Published:Updated:

சென்னை வெள்ளத்துக்குக் காரணம் இதுதான்!... உண்மையை உடைக்கும் தணிக்கையாளர் அறிக்கை!

சென்னை வெள்ளத்துக்குக் காரணம் இதுதான்!... உண்மையை உடைக்கும் தணிக்கையாளர் அறிக்கை!
சென்னை வெள்ளத்துக்குக் காரணம் இதுதான்!... உண்மையை உடைக்கும் தணிக்கையாளர் அறிக்கை!

'நீர் இல்லை... இல்லை' என்று வறண்டுகிடந்த சென்னையை, 'நீரே எங்களுக்கு வேண்டாம்' என்று மிரளவைத்த 2015 டிசம்பர் மாதப் பெருவெள்ளம் உங்களுக்கு நினைவில் இருக்கும். செம்பரம்பாக்கம், அம்பத்தூர், போரூர், அடையாறு எனச் சென்னையின் அனைத்து நீர்நிலைகளும் தண்ணீர் வெள்ளத்தால் பெருக்கெடுத்தது; அனைத்து முக்கியச் சாலைகளும் வெள்ளம் காரணமாகத் துண்டிக்கப்பட்டன; சைதை அருகே உள்ள அடையாற்றின் மேம்பாலப் பக்கவாட்டுச் சுவர் அதிக வெள்ளோட்டம் காரணமாக உடைந்தது; செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடப்பட்டதுதான் சென்னையின் ஒட்டுமொத்த வெள்ளப் பாதிப்புக்கும் காரணம் எனக் கூறப்பட்டது. அரசு, போர்க்கால அடிப்படையில் செயல்படாததால் அதன் கையாலாகாத்தனத்துக்காகக் குற்றம்சாட்டப்பட்டது. அரசின் உதவியையே அதுவரை எந்தப் பேரிடரின்போதும் நாடிவந்த மக்கள், தாங்களே தங்களுக்கான தீர்வாக அமைந்தனர். வட சென்னை,  தென் சென்னை என வீடு இழந்து... உடைமை இழந்து பாதிக்கப்பட்ட அத்தனை பகுதிகளுக்கும் ஒட்டுமொத்த தமிழக மக்களும் கரம்கொடுத்தார்கள்.

தற்போது சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடிந்த நிலையில், 2015 - 2016-ம் ஆண்டுகளுக்கான செலவுக் கட்டுப்பாடு மற்றும் தணிக்கையாளர் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், 'சென்னை மாநகராட்சியின் 2011 - 2014-ம் ஆண்டுகளுக்குச் செயல்பாட்டினால் 54 கோடி ரூபாய் வரை இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பெரும்பாலான தொகை சென்னையின் மழைநீர்க் கால்வாய்கள் கட்டுமானத்துக்கு உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த மழைநீர்க் கால்வாய்கள் அனைத்துமே சூழலியல் - தட்பவெட்பவியல் அறிக்கை என எதன் அடிப்படையிலும் இல்லாமல் கட்டப்பட்டிருக்கிறது. 2015-ம் ஆண்டு சென்னைப் பெருவெள்ளப் பாதிப்பு ஏற்பட்டதற்கான முக்கியக் காரணம் இதுதான்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதுகுறித்துப் பேசிய தமிழ்நாடு பொறியாளர்கள் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் ராஜன், ''ஆண்டாண்டு காலமாக மழைநீர்க் கால்வாய்கள் சென்னை மாநகராட்சியின் பராமரிப்பிலும், பாதாளச் சாக்கடைகள் சென்னைக் குடிநீர் வடிகால் வாரியத்தின் பராமரிப்பிலும் இயங்கிவருகின்றன. மனிதக் கழிவை மனிதர்கள் அகற்றுவது தண்டனைக்குரியது என்று சட்டம் இயற்றப்பட்ட பிறகு, இந்தப் பாதாளச் சாக்கடைகளை மனிதர்கள் சுத்தம் செய்வது முற்றிலுமாகத் தடைசெய்யப்பட்டது. அதற்கான மாற்றாகப் பாதாளச் சாக்கடைகளைச் சுத்தப்படுத்த வேறு எந்தத் திட்டங்களையுமே மாநகராட்சி செயல்படுத்தவில்லை. அதனால், சென்னையின் அத்தனை கழிவுநீர் வடிகால்களும் பாழடைந்துவிட்டன. மேலும், பாதாளச் சாக்கடைகளுக்கும் மழைநீர்க் கால்வாய்களுக்கும் இடையிலான இணைப்புகள் சரிவரக் கட்டமைக்கப்பட்டு இருக்காது. மழைக்காலத்தில் மட்டும்தான் மழைநீர்க் கால்வாய்களில் தண்ணீர் ஓடவேண்டும். கட்டமைப்புச் சரியில்லாததால் பாதாளச் சாக்கடை நீர் அதில் கலந்து, வருடம் முழுவதும் சென்னையின் மழைநீர்க் கால்வாய்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. பாதாளச் சாக்கடைகளில் ஓடும் கழிவுநீர், சுத்திகரிப்புக்காகப் பெருங்குடி, நெசப்பாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும். ஆனால், குழாய்கள் சரிவரக் கட்டிமுடிக்கப்படாததால் கழிவுநீர் பாதியிலேயே நீர்த்தேக்கங்களிலும் சாலைகளிலும் கலந்துவிடுகின்றன. 100 சதவிகிதம்வரை சுத்திகரிப்பு ஆலைகளுக்குப் போகவேண்டிய கழிவுநீர், 50 சதவிகிதம்கூட அங்கே சென்று சேருவதில்லை என்பது ஜீரணிக்க முடியாத உண்மை. அவை, அத்தனையும் நேரடியாக ஆறுகளில் கலக்கின்றன. இதற்கிடையே கூவம் ஆற்றின் கரையருகிலேயே தற்போது நான்கு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டும் திட்டம் செயலுக்கு வர இருக்கிறது. அது எந்த அளவுக்கு வெற்றிபெறும் எனத் தெரியவில்லை" என்றார்.

இதற்கான காரணம் என்ன? 

''மாநகராட்சியில் ஊழியர்கள் பற்றாக்குறை இருக்கிறது. வடிகால்கள் செயல்படாமல் இருக்கும்போது அதனை ஆய்வுசெய்வது குடிநீர் வடிகால் வாரியத்தின் வேலை. ஆனால், அது செயல்படுவதே இல்லை. 'மழைநீர் வடிகால்களில் சாக்கடை நீர் கலக்கிறதே' என்று சென்னை மாநகராட்சியினரும் ஆய்வுசெய்வது இல்லை. காரணம், இந்த இரண்டு நீர் மேலாண்மை வாரியங்களுக்கும் மீண்டும் மீண்டும் ஒரு சிலர் மட்டுமே திட்ட இயக்குநர்களாக இருக்கிறார்கள். சென்னை மாநகர ஆறுகளை மீட்கும் திட்டத்தின்கீழ் ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்நிலைகளை மறுசீரமைப்பு செய்ய 1,200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், வெள்ளத்தின்போது இங்கே ஆறுகளின் நிலைமை என்ன ஆனது என்று ஊருக்கே தெரியும். அந்த 1,200 கோடி ரூபாய் என்ன ஆனது என்று திட்ட இயக்குநர்களுக்கு மட்டுமே வெளிச்சம். இப்படியே போனால், 2015 - 2016-ம் ஆண்டு அறிக்கையில் மட்டுமல்ல, வருடாந்திரமாகவே இந்த 54 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்படும்” என்கிறார் ராஜன்.

''மீண்டும் எப்போது வேண்டுமானாலும் அது போன்றதொரு பெருமழையும் வெள்ளமும் ஏற்படலாம்'' என்கின்றனர் சூழலியலாளர்களும் தட்பவெப்பவியலாளர்களும். அந்தச் சமயமாவது சென்னையைக் காக்க நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி அல்லது மக்கள் ‘நமக்கு நாமே’ என்று செயல்பட நேரிடுமா?