Published:Updated:

மொழி திணிப்பும் வேண்டாம்... வெறுப்பும் வேண்டாம்!

'இந்தி'யால் வந்த பிரச்னை..

மொழி திணிப்பும் வேண்டாம்... வெறுப்பும் வேண்டாம்!

'இந்தி'யால் வந்த பிரச்னை..

Published:Updated:

''இந்தி மொழியின் பயன்பாட்டை மத்திய அரசு அதிகரிக்கும். அரசு அலுவலகங்களிலும் வலைதளங்களிலும் இந்தி பயன்பாட்டை மக்கள் அதிகரிக்க வேண்டும். இந்தி, நம் தேசிய மொழி. அதனால், இந்தி பயன்படுத்துவதை மக்கள் ஊக்குவிக்க வேண்டும். எல்லா துறைகளிலும், அனைத்துவிதமான தகவல் தொடர்புகளிலும், இந்தி மொழியே இனி பயன்படுத்தப்பட வேண்டும். அதே நேரத்தில், மற்ற மொழிகளுக்கும் மத்திய அரசு உரிய முக்கியத்துவம் அளிக்கும்'' என வார்த்தைக்கு வார்த்தை இந்தி... இந்தி என மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவித்தார்.

கருணாநிதி முதலாவதாகத் தன் எதிர்ப்பைத் தெரிவித்தார். அதன் பிறகு முதல்வர் ஜெயலலிதா, வைகோ, ராமதாஸ் ஆகியோரின் காட்டமான அறிக்கைகள் வெளியாகின.

மொழி திணிப்பும் வேண்டாம்... வெறுப்பும் வேண்டாம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தமிழகத்தில் இருந்துதான் இத்தகைய அறிக்கை வெளிவரும் என்று பார்த்தால், வட மாநிலத் தலைவர்களும் இந்த அறிவிப்பைக் கடுமையாக எதிர்த்தார்கள். காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, ''இந்தி மொழியைத் திணிக்கும் முயற்சியை ஏற்க முடியாது'' என்றார். உ.பி முன்னாள் முதல்வர் மாயாவதி, ''எங்கள் கட்சி இந்திக்கு எதிரானது அல்ல. ஆனால், இந்தி மொழியைத் திணிக்கும் நடவடிக்கையை நாங்கள் எதிர்க்கிறோம்'' என்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்தத் தலைவர் பிருந்தா காரத், ''சமூக வலைதளங்களில் ஆங்கிலத்தைப் பயன்படுத்துவதுதான் சரியானது'' என்றார்.

உடனே மத்திய அரசு, ''சமூக வலைதளங்களில் இந்தி மொழி தொடர்பு மொழியாக, இந்தி பேசும் மாநிலங்களில் மட்டுமே பயன்படுத்தப்படும். இந்தி பேசாத மாநிலங்களில் எந்த மாற்றமும் இருக்காது'' என்று சொல்லியிருக்கிறார்கள். மீண்டும் இந்தி எதிர்ப்புப் போராட்டம் வேகம் எடுக்கப்படும் சூழ்நிலையை இந்தச் சிறு அறிவிப்பு வெளிப்படுத்தி உள்ளது. இது பற்றி பல்வேறு தரப்பினரிடமும் பேசினோம்.

மொழி திணிப்பும் வேண்டாம்... வெறுப்பும் வேண்டாம்!

தமிழிசை சௌந்தரராஜன் (பி.ஜே.பி தேசியச் செயலாளர்):

''நாம் தமிழர்கள். தமிழ் பேசுகிறோம். இதை இன்னும் அதிகமாக, நீதி மன்றங்களில், வலைதளங்களில், அரசாங்க அலுவலகத்தில் தமிழைப் பேச, எழுத வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும் என்று நினைக்கிறோம். அதேபோல்தான் இந்தி பேசும் மாநிலங்களில், இந்தி பேசும் மக்களும் நினைக்கிறார்கள். இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட மாநிலங்களில் இந்தி மொழியைப் பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தின் காரணமாக இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். மற்ற மாநில மொழிகளின் மீது ஆதிக்கம் செய்ய வேண்டும் என்பது இதன் நோக்கம் அல்ல.

தமிழகத்தில்கூட அரசாங்கப் பள்ளிகளில் கரும்பலகையில் தமிழில் எழுத வேண்டும் என்று சொன்னோம். நாம் செய்வது, தமிழை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்தான். நம் மாநிலத்தில் தமிழை பலப்படுத்துவதுபோலவே, இந்தி பேசும் மாநிலங்களில் ஆங்கிலம் அதிகம் ஆவதைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த அறிவிப்பு செய்யப்பட்டது. இதனை சிலர் தவறாகப் புரிந்துகொண்டு, திரித்து வெளியிட்டுவிட்டார்கள். இதுகுறித்து பிரதமர் மோடி அலுவலகத்தில் இருந்து தெளிவாக விளக்கியிருக்கிறார்கள். இனியாவது நம் அரசியல்வாதிகள், அரசியல் எது, அவசியம் எது என்று பார்த்து அரசியல் செய்ய வேண்டுமே தவிர, ஒரு சின்ன அறிவிப்பு வந்த உடனே கத்தி கூப்பாடு போடுவது சரியல்ல.''

மொழி திணிப்பும் வேண்டாம்... வெறுப்பும் வேண்டாம்!

ஜெயபிரகாஷ் காந்தி (கல்வியாளர்):

''இந்தியாவைப் பொறுத்தவரைக்கும் இந்தியிலும் ஆங்கிலத்திலும்தான் பெரும்பாலும் தேர்வு நடக்கிறது. ஆங்கில மொழி எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு இந்தி மொழியும் அவசியம்தான். நல்ல ஆங்கில அறிவும், இந்தி அறிவும் இருக்க வேண்டும் என்றுதான் இப்போது பன்னாட்டு கம்பெனிகள் எதிர்பார்க்கின்றன.  இந்தி தெரிந்தவர்களுக்குத்தான் தமிழ்நாட்டிலும் இந்திய அளவிலும் வேலைவாய்ப்பில் முக்கியத்துவம் கொடுக்கப் படுகிறது. சென்னையில் மெட்ரோ ப்ராஜக்ட் நடந்துகொண்டிருக்கிறது. அதில் வேலை செய்பவர்கள் பெரும்பாலும் வட மாநிலத்தவர்கள்தான். அவர்களிடம் வேலை வாங்க இந்தி தெரிந்திருப்பது அவசியம். என்னதான் பல்வேறு திறமைகள் இருந்தாலும், பல்வேறு மொழிகள் தெரியாததால் வேலை கிடைக்காமல் போவதற்கும் இப்போது உள்ள சூழலில் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. அந்தந்த மாநில மொழிகளுடன், ஆங்கிலமும் இந்தியும் கற்றுதர வேண்டும். அப்போதுதான் எதிர்கால மாணவர்களுக்கு வாழ்க்கை வளமாகும்.''

பேராசிரியர் சுப.வீரபாண்டியன் (திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை):

மொழி திணிப்பும் வேண்டாம்... வெறுப்பும் வேண்டாம்!

''தொடர் வண்டி பயணக் கட்டண உயர்வு, வரவிருக்கும் சிலிண்டர் எரிவாயு உயர்வு... இப்படி மக்களுக்கு மத்திய அரசு கொடுக்கும் கசப்பு மருந்துகளை மறைப்பதற்கும், மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காகவும் இந்தித் திணிப்பு போன்றவற்றை கொண்டுவர முயற்சிக்கிறது. இந்தித் திணிப்பை ஒருநாளும் தமிழகம் ஏற்றுக்கொள்ளாது. இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்டு இருக்கும் 22 மொழிகளையும் அலுவல் மொழிகளாக ஆக்க வேண்டும் என்பதுதான் அனைவரது கோரிக்கையும். இதை விட்டுவிட்டு தேவையில்லாத, அவசியம் இல்லாத அறிவிப்பை வெளியிட்டு மக்களை திசைதிருப்ப வேண்டாம்.''

மொழி திணிப்பும் வேண்டாம்... வெறுப்பும் வேண்டாம்!

தியாகு (தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்):

''காங்கிரஸ் அரசாங்கம் கடைப்பிடித்த அதே இந்தித் திணிப்பு கொள்கையை, மேலும் தீவிரப்படுத்தத்தான் பி.ஜே.பி வந்திருக்கிறது. முக்கியமான அமைச்சர்கள் ஆர்.எஸ்.எஸ் தூண்டுதல் பேரில் சமஸ்கிருதத்தில் பதவி பிரமாணம் எடுத்து இருக்கிறார்கள். வெளிநாடுகளுக்குச் சென்றாலும் இந்தியில்தான் பேசுவேன் என்று மோடி கூறியிருப்பதும், இப்போது வலைதளங்களில் இந்தியைத் திணிப்பதும், உலகில் 'இந்து’, 'இந்தி’, 'இந்தியா’ என்ற தோற்றத்தை மோடி நிலைநாட்ட விரும்புகிறார் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. மோடியின் இந்த நடவடிக்கை தமிழுக்கு மட்டும் அல்ல; இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய மொழிகளுக்குமே எதிரானது. இந்திக்கும் சமஸ்கிருதத்துக்கும் மட்டுமே சாதகமானது. இதை தமிழகம் அனுமதிக்காது என்று நம்புகிறேன். ஒரு காலத்தில் காந்தி என்ற குஜராத்தியர் பிரிட்டனுக்கு எதிராகப் போராடி இந்தியர் என்ற உணர்வை உருவாக்கினார். வல்லபபாய் பட்டேல் என்ற குஜராத்தியர் சாம, பேத, தான, தண்டங்களைப் பயன்படுத்தி சமஸ்தானங்களை இணைத்து ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கினார். இப்போது மோடி என்ற குஜராத்தியர், இந்தித் திணிப்பின் வாயிலாக இந்தியாவை உடைக்க முயல்வதாகத் தெரிகிறது. ஒரு மொழி என்றால், இந்தியா பல நாடுகளாக உடைந்துபோகும் என்று எச்சரிக்கிறேன். பல மொழிகள் என்றால் ஒரு நாடு. ஒரு மொழி மட்டுமே என்றால், பல நாடுகள் என்ற நிலை உருவாகலாம்.''

மொழி திணிப்பும் வேண்டாம்... வெறுப்பும் வேண்டாம்!

எழுத்தாளர் அ.மார்க்ஸ்:

''இந்திக்கு மட்டும் தனி முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை. மக்களை ஒன்றுபடுத்துவதற்கு பதிலாக, பிரிப்பதற்கு உண்டான வழியைத்தான் மோடி அரசாங்கம் செய்கிறது. வெறும் வலைதளங்களில் மட்டும் இந்தியைப் பயன்படுத்த வேண்டும் என்று அவர்கள் சொல்லவில்லை. அவர் பதவியேற்ற அடுத்த நாளிலேயே ஓர் உத்தரவு போட்டார்கள். உயர் அதிகாரிகள் அனைவரும் இந்தியில்தான் பேச வேண்டும். எழுத வேண்டும்; குறிப்புகள் எடுக்க வேண்டும். யார் அதிக அளவில் இந்தியைப் பயன்படுத்தி இருக்கிறார்களோ அவர்களுக்கு ரொக்கப் பணப் பரிசு வழங்கப்படும் என்று சொன்னார்கள். இதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஆணை பிறப்பித்தும் இருக்கிறார்கள். இதன்மூலம் இந்தியைப் பிரதானப்படுத்த வேண்டும் என்பதே அவர்களது நோக்கம். இந்தியை மையப்படுத்தி, மற்ற மொழிகளை மெள்ள மெள்ள மறைப்பது அவர்கள் உள்நோக்கமாக இருக்கிறது. அந்த நோக்கத்தின் வெளிப்பாடுதான் இந்த அறிவிப்பு. இதை ஒருபோதும் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.''

மொழி திணிப்பும் வேண்டாம்... வெறுப்பும் வேண்டாம்!

கோபண்ணா (தமிழ்நாடு காங்கிரஸ்):

''இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி ஆட்சி மொழி இந்திதான். இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலம் துணை ஆட்சி மொழியாக இருக்கும். இதுதான் சட்டம். இதனை மாற்ற முடியாது. மாற்றக் கூடாது. அனைத்து அலுவலகங்களிலும் தினமும் ஒரு இந்தி வார்த்தையை எழுதிப் போடும் பழக்கம் இன்னும் இருக்கிறது. இதனை நாம் தடுக்க முடியாது. அதே நேரத்தில் உ.பி.யில் இருந்து தமிழக அரசுக்கு ஒரு கடிதம் வருகிறது என்றால் இந்தி மொழியில் மட்டுமல்ல, அதன் ஆங்கில மொழிபெயர்ப்பும் வைக்க வேண்டும். அந்த உரிமை இந்தி பேசாத மக்கள் வாழும் மாநிலத்துக்கு உண்டு.

எந்த மொழியையும் திணிக்கவும் கூடாது. அதே நேரத்தில் எந்த மொழியையும் வெறுக்கவும் கூடாது. இந்தி மொழியை படிக்க தமிழக மாணவர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். அதற்கு தமிழக அரசியல்வாதிகள் தடையாக இருக்கக் கூடாது.''

- நா.சிபிச்சக்கரவர்த்தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism