Published:Updated:

மிஸ்டர் கழுகு: பறிபோகிறது பதவி?

மிஸ்டர் கழுகு: பறிபோகிறது பதவி?

பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு: பறிபோகிறது பதவி?

''கல்தா பரபரப்பைத் தொடர்ந்து டென்ஷன் குறையாமல் இருக்கிறது தி.மு.க.'' - என்ற பீடிகையுடன் செய்திகளைக் கொட்ட ஆரம்பித்தார் கழுகார்.

''தஞ்சை மாவட¢டச் செயலாளர் பொறுப்பில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம் நீக்கப்பட்டதும், அவருக்கு எதிரானவர்கள் ஒன்றுதிரண்டு நன்றி சொல்வதற்காக, சென்னை வந்தார்கள். அறிவாலயம் சென்று ஸ்டாலினைப் பார்த்தார்கள். 'கட்சிக்கு எதிராக யார் செயல்​பட்டாலும் நடவடிக்கை நிச்சயமாக இருக்கும்’ என¢று சொல்லியிருக்கிறார். அதன் பிறகு கருணாநிதியிடம் போயிருக்கிறார்கள். 'பழனி​மாணிக்கத்துக்கு எதிராக இவ்வளவு பேர் இருக்குறீங்களா?’ என்று கிண்டலாகக் கேட்டுள்ளார் கருணாநிதி. 'தஞ்சாவூர் எப்படியா இருக்கு?’ என்பது அவரது அடுத்த கேள்வி. 'சாதியைச் சொல்லி எதுவும் கிளப்புகிறீர்களா?’ என்று கேட்டிருக்கிறார். 'அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை’ என்று பவ்யம் காட்டியிருக்கிறார்கள். அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருவர் மட்டும், 'நான்கூட கள்ளர் சமுதாயத்தைச் சேர்ந்தவன்தான்’ என்று சொன்னதும,¢ அதை உன்னிப்பாக கவனித்தாராம் கருணாநிதி. பழனிமாணிக்கத்தை சாதிரீதியாக நாங்கள் எதிர்க்கவில்லை என்பது இவர்கள் சொன்னதன் சாராம்சம்!''

மிஸ்டர் கழுகு: பறிபோகிறது பதவி?

''இதற்கு பழனிமாணிக்கம் ரியாக்ஷன் என்ன?''

''இதற்கு அடுத்த நாள் பழனி​மாணிக்​கம் தனி ஆளாக அறிவாலயம் சென்ற¤​ருக்கிறார். மிகவும் சங்கடத்​துடனே உள்ளே நுழைந்தவர், முதலில் ஸ்டாலினை பார்க்கத்தான் உள்ளே போயிருக்கிறார். இவர் வந்திருப்பதாக ஸ்டாலினுக்குத் தகவல் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், பார்ப்பதைத் தவிர்த¢த ஸ்டாலின், 'தலைமைக் கழகத்தில் விளக்கத்தைக் கொடுத்துவிட்டுப் போகச் சொல்லுங்கள்’ என்​றாராம். அப்செட்டில் நின்ற பழன¤மாணிக்கம், கோபாலபுரம் வந்து கருணாநிதியைச் சந்தித்துள்ளார். 'வேட்பாளரின் அணுகுமுறை சரியில்லாததுதான¢ தோல்விக்குக் காரணம்’ என்பதை மையமாக வைத்துத் தயாரித்து வைத்திருந்த விளக்க அறிக்கையை, கருணாநிதிய¤டம் சமர்ப்பித்தாராம¢ பழனிமாணிக்கம். 'நான் உங்களுக்கும் கட்சியின் கொள்கைக்கும் என்றும் எதிரானவன் கிடையாது. கட்சியை விட்டு நீக்கினாலும் நான் தி.மு.க-வில்தான் இருப்பேன். நீங்கள் என¢னைத் திரும்ப அழைக்கும் வரை நான் காத்தி​ருப்பேன். அதுவரை சாதாரண தொண்டனாக மீண்டும் கழகப் பணியைத் தொடங்குவேன்’ என்று உருக்கமான கடிதத்தையும் கொடுத்த¤ருக்கிறார் பழனிமாணிக்கம்.''

''கருணாநிதி என்ன சொன்னாராம்?''

''கடிதத்தை வாங்கிக்கொண்ட கருணாநிதியிடம் எந்த ரியாக்ஷனும் இல்லாததால் பெரும் அப்செட்டில் திரும்பியிருக்கிறார் அவர். பழனிமாணிக்கத்தின் இடத்தைப் பிடிக்க, கடும் போட்டி நிலவுகிறது. போட்டி லிஸ்டில், பழனிமாணிக்கத்தால் ஓரங்கட்டப்பட்ட புல்லட் ராமச்சந்திரன், முன¢னாள் எம்.எல்.ஏ-க்கள் மகேஷ் கிருஷ்ணசாமி, துரை.சந்திரசேகர், ஒரத்தநாடு காந்தி ஆகியோர் போட்டி போட்டுக்கொண்டு காய் நகர்த்தி அறிவாலயத்தைச் சுற்றி வருகிறார்களாம்.''

''கே.பி.ராமலிங்கமும் கடிதம் எழுதி பரபரப்பு கிளப்பி வருகிறாரே?''

''கருணாநிதிக்கு, தான் எழுதிய விளக்கக் கடிதத்தை ராசிபுரத்தில் வெளியிட்டார் கே.பி.ராமலிங்கம். இது பத்திரிகைகளுக்கு தரப்பட்டதை ஸ்டாலின் ரசிக்கவில்லை. 'கடந்த 24 ஆண்டுகளில் என்னை உங்கள் பிள்ளையாகக் கருதி மூன்று முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவும், ஒரு முறை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவும் அனுமதித்தீர்கள். நாடாளுமன்ற மக்களவையில் பணியாற்றுவதற்கும், இப்போது 2010 முதல் மாநிலங்களவையில் பணியாற்றுவதற்கும் வாய்ப்பு அளித்தீர்கள். என் வாழ்நாளில் தங்களை நன்றிக்குரியவராகத்தான் பார்க்கிறேன். என் தந்தை இல்லாத நிலையில், தங்களை என் தந்தை இடத்தில் வைத்துதான் வணங்குகிறேன். தங்கள் குடும்பத்தைச் சார்ந்த அனைவரிடமும் பாசத்துடன்தான், தலைவர் குடும்பம் என்ற பக்தியுடன்தான் பழகி வருகிறேன். ஆனால், அதில் உங்கள் பிள்ளைகளில் ஒருவருக்கு என்னைப் பிடிக்கவில்லை என்பதற்காக கட்சியின் அதிகாரத்தைப் பயன்படுத்தி என்னை அவமானப்படுத்துவது எந்த விதத்தில் நியாயம்?’ என்று ஸ்டாலினை 'கருணாநிதியின் பிள்ளை’யாகச் சுருக்கி இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது!''

''பிறகு எப்படி ஸ்டாலின் இதனை விரும்புவார்?''

''கடிதத்தின் சில பகுதிகள் ஸ்டாலினை கடுமையாகத் தாக்குகின்றன. 'கடந்த 10 ஆண்டு காலமாக எனக்கு நமது கட்சியில், அரசியலில் அதிகாரம் படைத்த அந்தப் பிள்ளையால் ஏற்பட்ட அவமானங்களை நீங்கள் ஏன் சரிப்படுத்தவில்லை? அவர் சுற்றுப்பயணம் வரும்போது 2 மணி நேரம் 3 மணி நேரம் ரயிலடியிலும், சாலை ஓரங்களிலும் கால்கடுக்க சால்வையை தூக்கிக்கொண்டு நின்றால், காரில் அமர்ந்துகொண்டு, கூட்டத்தில் சிக்கி தவிக்கும் எங்களைப் பார்த்து ஒரு புன்முறுவல்கூட இல்லாமல், ஏதோ அடிமை ஒருவன் தங்களுக்கு சேவை செய்ய நிற்கிறான் என்பதுபோல பார்ப்பது; முக்கிய நிகழ்வுகளில் எங்கள் பெயரைப் போட வேண்டாம் என்பது; நாங்கள் வகிக்கும் பொறுப்பை கேலி பேசுவது; தான் நிர்வகிக்கும் அணிதான் சிறந்தது என தனக்குத்தானே மார்தட்டி எங்களை தோழர்கள் முன்பே மட்டமாகப் பேசியது... தாங்கள் அறியாததா?’ என்று கேட்டுள்ளார் கே.பி.ராமலிங்கம்.''

''ம்!''

''அத்துடன் முடியவில்லை கடிதம். 'வீரபாண்டியார் சேலம் மாவட்டச் செயலாளராக இருந்த காலம் வரை சேலத்தில் நடந்த அத்தனை போராட்டங்கள், தாங்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சிகள் அது அரசு நிகழ்ச்சிகளாக இருந்தாலும், கழக நிகழ்ச்சியாக இருந்தாலும் எனக்கு உரிய பங்கு அளிக்கப்பட்டிருந்ததை தங்களால் மறுக்க முடியாது. ஆனால், இப்போது ஏற்காடு இடைத்தேர்தலுக்கு ஏன் தேர்தல் பணிக்குழுவில் என் பெயர் சேர்க்கப்படவில்லை என்று அந்த அரசியல் அதிகாரம் படைத்த பிள்ளையிடம் தாங்கள் ஏன் கேட்கவில்லை? நாடாளுமன்றத் தேர்தலில் நியமிக்கப்பட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் பட்டியலில் கிரிமினல் குற்றவாளிகளுக்குக்கூட இடம் அளிக்கப்பட்டிருந்த நிலையில், எனக்கு ஏன் இடம் அளிக்கப்படவில்லை என்று தேர்தலை முன்னின்று நடத்திய அந்த பிள்ளையிடம் தாங்கள் ஏன் கேட்கவில்லை? தலைவர் கலைஞரின் செல்வாக்கு, தியாகம், உழைப்பு இவற்றை கேடயமாகப் பயன்படுத்தி தலைமைக்கு வரத் துடிக்கும் தங்கள் பிள்ளை, தலைவர் கலைஞருக்குத் தொண்டு செய்ய நினைப்பவர்களை அடிமைகளாக நடத்த தாங்கள் அனுமதிக்கலாமா? இவை என் இதயத்தை நொறுங்கச் செய்யும் கேள்விகள்’ என்று முடிகிறது அந்தக் கடிதம். இது ஸ்டாலினை இன்னும் கோபப்படுத்தியதாம்.''

''கே.பி.ராமலிங்கம் ஏன் அதிக உஷ்ணத்துடன் இருக்கிறார்?''

''அவர் வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆதரவாளராக இருந்தார். அதே நேரத்தில், ஸ்டாலினுடனும் அதிக நெருக்கமாகத்தான் இருந்தார். ஒரு தடவை நாமக்கல் பகுதிக்கு ஸ்டாலின் சுற்றுப்பயணம் வருவதாகத் திட்டமிடப்பட்டு இருந்தார். அப்போது சென்னை வந்திருந்த கே.பி.ராமலிங்கம், 'நாமக்கல்லில் தளபதியின் புரோகிராம்கள் என்னென்ன?’ என்று சாதாரணமாகத்தான் கேட்டுள்ளார். அப்போது ஸ்டாலின் என்ன மூடில் இருந்தாரோ, 'ஏன் இதையெல்லாம் நான் உங்களுக்குச் சொல்லணுமா?’ என்று கேட்டுள்ளார். இதனால் டென்ஷன் ஆன கே.பி.ஆர் மனவருத்தம் அடைந்தார். அது அழகிரி மீதான பாசமாக மாறியது என்கிறார்கள். 'எம்.ஜி.ஆர் மறைந்தபோது அவரது உடல் தாங்கிய ராணுவ வாகனத்தில் இருந்து ஜெயலலிதாவை இறக்கிவிட்டவர் இவர். ஜெயலலிதாவை இப்போது வரை கடுமையாக விமர்சித்துப் பேசக்கூடியவர்’ என்றும் சொல்கிறார்கள். இப்படிப்பட்டவர்களை கட்சி இழக்கக் கூடாது என்பது தொண்டர்களின் அபிப்பிராயம்!''

''ஸ்டாலின் அபிப்ராயம் என்ன?''

''ஸ்டாலின் இதுபற்றி எல்லாம் கவலைப்படவில்லை. 'கட்சிக் கட்டுப்பாட்டை மீறினால் யாரை வேண்டுமானாலும் நீக்கத்தான் வேண்டும். மன்னித்து வைத்துக்கொண்டால் இதேபோன்ற ஆட்கள் அதிகம் ஆவார்கள்’ என்பது அவருடைய நினைப்பு. எனவே ஸ்டாலின் ஆதரவாளர்கள் சிலர் இந்த நடவடிக்கையை ஆதரிக்கவும் செய்கிறார்கள். 25-ம் தேதி அன்று இன்னும் சிலர் பெயர் தாங்கிய பட்டியலை கருணாநிதியிடம் ஸ்டாலின் எடுத்துச் சென்றதாகவும், ஆனால் அவர் அவர்களை நீக்க மறுத்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது!''

''இப்படி நீக்கப்பட வேண்டியவர்கள் பட்டியலை யார் முடிவு செய்வது?''

''தி.மு.க உயர்நிலை செயல்திட்டக் குழுவின் தீர்மானத்தின்படி கலசப்பாக்கம் திருவேங்கடம், ஒரத்தநாடு ராஜமாணிக்கம், கல்யாணசுந்தரம், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், தங்கம் தென்னரசு, ஈரோடு சச்சிதானந்தம் ஆகிய ஆறு பேர் கொண்ட குழுவை அமைத்தார்கள். அவர்கள்தான் ஒரு வார காலம் மண்டையைப் போட்டு உடைத்து 35 மாவட்டங்களை 65 ஆக ஆக்கினார்கள். அதன் பிறகு, அந்தக் குழு சார்பில் சில சீர்திருத்தங்களைச் சொன்னார்கள். மூன்று முறைக்கு மேல் யாரும் மாவட்டச் செயலாளர்களாக இருக்கக் கூடாது. மாவட்டச் செயலாளர்கள் தங்களது ஆளுயரப் படங்களை போஸ்டர்களாகப் போடக் கூடாது என்றெல்லாம் அந்த ஆலோசனைப் பட்டியல் மிக நீளம். இந்த நிலையில்தான் நீக்கம் தொடங்கியது!''

''இந்தப் பட்டியலைக் கொடுப்பதும் அந்த ஆறு பேர் குழுதானா?''

''இல்லை என்கிறார்கள் தி.மு.க-வில். 'ஆறு பேர் குழு அதிகாரபூர்வமாக இப்போது இயங்கவும் இல்லை. அதிகாரபூர்வமாக கலைக்கப்படவும் இல்லை. இந்தக் குழுவில் இருக்கக்கூடிய கலசப்பாக்கம் திருவேங்கடம், தங்கம் தென்னரசு ஆகிய இருவர் மட்டும் ரகசியமாகக் கூட்டம் நடத்திக்கொள்கிறார்கள். அதன்படி இந்த நீக்கம் நடக்கிறது’ என்று கட்சிக்குள் பேச்சு இருக்கிறது. 'மாவட்டச் செயலாளர்கள் பரிந்துரை செய்யும் ஆட்கள்தான் அதிகமாக இந்த நீக்கப் பட்டியலில் வருகிறார்கள்’ என்றும் சொல்லப்படுகிறது. 'எந்த நோக்கத்துக்காக இந்தக் குழு உருவாக்கப்பட்டதோ அதனுடைய பயனே குறைந்துபோனதுபோல் ஆகிவிட்டது’ என்றும் சொல்கிறார்கள்!'' என்றபடி தே.மு.தி.க மேட்டருக்குத் தாவிய கழுகார்,

''தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் விரக்தியின் விளிம்பில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது'' என்று ஆரம்பித்தார்.

மிஸ்டர் கழுகு: பறிபோகிறது பதவி?

''இப்போதுதானே, 'உங்களுடன் நான்’ என்று கட்சித் தொண்டர்களைச் சந்திக்கும் உற்சாக நிகழ்ச்சியை நடத்த ஆரம்பித்து உள்ளார் விஜயகாந்த். அதற்குள் என்ன விரக்தி?'' என்றோம்.

''தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சி நிர்வாகிகளுடன் அவர் கலந்து பேசவில்லை என்ற குறைபாடு பலரிடமும் இருந்தது. எனவே முக்கிய நிர்வாகிகளை அழைத்துப் பேசினார். அப்போது சேலம் மாநகர் மாவட்டச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஒரு ஆலோசனை சொன்னார்.

'வானத்தைப்​போல’ படம் ரிலீஸ் ஆனதும் மாவட்டம்தோறும் இருக்கும் ரசிகர்களோடு நின்னு குரூப் போட்டோ எடுத்துகிட்டீங்க. அதுக்குப் பிறகு அவங்க யாரையும் நீங்க சந்திக்கவே இல்லை. அதனாலதான் ரசிகர்களும் சோர்ந்து போய்ட்டாங்க. ரசிகர்கள் எல்லோரையும் நீங்க சந்திக்கணும். அப்போதான் உற்சாகமா வேலை பார்ப்பாங்க!’ என்றதும், 'நிச்சயமா செய்யலாம்!’ என்று விஜயகாந்த் சொன்னார் என்று அப்போதே நான் உமக்குச் சொல்லியிருந்தேன். அதன்படிதான் 'உங்களுடன் நான்’ என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.''

''பரவாயில்லையே!''

''நிகழ்ச்சியை கடந்த 26-ம் தேதி கோவை மாவட்டத்தில் இருந்து தொடங்குவதாகத் திட்டம் வகுத்திருந்தார் விஜயகாந்த். 'நிகழ்ச்சியை எங்கு நடத்துவது? யார் செலவுகளை கவனிப்பது?’ என கேள்வி எழ, 'வேறு எங்கும் நடத்த வேண்டாம். என் தோட்டத்திலேயே நடத்திக்கொள்ளலாம்’ என சொல்லிவிட்டாராம் விஜயகாந்த். இதையடுத்து கோவை மாவட்டம், சூலூரில் உள்ள விஜயகாந்த்துக்கு சொந்தமான ராவுத்தர் தோட்டத்தில் கூட்ட ஏற்பாடு நடந்தது.

'மாவட்டவாரியாக நிர்வாகிகள், தொண்டர்களை விஜயகாந்த் சந்தித்துப் பேசுகிறார். அவருடன் பேசலாம்.  உடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம்’ என கட்சித் தலைமை அறிவித்தது. அதன்படி முதல்கட்டமாக நடந்த கோவை மாநகர், வடக்கு, தெற்கு மாவட்டங்களில் நடந்த கூட்டத்தில் சுமார் 4,000 பேர் கலந்து கொண்டனர். அவர்களை அனுமதிக்க ஏகப்பட்ட கண்டிஷன்கள். கட்சித் தலைமை வழங்கிய அடையாள அட்டை மற்றும் மாவட்ட அமைப்பின் மூலம் வழங்கப்பட்ட அனுமதி அட்டை ஆகியவற்றை வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். பத்திரிகையாளர்கள் உட்பட அடையாள அட்டை இல்லாத யாரையும் அனுமதிக்கவில்லை. இதில் தொண்டர்கள்தான் அதிகளவில் பங்கேற்றனர்.''

''உள்ளே என்ன பேசப்பட்டது?''

மிஸ்டர் கழுகு: பறிபோகிறது பதவி?

''உள்ளே அரசியல் பெரிதாக எதுவும் பேசவில்லை. 'கொஞ்ச நாளா உங்களைப் பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை. நான் எங்கேயும் போயிடலை. போகவும் மாட்டேன். என்னைக்கும் நான் உங்களோடதான் இருப்பேன். நீங்களும் என்னோட இருந்து கட்சி வேலைகளை நல்லா கவனியுங்க. 2016 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு வருஷம்தான் இருக்கு. அது சீக்கிரம் ஓடிப்போயிடும்...’ என்று மட்டும் பேசியிருக்கிறார் விஜயகாந்த். 'அதுதான் உள்ளே அரசியல் பேசலையே... பத்திரிகைகாரங்களை அனுமதிக்கலாமே?’ என நிர்வாகிகள் சிலர் விஜயகாந்த்திடம் கேட்க, ஆவேசமடைந்துள்ளார் அவர். 'அவங்க வந்தால் தேவையில்லாததை எல்லாம் எழுதுவாங்க. எதுக்கு வம்பு? போட்டோவோ, செய்தியோ எதுவா இருந்தாலும் நாமே எடுத்துக் கொடுத்திடலாம். இன்னும் கொஞ்ச நாளைக்கு அவங்களை அனுமதிக்க வேண்டாம்’ என மறுப்புத் தெரிவித்துள்ளார்.''

''அப்புறம்?''

''இரண்டு இரண்டு பேராக விஜயகாந்துடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர் தொண்டர்கள். விஜயகாந்த்தை சந்தித்தது, அவருடன் நின்று போட்டோ எடுத்துக்கொண்டது என ஏக குஷி. ஆனால், நீண்ட நேரம் தோட்டத்து வீட்டின் வாசலில் சுட்டெரிக்கும் வெயிலில் காத்திருந்தவர்கள், சற்று அதிருப்தியடைந்தனர். தொடர்ந்து திருப்பூர், நீலகிரி, கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை என ஜூலை 4-ம் தேதி வரை விஜயகாந்த்துக்கு மாவட்டவாரியாக தொண்டர்களைச் சந்திப்பதும், போட்டோ எடுத்துக்கொள்வதும் மட்டும்தான் திட்டம்!''

''ஏதோ விரக்தியில் இருப்பதாகச் சொன்னீரே?''

''கட்சி நிர்வாகிகள் மத்தியில் ஆக்கபூர்வமான செயல்பாடுகள் இல்லை என்று புலம்பல் கேட்கிறது. முன்பு நடந்த கலந்துரையாடலின் போது பேசிய கடலூர் நிர்வாகிகள், 'அறிமுகம் இல்லாதவரை வேட்பாளராக நியமித்தீர்கள்’ என்றார்கள். 'நாமதான் எதிர்க் கட்சி என்பதையே மறந்துட்டோம். எதிர்க் கட்சியா நாம செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கு. மக்களும் உங்ககிட்ட நிறைய எதிர்பார்க்கிறாங்க கேப்டன்’ என்று திருப்பூர் நிர்வாகி ஒருவர் சொல்லியிருந்தார். திருச்சி மாவட்டச் செயலாளர் விஜயராஜன்,  'கட்சியோட கிளைகளைப் பலப்படுத்தணும்!’ என்று சொல்லியிருந்தார். இப்படிப்பட்ட புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விஜயகாந்த் இருப்பது, நிர்வாகிகளைக் கொந்தளிக்க வைத்துள்ளது. குறிப்பாக, அந்தக் கட்சியின் எம்.எல்.ஏ-க்கள்!''

''அங்கிருந்து பல பேர் ஏற்கெனவே தாவிவிட்டார்களே?''

''இன்னும் சில எம்.எல்.ஏ-க்களுக்கு ஆளுங்கட்சி குறி வைத்துள்ளது. ஐந்து பேருக்கு மேல் ஆளுங்கட்சியின் பட்டியலில் இருக்கிறார்களாம். அமைச்சர்கள் இப்போதே பேச்சுவார்த்தையை ஆரம்பித்துவிட்டனர். இதில் சில எம்.எல்.ஏ-க்கள் அவர்களாகவே ஆளுங்கட்சியின் வலையில் வந்து விழுகிறார்களாம். இதுவரை பலரும் விஜயகாந்துடன் சண்டை போட்டுவிட்டு ஜெயலலிதாவிடம் சேர்ந்துள்ளனர். அப்போதெல்லாம், 'யார் போனாலும் அதுபற்றி கவலை இல்லை’ என்று சொல்லி வந்த விஜயகாந்த், இனி அப்படி இருக்க முடியாது. காரணம், அவர் பதவியே இனி பறிபோகப் போகிறது என்பதுதான் இந்த வாரத்து நிலைமை!''

''அது என்ன?''

''மொத்தம் 28 எம்.எல்.ஏ-க்கள் தே.மு.தி.க சார்பில் வென்றார்கள். அதில் சுந்தர்ராஜன், அருண்பாண்டியன், தமிழ் அழகன், அருண் சுப்பிரமணியம், மாஃபா பாண்டியராஜன், மைக்கேல் ராயப்பன், சுரேஷ்குமார், சாந்தி ஆகிய எட்டு எம்.எல்.ஏ-க்கள் தே.மு.தி.க-வில் இருந்து தனித்து நிற்கிறார்கள். பண்ருட்டி ராமச்சந்திரன், கட்சியை விட்டு விலகிவிட்டார். எனவே, இப்போதைய எண்ணிக்கைப்படி 19 இருக்கைகள்தான் தே.மு.தி.க-வுக்கு. இன்னும் சில எம்.எல்.ஏ-க்களையும் கரைத்தால் தே.மு.தி.க-வின் பலம் இன்னும் குறையும். சில வாரங்களுக்கு முன் பேசிக்கொண்டு இருந்த ஜெயலலிதா, விஜயகாந்த் மீதான தனது கோபத்தைக் காட்டி உள்ளார். விஜயகாந்த் சட்டசபைக்குள் வந்தால், கிடுக்கிப்பிடி கேள்விகளால் துளைத்தெடுக்க வேண்டும் என்றும் நினைக்கிறார். இரண்டு கட்சிகளும் ஒருவர் தயவில் ஒருவர் வென்றதாக குற்றச்சாட்டு சொல்லிக்கொண்டு இருந்தார்கள். இப்போது தனித்துப் போட்டியிட்டு ஜெயலலிதா ஜெயித்துவிட்டார். கூட்டணி அமைத்துக்கூட விஜயகாந்தால் ஒரு ஸீட்கூட வெல்ல முடியவில்லை. அதனை வைத்து நேருக்கு நேர் மோதத் தயாராகிவிட்டார் என்கிறார்கள். தன்னால்தான் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து விஜயகாந்துக்கு கிடைத்தது என்று ஜெயலலிதா நினைக்கிறார். அதனைப் பறிப்பதற்கான படலம் ஆரம்பம் ஆகிவிட்டது. தி.மு.க-வின் பலம் சட்டசபையில் இப்போது 23. தே.மு.தி.க-வைவிடக் கூடுதல். இதனை வைத்தே விஜயகாந்த் பதவியை காலிசெய்யப் போகிறார்களாம். ஜூலை 10-ம் தேதி தமிழக சட்டசபை கூடவிருக்கிறது. அன்று முதல் இந்தக் காட்சிகளைப் பார்க்கலாம்!'' என்று சொல்லிவிட்டுப் பறந்தார்.

அட்டை மற்றும் படங்கள்: ஆ.முத்துக்குமார்

ஜெயலலிதா தந்த குத்துவிளக்கு!

மிஸ்டர் கழுகு: பறிபோகிறது பதவி?

தே.மு.தி.க எம்.எல்.ஏ-வான நடிகர் அருண்பாண்டியன் மகள் கிரணா திருமணம் கடந்த 24-ம் தேதி நடந்தது. ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், சம்பத் என்று அ.தி.மு.க அமைச்சர்கள் பலரும் வாழ்த்த வந்திருந்தனர். கார்டனில் இருந்து இரண்டு வெள்ளி குத்துவிளக்குகளை கல்யாணப் பரிசாக அனுப்பி வைத்திருந்தார் ஜெயலலிதா.

மிஸ்டர் கழுகு: பறிபோகிறது பதவி?

ஏர்போர்ட் சீக்ரெட்!

சி.பி.ஐ இயக்குநர் ரஞ்சித் சின்கா கடந்த 21-ம் தேதி சென்னை வந்தார். ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஒரு கெஸ்ட்ஹவுஸில் தங்கினார். பிறகு, அவர் காரில் திருப்பதி கோயிலுக்குச் சென்றார். திருப்பதி தரிசனத்துக்குப் பிறகு அன்று இரவே சென்னைக்குத் திரும்பினார். இரவு சென்னை விமானநிலையத்தில் தென் மண்டல சி.பி.ஐ அதிகாரிகள் சிலரை சந்தித்துப் பேசிவிட்டு டெல்லிக்குக் கிளம்பியிருக்கிறார். அந்தச் சந்திப்பில் பேசப்பட்ட முக்கிய விஷயங்கள் அடுத்த சில நாட்களில் வெளிப்படையாகத் தெரியும் என்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு