Published:Updated:

'பால் விலை உயர்வு காலத்தின் கட்டாயம்!'

'பால் விலை உயர்வு காலத்தின் கட்டாயம்!'

பிரீமியம் ஸ்டோரி

ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று கறவை மாடு வளர்ப்பவர்களும், பால்

'பால் விலை உயர்வு காலத்தின் கட்டாயம்!'

விற்பனை விலையை உயர்த்தக் கூடாது என்று ஆவின் பால் வாங்குவோரும் பால் போர் நடத்தாதது மட்டும்தான் குறை. இதற்கிடையில்தான் பால் விலை உயரப்போவதாக செய்திகள் பரவத் தொடங்கியுள்ளது.

என்னதான் நடக்குது?

தமிழ்நாடு பால் உற்பத்தி யாளர்கள் நலச் சங்கத் தலைவர் கே.ஏ.செங்​கோட்டுவேலிடம் பேசினோம். ''மாடுகளுக்கான தீவனங்களின் விலையும் ஆட்களின் கூலியும் கடுமையாக உயர்ந்து வருகிறது. எனவே, ஒரு லிட்டர் பசும்பால் கொள்முதல் விலையை 23 ரூபாயில் இருந்து 30 ரூபாய் ஆகவும், எருமைப்பால் விலையை 31 ரூபாயில் இருந்து 40 ரூபாய் ஆகவும்  உயர்த்தினால் மட்டுமே முறையாக மாடுகளுக்கு தீனி போட்டு பால் கறக்க முடியும். மாட்டுத்தீவனங்கள் வாங்கும்போது கிலோவுக்கு 4 ரூபாய் மானியம் தந்ததை தமிழக அரசு சமீபத்தில் நிறுத்திவிட்டது. அதைத் தொடர வேண்டும். முதல்வர் ஜெயலலிதா, 'இரண்டாம் வெண்மைப் புரட்சிக்கு தமிழகம் தயார்.

'பால் விலை உயர்வு காலத்தின் கட்டாயம்!'

நாள் ஒன்றுக்கு ஆவின் கொள்முதல் இலக்கு ஒரு கோடி லிட்டர் பால்’ என்று அறைகூவல் விடுத்தார். ஆனால், அதற்கு மாறாக ஆவின் பால் கொள்முதல் சமீப காலங்களில் குறைந்து வருகிறது. தனியார் நிறுவனங்களின் பால் கொள்முதல் அதிகரிப்பது ஆவின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல'' என்றார்.

தமிழ்நாடு பால் முகவர்கள் நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.ஏ.பொன்னுசாமியோ, ''சென்னை மற்றும் புறநகரில் நாளன்றுக்கு சுமார் 6.97 லட்சம் லிட்டர் ஆவின் பால் மாதாந்திர அட்டைகள் மூலம் வழங்கப்படுகிறது. இந்த மாதாந்திர அட்டைகளில் 90 சதவிகிதம் வரை ஆவின் முன்னாள், இந்நாள் ஊழியர்களின் உதவியோடு ஹோட்டல்களுக்கு விற்றுவிடுகிறார்கள். இதனால் ஆவினுக்கு ஆண்டுக்கு சுமார் 23 கோடி ரூபாய் முதல் 36 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே, மாதாந்திர அட்டை முறைகேடுகளைத் தடுக்க வேண்டும். ஆவின் பால் விற்பனைக்கு இடைத்தரகர்களுக்கு கொடுக்கும் கமிஷனே ஆண்டுக்கு 10 கோடி ரூபாயைத் தாண்டுகிறது. தனியார் பால் விற்பனை நிறுவனங்களைப் போல, இடைத்தரகர்கள் முறையின்றி மொத்த விநியோகஸ்தர்கள் என்ற முறைக்கு ஆவின் வந்தால், ஆவின் நிறுவனத்துக்கு பாதுகாப்பு முன்வைப்புத் தொகை தரத் தயாராக இருக்கிறோம். இந்தச் சீரமைப்பு நடவடிக்கையால் ஆவினுக்கு ஆண்டுக்கு மொத்தம் 50 கோடி ரூபாய் வரை வருவாய் அதிகரிக்கும். தனியார் பால் நிறுவனங்கள் வைத்துள்ள விலையைவிட ஆவின் பால் விலை லிட்டருக்கு 11 ரூபாய் குறைவாக இருக்கிறது. எனவே, பால் விலை உயர்வு காலத்தின் கட்டாயம்'' என்கிறார்.

சமூக ஆர்வலரும், தேவை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான இளங்கோ, ''பால் கொள்முதல் விலையை உயர்த்துவது பற்றி ஆட்சேபனை இல்லை. அதே நேரத்தில் ஏழை எளிய மக்களுக்கு இயற்கை வழங்கிய சரிவிகித உணவான பாலின் விற்பனை விலையை உயர்த்தக் கூடாது. அதுவும் ஆவின் பால் என்றால் தரமானது; கலப்படம் இருக்காது; பாதுகாப்பானது என்று குழந்தைகளும் நோயாளிகளும் குடிக்கிறார்கள். நாள் ஒன்றுக்கு தமிழ்நாட்டில் ஒரு கோடியே 82 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி ஆகிறது. அதில், வெறும் 21 லட்சம் லிட்டர் பால் விற்பனையை மட்டுமே தமிழக அரசு செய்கிறது. இதற்காக ஒரு அமைச்சரே இருக்கிறார். தனியார் நிறுவனங்கள் ஒரு கோடி லிட்டர் பால் விற்பனை செய்கின்றனர். எனவே, கூடுதல் பால் கொள்முதலுக்கு ஊக்கப்படுத்த வேண்டும். அதற்கு கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும். கூட்டுறவு சங்கங்களுக்கு பால் கொடுக்கும் விவசாயிகளுக்கு குறிப்பிட்ட தொகையை மானியமாகத் தர வேண்டும். ஆவின் தயாரிக்கும் நெய் போன்ற இதர பொருட்களின் விலையை சற்று உயர்த்தி அதன் நஷ்டத்தை சரிகட்டலாம்'' என்கிறார்.

இந்த விவகாரம் பற்றி பால்வளத் துறை அமைச்சர் மாதவரம் மூர்த்தியிடம் கேட்டோம். ''பால் கொள்முதல் விலையை தனியார் நிறுவனங்கள் விலைக்கு இணையாக அரசும் உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை இருக்கிறது. இது தொடர்பான ஆலோசனை நடந்தது. ஆனால், கொள்முதல் விலையை உயர்த்துவது குறித்தோ, விற்பனை விலையை உயர்த்துவது குறித்தோ எந்த முடிவும் எடுக்கவில்லை. இப்போதைக்கு எந்த விலை உயர்வும் இல்லை. எதுவாக இருந்தாலும் அம்மாதான் முடிவெடுப்பார்'' என்றார்.

அது சரி!

- எஸ்.முத்துகிருஷ்ணன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு