Published:Updated:

எஃப்.ஐ.ஆர் போட்டதும் தவறு... குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததும் தவறு!

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தரப்பு வாதங்கள்

எஃப்.ஐ.ஆர் போட்டதும் தவறு... குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததும் தவறு!

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தரப்பு வாதங்கள்

Published:Updated:

''ஜெயலலிதா மீது போடப்பட்ட எஃப்.ஐ.ஆரும், தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையும் சட்ட விதிமுறைகள் மீறி தவறாகப் போடப்பட்டிருக்கின்றன. அதனால், இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்'' என்று, இந்திய நீதிமன்றங்களில் வழங்கப்பட்ட 35-க்கும் மேற்பட்ட வழக்குகளின் தீர்ப்புகளை முன்னுதாரணமாக சுட்டிக்காட்டி வாதிட்டு பெங்களூரில் நடைபெற்று வரும் சொத்துக் குவிப்பு வழக்கில் திருப்புமுனையை ஏற்படுத்தினார் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் குமார்.  

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தரப்பின் இறுதி வாதம் நடைபெற்று வருகிறது. இந்த

எஃப்.ஐ.ஆர் போட்டதும் தவறு... குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததும் தவறு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வாதத்தின் இரண்டாவது நாளான கடந்த 20-ம் தேதி காலை 11 மணிக்கு நீதிமன்றம் தொடங்கியது. அ.தி.மு.க வழக்கறிஞர் அணிச் செயலாளர் நவநீதகிருஷ்ணனும் வந்திருந்தார்.ஜெயலலிதாவின் வழக்கறிஞர் குமார் பொறுமையாகவும் நிதானமாகவும் தன் வாதத்தை அடுக்கினார். அமைதியாக நீதிபதி குன்ஹா கேட்டுக்கொண்டிருந்தார்.

ஜெயலலிதா வழக்கறிஞர் குமாரின் வாதத்தில் இருந்து...

''முதன்முதலில் சுப்பிரமணியன் சுவாமி தான் இந்தப் புகாரை எழுப்பினார். 21.6.1996-ல் சென்னை முதன்மை நீதிமன்றத்தில், வருமானத்துக்கு அதிகமாக பல வங்கிகளில் அக்கவுன்ட்களைத் தொடங்கி சொத்துகள் வாங்கப்பட்டிருப்பதாக மனு தாக்கல் செய்கிறார். அந்த மனு இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் 200-ன் கீழ் புகாராகப் பதிவுசெய்யப்படுகிறது. அந்தப் புகாரை சென்னை முதன்மை மாவட்ட நீதிபதி ராமமூர்த்தி விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, அன்று மதியமே சுப்பிரமணியன் சுவாமியிடம் ஸ்டேட்மென்ட் வாங்கி சட்டப்பிரிவு 202 சி.ஆர்.பி.சி-யின் கீழ் வழக்குப் பதிவுசெய்து, சென்னை லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரியான லத்திகா சரண் விசாரிக்க வேண்டும் என ஆணையிடுகிறார்.

ஏ.டி.எஸ்.பி-யாக இருந்த நல்லம நாயுடுவையும் சேர்த்து 15 பேர் கொண்ட  டீமை உருவாக்கிய லத்திகா சரண், விசாரணையைத் தொடங்குகிறார்கள். அரசு தரப்பு சாட்சியங்களாக 300 பேரிடம் விசாரணை நடத்தி பல ஆவணங்களைக் கைப்பற்றுகிறார்கள். கோர்ட்டில் நல்லம நாயுடு பதில் மனு தாக்கல் செய்யும்போது நான்கு மாதங்களில் விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்வதாகச் சொல்கிறார்.

எஃப்.ஐ.ஆர் போட்டதும் தவறு... குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததும் தவறு!

இதற்கிடையில் அன்றைய ஆளுங்கட்சியாக இருந்த தி.மு.க, நேரடியாக ஐ.பி.எஸ் படிக்காத, ஐ.ஜி-யாக இருந்த வி.சி.பெருமாளை லஞ்ச ஒழிப்புத் துறையின் டி.ஐ.ஜி-யாக நியமிக்கிறது. அவர் தி.மு.க-வின் உத்தரவுப்படி 202 சி.ஆர்.பி.சி., வழக்கு நிலுவையில் இருக்கும்போதே சட்டத்துக்குப் புறம்பாக தானே புகார்தாரராக மாறி ஒரு புகாரை தனக்கே கொடுத்துக்கொண்டு, தானே அதை பதிவும் செய்து இந்திய நீதித் துறையிலேயே இதுவரை நடைபெறாத ஒரு வினோதத்தைப் புரிந்துள்ளார். அதனால் வி.சி.பெருமாள் 18.9.1996-ல் ஜெயலலிதா மீது பதிவுசெய்த எஃப்.ஐ.ஆர் தவறானதும், சட்ட விரோதமானதும் ஆகும். நீதியரசர் சதாசிவம் தலைமை நீதிபதியாக இருந்தபோது உச்ச நீதிமன்ற பெஞ்ச், லலித்குமார் வழக்கில் இதேபோன்று எஃப்.ஐ.ஆர் போட்டதைத் தள்ளுபடி செய்திருக்கிறது.

ஏ.டி.எஸ்.பி-யாக இருக்கும் நல்லம நாயுடுவை இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக நியமிக்கிறார் வி.சி.பெருமாள். அவர் இந்த வழக்கை சட்டத்துக்குப் புறம்பாக ஜெயலலிதாவிடம் விசாரிக்கிறார். சசிகலா, சுதாகரன், இளவரசி என்று மூன்று பேரை கூடுதல் குற்றவாளிகளாகச் சேர்த்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கிறார். ஒரு வழக்கில் கூடுதல் குற்றவாளிகளைச் சேர்க்க வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இதில் 1,074 சாட்சிகளிடம் விசாரித்ததாகப் பதிவுசெய்திருக்கிறார்கள். இதில், ஏற்கெனவே 202 சி.ஆர்.பி.சி வழக்கில் சாட்சியாக உள்ள 300 பேரையும் விசாரிக்காமல் சேர்த்துள்ளார்கள். விசாரணை செய்யாமலே, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதனால், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததும் தவறு.

ஊழல் தடுப்புச் சட்டம் 17, 18-ன்படி நல்லம நாயுடுக்கும், கூடுதல் பொறுப்பாளர்களுக்கும் புலன் விசாரணை செய்ய கொடுக்கப்பட்ட பவர், சட்ட விதிமுறைகளைப் பின்பற்றாமல் வழங்கப்பட்டு, அவர்கள் சட்டத்துக்குப் புறம்பாக புலன் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்திருக்கிறார்கள்'' என்று தனது வாதங்களை சரளமாக குமார் அடுக்கினார்.  

அப்போது குறுக்கிட்ட நீதிபதி குன்ஹா, ''சட்டப்படிதான் நல்லமநாயுடுக்கு பவர் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதற்கான ஆவணங்கள் இருக்கிறதே!'' என்றார்.

நல்லம நாயுடுக்கு புலன் விசாரணை செய்ய அதிகாரம் கொடுக்கப்பட்ட ஆர்டர் காப்பியைக் காட்டி பேசிய ஜெயலலிதாவின் வழக்கறிஞர் குமார், ''ஊழல் தடுப்புச் சட்டம் 17-ன் படி இன்னொருவர் இந்த வழக்கை புலன் விசாரணை செய்ய பவர் கொடுக்க வேண்டும் என்றால், அவருடைய பெயர், பதவி, விலாசம் அனைத்தையும் விளக்க உரையிலேயே அச்சிட வேண்டும். ஆனால், அப்படிச் செய்யாமல் பொத்தாம்பொதுவாக எழுதி கீழே, டு என்று அவருடைய பெயரை போட்டிருக்கிறார்கள். இதனால் இந்த புலன் விசாரணை செய்ய பவர் கொடுத்ததும் செல்லாது.

ஆகவே இந்த வழக்கில் எஃப்.ஐ.ஆர் போட்டதும் தவறு. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததும் தவறு. இந்த வழக்கை புலன் விசாரணை செய்ய பவர் கொடுத்ததும் செல்லாது. எனவே, கனம் நீதிபதி அவர்கள் வழக்கை விசாரணை இன்றி தள்ளுபடி செய்ய வேண்டும்'' என்று தனது முதல்கட்ட வாதங்களை வைத்தார்.

விறுவிறு வாதங்கள் தொடர்கின்றன!

- வீ.கே.ரமேஷ்

படங்கள்: ரமேஷ் கந்தசாமி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism