பத்திரம் பதிந்துள்ளார். பொதுவாக கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை அவ்வளவு சீக்கிரத்தில் மோசடி செய்ய முடியாது. ஆனால், இவர்கள் அப்போது ஆட்சியில் இருந்ததைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, முதலில் பட்டாவில் கோல்மால் செய்துள்ளனர். முதலில், ஜெயராஜ் மகன் சதீஷ் என்பவரது பெயரில் அந்த நிலம் இருப்பது போன்று பட்டாவில் மாற்றம் செய்துள்ளனர். பிறகு அந்த இடத்தை மதுரையைச் சேர்ந்த சேதுராமன் மகன் சம்பத்குமார் பெயருக்கு மாற்றியுள்ளார். அவரிடம் இருந்து அழகிரி கிரயம் வாங்கியதாக பத்திரம் தயார் செய்து, திருமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர் (பத்திர நகல்கள், ஃபோர்ஜரி செய்யப்பட்ட பட்டா, சிட்டா நகல்களைக் காட்டுகிறார்).

கோயில் நிலத்தை ஆக்கிரமித்து மோசடியாக பத்திரம் பதிவுசெய்த அழகிரி மீது, கிரிமினல் வழக்குப் பதிவுசெய்ய வேண்டும். ஏற்கெனவே அவர் கட்டியுள்ள கல்லூரி, பாசனக் கால்வாயை ஆக்கிரமித்திருப்பதாக அனைத்து ஆதாரங்களையும் நான்தான் மாவட்ட நிர்வாகத்திடம் கொடுத்தேன். கலெக்டர் சகாயத்துக்குப் பிறகு வந்த அதிகாரிகள் நியாயமாக நடந்துகொள்ளவில்லை. அழகிரிக்குப் பயப்படுகிறவர்களாக இருக்கிறார்கள். இன்னும் வருவாய்த் துறையிலும் காவல் துறையிலும் பலர் தி.மு.க ஆதரவாளர்களாகத்தான் இருக்கிறார்கள். அ.தி.மு.க முக்கிய நிர்வாகிகளே அழகிரியிடம் தொடர்புடன்தான் இருக்கிறார்கள். அப்புறம் எப்படி நடவடிக்கை இருக்கும்? முதல்வர் கவனத்துக்கு இந்த விவகாரம் சென்றால், கண்டிப்பாக நல்லது நடக்கும். கலெக்டரிடம் இப்போது முறையிட்டுள்ளேன். நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். அப்படி இல்லாத பட்சத்தில் கோர்ட்டுக்குச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை'' என்றார்.

சில நாட்களுக்கு முன்பு,  2009 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அழகிரி, சொத்துப் பட்டியலுக்கான படிவத்தில் தன் சொத்துகளைப் பட்டியலிட்டபோது, திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகா காட்டூர் கிராமத்தில் இருக்கும் பட்டா எண் 353-ல் உள்ள நிலத்தைக் காட்டாமல் மறைத்துவிட்டாராம். அந்தப் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவர், இதுகுறித்து 2013-ல் ஆதாரங்களுடன் தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்தார். அதைப் பரிசீலித்த தேர்தல் ஆணையம், 'இதில் உண்மை இருக்கிறதா?’ என்று விசாரிக்க திருவாரூர் கலெக்டருக்கு உத்தரவிட்டது. அந்தப் புகார் உண்மைதான் என்று முடிவானதால், மதுரை கலெக்டரிடம் திருவாரூர் கலெக்டர் அறிக்கை கொடுத்தார். அதை அடிப்படையாக வைத்து, மதுரை ஜே.எம். நீதிமன்றத்தில் அழகிரிக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளார் கலெக்டர். இந்த விவகாரம் அழகிரிக்குப் பிரச்னையை உண்டாக்கும் என்று எல்லோரும் பேசிவரும் வேளையில்தான், இப்போது கோயில் நிலத்தை அபகரித்தார் என்ற புகார் கிளம்பி அடுத்த அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

இது சம்பந்தமாக மு.க.அழகிரியிடம் தொடர்புகொண்டு கேட்டோம். ''இது முழுக்க முழுக்கப் பொய். தேவையில்லாமல் அவதூறு பரப்புகிறார்கள். ஏற்கெனவே கல்லூரி மீது உள்நோக்கத்தோடு அவதூறு கிளப்பினார்கள். அந்த விஷயத்தையே இப்போதும் சொல்கிறார்கள். விரைவில் அந்த ராமலிங்கம் மீது மானநஷ்ட வழக்குத் தொடரப்போகிறேன்'' என்றார் சுருக்கமாக.

அழகிரிக்கு எதிராக இன்னும் என்னென்ன வம்புகளோ?  

- செ.சல்மான், படங்கள்: பா.காளிமுத்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism