Published:Updated:

இந்தத் தீர்ப்பு ஒரு பாடம்!

இந்தத் தீர்ப்பு ஒரு பாடம்!

பிரீமியம் ஸ்டோரி

சர்ச்சைக்குரிய கல்யாணியின் பதவியைப் பறித்துவிட்டது உயர் நீதிமன்றம்!

''மதுரை காமராசர் பல்கலைக்​கழக துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் பொய்யான ஆவணங்​களைத் தந்து வாங்கிய பதவி செல்லாது. அவர் உடனடியாகப் பதவி விலக வேண்டும்'' என்று அதிரடி தீர்ப்பு வழங்கியிருக்கிறது மதுரை உயர் நீதிமன்றம்.

இந்தத் தீர்ப்பு ஒரு பாடம்!

பொய்யான ஆவணங்கள் கொடுத்து பணியில் சேர்ந்தது, கொலை முயற்சி வழக்கு என்று தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வந்த கல்யாணி மதிவாணனுக்கு எதிராகத்தான் இந்தத் தீர்ப்பு. கல்யாணிக்கு எதிராக நீதிமன்றத்துக்குச் சென்ற பேராசிரியர் ஜெயராஜிடம் பேசினோம். ''துணை பேராசிரியராகப் பணியாற்றிய கல்யாணி மதிவாணன், ஆளுங்கட்சி அரசியல் பின்புலத்தைப் பயன்படுத்தி இந்தப் பதவியை விலைக்கு வாங்கிவிட்டார். அவர் வந்த பிறகு முறைகேடுகளின் கூடாரமாகப் பல்கலைக்கழகம் மாறிவிட்டது. இது தாமதமாக வந்த தீர்ப்புதான். இருந்தாலும், உண்மைக்குக் கிடைத்த வெற்றி'' என்று சொன்னார்.

இந்த வழக்கில் கல்யாணி மதிவாணனுக்கு எதிராக வாதாடிய வழக்கறிஞர் லஜபதிராய், 'இந்தப் பணி நியமனத்தில், பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளைப் பின்பற்றத் தேவை இல்லை என்று அவர்கள் விதி இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், துணைவேந்தர் சம்பளம் மட்டும் அதே விதிகளைக் காரணம் காட்டி வாங்கிருக்கிறார். அப்படி என்றால், சம்பளம் மட்டும் அந்த விதிகளின்படி வாங்கலாமா என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தவறு செய்யும் அதிகாரிகளுக்கு இந்தத் தீர்ப்பு ஒரு பாடம்'' என்று சொல்கிறார்.

கல்யாணி மதிவாணனைத் தொடர்பு கொண்டோம். அவர் நமது எந்த அழைப்பையும் ஏற்கவில்லை. அவர் சார்பாகப் பேசியவர்கள், ''அவர் எந்த தவறும் செய்யவில்லை. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் வேலைகளில் தீவிரமாக இருக்கிறார். தன் மீது தவறு இல்லை என்பதை சட்டப்படி நிரூபிப்பார்' என்றார்கள்.

உப்பைத் தின்னாச்சு... தண்ணீர் குடித்துதானே ஆக வேண்டும்!

- சண்.சரவணக்குமார்

படங்கள்: பா.காளிமுத்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு