Published:Updated:

'நல்லதோ கெட்டதோ... இதுதான் உண்மையானது!'

புதிர் போடும் குஷ்பு

'நல்லதோ கெட்டதோ... இதுதான் உண்மையானது!'

புதிர் போடும் குஷ்பு

Published:Updated:

'நான் தேர்தெடுத்த பாதையும் பயணமும் தாங்க இயலாத மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது’ என்ற கடிதத்தை அனுப்பி தி.மு.க-வில் இருந்து விலகுவதாக அறிவித்தார் குஷ்பு. அதன் பிறகு செல்போன் சுவிட்ச்டு ஆஃப். எங்கே இருக்கிறார்... என்ன செய்கிறார் என்ற எந்த விவரமும் யாருக்கும் தெரியவில்லை. ஆனால், தனது ட்விட்டர் பக்கத்தில் குஷ்பு சில மணி நேரங்களுக்கு ஒருமுறை ஏதாவது எழுதியபடியே இருக்கிறார்.

ராஜினாமா கடிதம் கொடுத்த 16-ம் தேதி அன்று இரவு குஷ்பு எழுதியது இதுதான்... 'எது நடந்தாலும் இனி கவலைப்படப்போவது இல்லை. சந்தோஷம் மட்டுமே இனி நிறைந்திருக்கும். நிம்மதியாக தூங்கப்போகிறேன்!’

அடுத்தடுத்து குஷ்பு ட்வீட் செய்தவைகள் ஒவ்வொன்றும் ஏதோ ஒன்றை மறைமுகமாகச் சொல்வதாகவே இருக்கின்றன. அதில் இருந்து...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'நல்லதோ கெட்டதோ... இதுதான் உண்மையானது!'

• இந்தக் காலைப் பொழுது புதிதாக இருக்கிறது. மென்மையானப் பூக்களை நிரப்பி செய்யப்படும் பொக்கேவுக்கு மேல் இருக்கும் கவர், ஈட்டி குத்துவதைப்போல் இருக்கும். என்னைப் பொறுத்தவரை பூவோ, ஈட்டியோ... இரண்டையும் ஒரே மாதிரிதான் ஏற்றுக்கொள்வேன்!

• தரையில் விழுந்து புரண்டு சிரிக்க வேண்டும்போல இருக்கிறது. வேலை வெட்டி இல்லை என்றால் பேயைப்போல தனியாக உட்கார்ந்து எதையாவது யோசிக்க வேண்டும் என்றுதான் தோன்றும். நான் நிறைய வேலைகளை செய்துகொண்டிருந்தேன். இப்போது, அதில் ஒன்றை மட்டும் விட்டு விலகியிருக்கிறேன்!

• இன்னோர் அரசியல் கட்சிக்குப் போவது பற்றி நான் நினைக்கவும் இல்லை. நான் போகவும் மாட்டேன். சிலர் வெள்ளையாக பேப்பர் இருக்கிறது என்பதற்காக, அதில் ஏதோ கிறுக்கி வருகிறார்கள்.

• இன்னோர் அழகான நாள் வருகிறது. அந்த நாள் புதிய சந்தோஷத்தையும் புதிய வாழ்க்கையையும் தைரியத்தையும் எனக்கு நிறைய கொடுக்கும். நான் எதையும் ஜெயிப்பேன்!

• சில நேரங்களில் நான் யோசிக்க வேண்டியிருக்கிறது. யாருக்காக, யாரைத் திருப்திபடுத்த இப்படி எழுதுகிறார்கள்?

• நல்லதோ கெட்டதோ... இதுதான் உண்மையானது.

• இதுவரை என் மனத்தில் இருந்ததைப் பேசினேன். இனியும் அப்படித்தான் பேசுவேன். இனி என் இதயத்துக்குப் பக்கத்தில் இருக்கும் குழந்தைகளுக்குத்தான் முதலில் முக்கியத்துவம் கொடுப்பேன்!

• வாழ்க்கை மிகவும் அன்பானது. அந்தப் பயணத்தில் ஏற்ற இறக்கம் என்பது இருக்கத்தான் செய்யும். இனி என்ன நடந்தாலும் எப்போதும் நான் சிரித்துக்கொண்டே சந்தோஷமாக இருப்பேன்.

• என்னுடைய சாதியைப் பற்றி யாரும் பேச வேண்டாம். நான் ஒரு இந்தியர் என்று சொல்வதில் மட்டுமே பெருமைப்படுகிறேன்.

• பாராட்டுவதும் தவறுகளைச் சுட்டிக்காட்டி விமர்சனம் செய்வதும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போன்றது. இரண்டையுமே சிரிப்புடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். துரதிருஷ்டவசமாக சிலரோ உண்மையின் மீது பொய்யான விமர்சனங்களை வைத்து குழப்புகிறார்கள்.

• மொழி என்பது எதற்கும் தடை இல்லை. புதையலைப்போல குவிந்திருக்கும் மொழிகளில் ஒரு மொழியை மட்டும் கட்டாயப்படுத்த தேவை இல்லை.

• இதுவரை இப்படி ஒரு நல்ல இசையை (Rain Forest) நான் கேட்டது இல்லை. இந்த உலகில் உள்ள இசைகளிலேயே இதுதான் சிறந்த இசையாக இருக்கும் என நினைக்கிறேன்.

• உங்களுக்குள் இருக்கும் அன்பையே நீங்கள் உணராதபோது மற்றவர்களை எப்படி நேசிக்க முடியும்? உங்களுக்கு அன்பு தேவை எனில், அதை உணரத் தொடங்குங்கள். அதை எப்படி முட்டாள்தனம் என்று சொல்ல முடியும்? அன்பை நான் முழுமையாக உணர்ந்திருக்கிறேன்.

• சில நேரங்களில் வாழ்க்கை நம்மை வேரோடு உலுக்கிப் பிடுங்கி வேறு இடத்தில் நட்டுவிடும். அந்த இடத்திலும் அது வளரக் கூடியதாகவும், அந்த இடத்துக்கு அது தேவையானதாகவும் இருக்கும். என் வாழ்க்கையும் அப்படித்தான் இருக்கிறது.

-இப்படி குஷ்புவின் வார்த்தைகள் ஒவ்வொன்றிலும் ஏதோ சொல்ல முடியாத சோகமும் புதிரும்  இருப்பதாகவே இருக்கிறது. குஷ்பு மௌனம் கலைத்தால்தான் புதிர்களுக்கு விடை கிடைக்கும்!

- கே.ராஜாதிருவேங்கடம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism