Published:Updated:

விபத்து நேரத்தில் சொகுசு ரயிலில் வந்த ரயில்வே அமைச்சர்!

விபத்து நேரத்தில் சொகுசு ரயிலில் வந்த ரயில்வே அமைச்சர்!
விபத்து நேரத்தில் சொகுசு ரயிலில் வந்த ரயில்வே அமைச்சர்!
விபத்து நேரத்தில் சொகுசு ரயிலில் வந்த ரயில்வே அமைச்சர்!

சென்னை: தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டதை பார்வையிட  ரயில்வே அமைச்சர் முகுல் ராய் சொகுசு ரயில் பெட்டியில் வந்திறங்கியது  பயணிகளிடையே மனவேதனையை ஏற்படுத்தியது.

நேற்று முன்தினம் டெல்லியில் இருந்து சென்னை வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில்  தீப்பிடித்து 32 பேர் பலியான விபத்து நடந்ததை பார்வையிட, 12 மணி நேரம் கழித்து  விமானத்தில் சென்னை வந்தார் ரயில்வே அமைச்சர் முகுல்ராய்.இவ்வளவு தாமதம் ஏன்?  என்று கேட்டபோசு,கொல்கத்தாவிகிருந்து சென்னைக்கு மாலை 3 மணிக்குத்தான்  விமானம் என்பதால்தான் என்று பதிலளித்தார்.

இந்நிலையில் சென்னை வந்த அவர்,நெல்லூருக்கு சொகுசு ரயிலில் சென்றார்.பின்னர்  அதே சொகுசு ரயிலில் சென்னை திரும்பினார்.

சென்ட்ரலில் அவர் இறங்கும் இடத்தில் சிவப்பு நிறத்தில் அழகிய வடிவமைப்புடன்  தரைவிரிப்பு விரிக்கப்பட்டு இருந்தது. இது அங்கிருந்த பயணிகளுக்கு அதிர்ச்சி அளித்தது.  விபத்தை பார்த்துவிட்டு வரும் அமைச்சருக்கு இத்தகைய வரவேற்பு தேவைதானா? என்று  அங்கிருந்தவர்கள் கேள்வி எழுப்பினர்.

அவர் வந்து இறங்கிய சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 6-வது பிளாட்பாரத்தில் 3 பாட்டில்  நறுமணம் வீசும் திரவம் தெளிக்கப்பட்டது.முகுல்ராய் வருவதற்கு முன் பிளாட்பாரம்  முழுவதும் குப்பைகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு பளிச்சென்று வைக்கப்பட்டது.

அவர் வந்த ரயிலுக்கு நேரடி மின்சார இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தது.வழியில் மின்சார  கோளாறு ஏற்பட்டால் உடனடியாக சரிசெய்ய 2 எலக்ட்ரீஷியன்களும் நியமிக்கப்பட்டு  இருந்தனர்.அவர் பயணம் செய்த சொகுசு ரயில் பெட்டியின் மதிப்பு ரூ.1.5 கோடி.இது  அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும், வசதிகளும் கொண்டது.

'இன்ஸ்பெக்ஷன் காரி' என்றழைக்கப்படும் இந்த சொகுசு ரயில்களை ரயில்வே  அமைச்சர், ரயில்வே மண்டல பொதுமேலாளர்கள், ரயில்வே வாரியத் தலைவர்கள்  மட்டுமே பயன்படுத்த முடியும்.முழுவதும் ஏ.சி. வசதி கொண்டது.உள்ளே  ஆலோசனைக்கூடம்,படுக்கை அறை, சமையல் அறைகளும் இருக்கும்.தீயணைப்பு  கருவிகளும், பூச்சிகளை கட்டுப்படுத்தும் கருவிகளும் வைக்கப்பட்டு இருக்கும்.

ஆனால் ரயில்வேக்கு பல ஆயிரம் கோடி வருமானத்தை அள்ளித்தரும் சாதாரண  பயணிகள் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் எந்த பாதுகாப்பு வசதியும், பராமரிப்பும்  இல்லை.

இந்த களேபரங்களையெல்லாம் மீட்பு ரயிலில் செல்ல காத்திருந்த பாதிக்கப்பட்டவர்களின்  உறவினர்கள் பார்த்துக்கொண்டிருக்கையிலேயே,முகுல் ராய் பயணித்த சொகுசு ரயில்  வந்து நின்றது.அது மிகவும் வித்தியாசமாகக் காணப்பட்டது. ஒரு லக்சரி ரூம் போல  இருந்த அந்த ரயிலில் இருந்து ரயில்வே அமைச்சர் முகுல் ராய் இறங்கி வந்தார்.

அவர் வந்ததும், உடனடியாக சில ஊழியர்கள் அந்த ரயில் பெட்டிக்குள் சென்று ஸ்பிரே  அடித்தும், கர்ட்டன்களை சுத்தம் செய்தனர்.

இதனை பார்த்த மீட்பு ரயிலில் செல்ல காத்திருந்த பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள்  மிகுந்த மன வேதனை அடைந்தனர்.

ரயில் விபத்துக்குள்ளாகி உறவினர்கள் வேதனையில் கதறி அழுதுகொண்டிருக்கும்  தருணத்தில், அத்துறைக்கு பொறுப்பேற்கும் ரயில்வே அமைச்சர் முகுல் ராயின்  இத்தகைய செயல் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.