Published:Updated:

“அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க. தொண்டர்கள் மது குடிப்பதை நிறுத்தச் சொல்லுங்கள்!

ஜோ.ஸ்டாலின், ஓவியம்: ஹாசிப்கான், படங்கள்: வீ.நாகமணி

நாடாளுமன்றத் தேர்தலில் மிகப் பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா.பாண்டியனின் இப்போதைய மனநிலை என்ன?

ஸ்பெயின் - நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை கால்பந்து போட்டியை ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருந்தவர், ஸ்பெயினுக்கு எதிராக நெதர்லாந்து அடித்த ஐந்து கோல்கள் பற்றி ஏகமாகச் சிலாகித்தார். பிறகு, நிதானமாக ஒவ்வொரு கேள்வியையும் எதிர்கொண்டு ஆழமாகப் பதில் அளித்தார்...

“அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க. தொண்டர்கள் மது குடிப்பதை நிறுத்தச் சொல்லுங்கள்!

''தேசிய அளவில் கம்யூனிஸ்ட்களின் வீழ்ச்சிக்குக் காரணம் என்ன?''

''தவறு நடந்திருக்கிறது என்பதை அனைவரும் புரிந்துகொண்டுள்ளோம். கட்சிக்குள் அது பற்றிய தீவிர விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. காரணங்களை விரிவாக விவாதிக்க, டெல்லியில் கூடுகிறோம். இந்தியாவில், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஒரே கொள்கைக்காகத்தான் போராடுகின்றன; இருவரின் குரல்களும் ஒன்றாகத்தான் உள்ளன. ஆனால், இருவரும் ஒரே கொடியை கையில் ஏந்த முடியவில்லை. தற்போது, அப்படி ஏந்த வேண்டும் என்ற எண்ணமும் கோரிக்கைகளும் கட்சி அணிகள் மத்தியில் வலுப்பெற்றுள்ளன.(சற்று யோசிக்கிறார்) இருந்தாலும், டெல்லி கூட்டத்தில் விவாதித்த பிறகே, இது தொடர்பாக விரிவாகப் பேச முடியும்!''

''தேசிய அளவில் கட்சி எந்தெந்த விஷயங்களில், தன் பார்வையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?''

''தனியார்மயம், தாராளமயம், புதிய பொருளாதாரக் கொள்கைகள் என இன்று நடைமுறையில் உள்ள பொருளாதாரக் கொள்கைகளை மாநிலக் கட்சிகள், தேசியக் கட்சிகள் என அனைவரும் ஏற்றுக்கொண்டுவிட்டனர், கம்யூனிஸ்ட்களைத் தவிர. ஆனால், சீன கம்யூனிஸ்ட் கட்சி இந்தப் பொருளாதாரக் கொள்கைகளின் அடிப்படையில்தான் செயல்படுகிறது. (அழுத்திச் சொல்கிறார்). எனவே, இது தொடர்பான மறுபரிசீலனை, இந்தியாவிலுள்ள இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தேவை. அதற்காக முற்றிலும் அந்தக் கொள்கைகளை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது இல்லை. இந்தியாவுக்கான புதிய பொருளாதாரக் கொள்கைகளையும் மாற்றுத் திட்டங்களையும் உருவாக்கி, அவற்றை ஏற்றுக்கொள்ளும் அனைத்து சக்திகளையும் ஒன்றிணைத்து, மக்களிடம் அதைக் கொண்டுசெல்ல வேண்டும். இந்தப் பணியில் கம்யூனிஸ்ட்கள் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும்!''

'' 'இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் அ.தி.மு.க-வின் கொள்கைப் பரப்புச் செயலாளராகவே செயல்படுகிறார்’ என்ற விமர்சனம் தொடர்ந்து ஒலிக்கிறது. இது தொடர்பாக நீங்கள் இதுவரை தெளிவான விளக்கம் அளிக்கவில்லையே?''

''நான் பலமுறை இந்த விமர்சனத்துக்குப் பதில் சொல்லி இருக்கிறேன். ஆனால், யாருக்கும் அதைப் பிரசுரிப்பதில் விருப்பம் இல்லை. அதற்கு நான் என்ன செய்ய முடியும்?''

''உங்கள் விளக்கம் என்ன?''

''முதலமைச்சர் ஜெயலலிதாவின் செயல்பாடுகளில் பாராட்டும் அம்சங்கள் இருக்கும்போது நான் பாராட்டுகிறேன். எதிர்க்கவேண்டிய நேரத்தில் எதிர்க்கவும் செய்கிறேன். நான் அ.தி.மு.க-வுக்கு ஆதரவாகத் தொடர்ந்து பேசுகிறேன் என்று சொல்பவர்களிடம் கேட்கிறேன்... காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை, மத்திய அரசு இதழில் வெளியிட வேண்டும் என்பதை இன்றைய அ.தி.மு.க அரசுதான் நீதிமன்றத்தில் வழக்காடிப் பெற்றது. அதைத் தவறு என்று யாரேனும் விமர்சிக்க முடியுமா? கருணாநிதி 'அது தவறு’ என்று சொல்வாரா? மத்திய அமைச்சரவையில் தொடர்ந்து 19 ஆண்டுகளாக இடம்பெற்றிருந்த தி.மு.க., அதற்காக என்ன உருப்படியான நடவடிக்கை எடுத்தது? ஆனால், அ.தி.மு.க எடுத்தது. அதனால் நான் தி.மு.க-வைத் திட்டினேன்; அ.தி.மு.க-வைப் பாராட்டினேன். ஈழத் தமிழர் பிரச்னை, தமிழக மீனவர் பிரச்னை தொடர்பான சட்டமன்றத் தீர்மானங்கள், 20 கிலோ இலவச அரிசி... என தமிழக நலனுக்காக முதல்வர் செய்துகொண்டிருக்கும் பணிகளைப் பாராட்டுவதில் என்ன தவறு? நான் பச்சையாகவே சொல்கிறேனே... 'அம்மா உணவகம்’ இட்லி, பொங்கல் வழங்குகிறார்களே, அது இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டம். அதை நான் பாராட்டத்தானே முடியும்! அதேசமயம், சேது சமுத்திரத் திட்டத்துக்கு எதிரான கருத்துகளை முதலமைச்சர் பேசியபோது அதைக் கண்டித்து முதல் அறிக்கை கொடுத்தது நான்தான். சமச்சீர் கல்வியை எதிர்த்து தமிழக அரசு நீதிமன்றம் போனபோது அதை நான் கண்டிக்கவும் செய்தேன். நன்மை செய்யும்போது பாராட்டுவது பண்பு. எதிர்க்கட்சி என்ற ஒரே காரணத்துக்காக ஆளும் கட்சி செய்யும் நல்ல விஷயங்களைக்கூட எதிர்ப்பது பண்பற்றச் செயல். நான் என்னுடைய பண்பை இழக்கத் தயாராக இல்லை!''

''மதுக் கடைகளால், தமிழகம் மிகப் பெரிய பாதிப்பை நேரடியாகவும் மறைமுகமாகவும் சந்தித் துக்கொண்டு இருக்கிறது. ஆனால், மதுக் கடைகளை மூட தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதை நீங்கள் கண்டிப்பதாகவும் தெரியவில்லையே?''

''தமிழகத்தில் மதுக் கடைகளைத் திறந்துவிட்டது இன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா அல்ல. அதைச் செய்தது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிதான். தமிழகத்தில் நடைமுறையில் இருந்த மதுவிலக்கை நீக்கி, அவர்தான் மதுக்கடைகளைத் திறந்துவிட்டார். ராஜாஜி எவ்வளவோ மன்றாடிக் கேட்டும், அதைச் சட்டைசெய்யாமல், சட்டசபையில் தீர்மானம் இயற்றி மதுவிலக்கை ரத்து செய்தவர் கருணாநிதி. அன்றைக்கு எதிர்க் கட்சிகளாக இருந்த அனைத்து கட்சிகளும், கம்யூனிஸ்ட்கள் உள்பட, 'தவிர்க்க முடியாத வேதனையான முடிவு’ என்று சொல்லி, அதற்கு ஆதரவு அளிக்கத்தான் செய்தனர்.

“அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க. தொண்டர்கள் மது குடிப்பதை நிறுத்தச் சொல்லுங்கள்!

சினிமா காட்சிகளில் மதுவைக் கையில் வைத்திருப்பதுபோல நடிக்கக்கூட செய்யாத எம்.ஜி.ஆரின் ஆட்சிக்காலத்திலும் மதுக் கடைகள் மூடப்படவில்லை. தற்போது மட்டும் மதுக் கடைகளை தமிழக அரசு மூட வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் நியாயம் இல்லை. இங்கு மூடினால் தமிழக எல்லைப் பகுதிகளாக இருக்கும் கேரளா, ஆந்திரா, கர்நாடகத்தில் கடை விரிப்பார்கள். அதனால் கள்ளச்சாராய சாவுகள்தான் அதிகரிக்கும். இந்தியா முழுக்க மதுக் கடைகளுக்குத் தடை விதிக்கப்பட்டால், அதை நாங்கள் முதல் ஆளாக வரவேற்போம்.

நான் ஒன்று கேட்கிறேனே... தற்போது மதுக் கடைகளை மூடச¢ சொல்பவர்கள், அவரவர் கட்சித் தொண்டர்களை மது அருந்துவதை நிறுத்தச் சொல்லி அறிக்கைவிட வேண்டியதுதானே! அ.தி.மு.க-வுக்கும் தி.மு.க-வுக்கும் தலா ஒரு கோடிக்கும் மேலான எண்ணிக்கையில் தொண்டர்கள் இருக்கிறார்கள். மதுவை ஒழிக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல்கொடுக்கும் பா.ம.க-வுக்கு, சுமார்           75 லட்சம் தொண்டர்கள் இருப்பதாக ராமதாஸ் சொல்கிறார். இவர்கள் எல்லாம் அவர்களுடைய தொண்டர்களை மது அருந்தாமல் தடுத்தாலே, தமிழகத்தில் மது விற்பனை குறைந்துவிடும். அதன் பிறகு அரசாங்கம் கடைகளை மூடித்தானே ஆக வேண்டும். அதை இவர்கள் செய்யத் தயாரா? கேட்டுச் சொல்லுங்கள்!''

''சரி, மின்வெட்டுப் பிரச்னை ஜெயலலிதா ஆட்சியிலும் தொடர்கிறதே... அதிலும் ஜூன் 1-ம் தேதி முதல் மின்வெட்டே இருக்காது என்று முதல்வர் வாக்குறுதி போல சொல்கிறார். ஆனால், அதன் பிறகு மின்வெட்டு அதிகரிக்கத்தானே செய்தது? இதனால் அதிக அளவில் பாதிக்கப்படுவது சாமான்யர்கள்தானே?''

''தமிழ்நாட்டில் ஜூன் 1-ம் தேதி முதல் மின்வெட்டு இருக்காது என்று முதலமைச்சர் அறிவித்த பிறகும், சில இடங்களில் பல மணி நேரமும், பல இடங்களில் சில மணி நேரம் என்று பலவகையாக மின்வெட்டு தொடர்கிறது. ஏன் இன்னும் இந்த நிலை என்று முதலமைச்சரும், அவருடைய அமைச்சர்களும் இன்னும் தெளிவுபடுத்தவில்லை. மின்வாரிய அதிகாரிகளோ மயான அமைதியைக் கடைப்பிடிக்கிறார்கள். நிலைமை இப்படியிருக்க, ஜூன் 1-ம் தேதி முதல் தமிழகத்தில் மின்வெட்டே இருக்காது என்று முதலமைச்சர் எதன் அடிப்படையில் அறிவித்தார், அதில் இருக்கும் நடைமுறைச் சிக்கல் என்ன? இவற்றை தமிழக மக்களுக்கு அரசு தெளிவுபடுத்த வேண்டியது அவசியம்!''

''தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ள பிரதமர் நரேந்திர மோடியின் ஆரம்பகட்டச் செயல்பாடுகள் நம்பிக்கை அளிக்கிறதா?''

'' 'வலுவான ஒரு பிரதமர் நாட்டை ஆண்டால்தான், அண்டை நாடுகள் நம்மிடம் வாலாட்ட மாட்டார்கள்’ என்று நரேந்திர மோடி, இதே சென்னையில் வைத்து பிரசாரக் கூட்டத்தில் பேசினார். ஆனால், இப்போது என்ன நிலவரம்?  நாள்தோறும் தமிழக மீனவர்களுக்கு அடி, உதை, துப்பாக்கித் தோட்டாக்களை இலங்கைக் கடற்படை பரிசளித்துக்கொண்டுதானே இருக்கிறது. முன்பு மீன்களை மட்டும் பிடுங்கிக்கொண்டு போனவர்கள், இப்போது படகுகளையும் பறித்துக்கொண்டு செல்கிறார்கள். தவிரவும், பாகிஸ்தான்காரன் கடந்த வாரத்தில் இருந்து, தொடர்ந்து பீரங்கித் தாக்குதல் நடத்தவும் சுட்டுத் தள்ளவும் தொடங்கிவிட்டான்.

“அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க. தொண்டர்கள் மது குடிப்பதை நிறுத்தச் சொல்லுங்கள்!

மோடி கையில் ஜீபூம்பா மந்திரக்கோல் ஒன்றும் இல்லை என்று நாங்கள் அப்போது சொன்னதையே, இப்போதும் சொல்கிறோம். மாற்றம் என்பது எளிதாக நடந்துவிடாது. அனைவரும் சேர்ந்து கடினமாக உழைத்துதான் மாற்றங்களைக் கொண்டுவர முடியும். தற்போது மோடியை வலுவாக எதிர்க்க எதிர்க்கட்சிகளுக்கு பலம் இல்லை. அவர் தனி மெஜாரிட்டியுடன் இருக்கிறார். மேலும் அம்பானி, அடானி எல்லாம் அவருடைய நண்பர்கள்தானே. எனவே, அவர்களிடம் சொல்லி இந்திய மக்களுக்கு ஐந்து ரூபாயில் பெட்ரோலும் டீசலும் கிடைக்க அவர் வழி செய்வார் என்று நம்புவோம்!''

''கம்யூனிஸ்ட்களுக்கு ஆழமான, அடர்த்தியான வரலாறு இருக்கிறது. ஆனால், சமீபமாக அவர்கள் மீதான விமர்சனங்களே அதிகம். குறிப்பாக இளைஞர்களிடம் கம்யூனிஸ்ட்கள் பற்றி நல்ல அபிப்ராயமே இல்லையோ என்று சமூக ஊடக விவாதங்கள் எண்ண வைக்கின்றன. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

''கம்யூனிஸ்ட்களின் வரலாறு தெரியாதவர்கள்தான் அப்படிப்பட்ட விமர்சனங்களை முன்வைக்கின்றனர். எங்களுடைய தியாக வரலாற்றை மக்களிடம், குறிப்பாக இளைய தலைமுறையினரிடம் முன்வைப்பதில் நாங்களும் சரியாகச் செயல்படவில்லை என்பதை உணர்ந்திருக்கிறோம். அதனாலேயே இதுபோன்ற விமர்சனங்கள் வருகின்றன. கலைத் துறை, சமூக ஊடகங்களில் ஆர்வமாக, வீரியமாகப் பங்கெடுக்காமல்போனது எங்களுக்கு மிகப் பெரிய இழப்பு!''