பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!

எஸ்.எம்.சுல்தான், மதுரை.

 ஊழல் வழக்குகளில் பிரதமர் மோடி எப்படி நடந்துகொள்ள வேண்டும்?

யார் மீது குற்றம் என்பதைப் பார்க்கக் கூடாது. என்ன குற்றம் என்பதைப் பார்த்து நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்.

முகத்தைப் பார்க்காதே, அகத்தைப் பார் என்கிறது தமிழ்ப் பழமொழி!

 அ.ச.நாராயணன், பாளையங்கோட்டை.

இலங்கையின் போக்கில் மாறுதல் ஏற்படுவது போலத் தெரியவில்லையே?

இலங்கையில் அடுத்த ஆண்டு தேர்தல் வரப்போகிறது. தமிழர்கள் சார்பாக நடந்து கொண்டால், சிங்களர்கள் வாக்கு கிடைக்காது என்றுதானே ராஜபக்ஷே நினைப்பார்? பிறகு எப்படி மாறுவார்?

 வி.தமிழ்ப்பித்தன், நன்மங்கலம்.

கழுகார் பதில்கள்!

துறவு மேற்கொண்டவனுக்கு கமண்டலம், தண்டு, பவித்ரம் இவையே உடைமைகள். மற்ற உலக சுகங்களில் நாட்டமின்றி இருக்க வேண்டும் என்பதை இன்றைய சாமியார்கள் படித்திருப்பார்களா?

அதனை மறந்து போனதால்தானே பலரும் சிறைக்கும் நீதிமன்றத்துக்கும் அலைய வேண்டியதாய் இருக்கிறது!

மனிதக் கடவுளாக வாழ்ந்து மறைந்த மகா பெரியவர் காஞ்சி காமகோடி ஸ்ரீசந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஒரு முறை சொன்னார். 'மனுஷனாய் பிறந்த ஒவ்வொருத்தனும் ஓயாமல் அலைச்சலான அலைச்சல் அலைந்து கொண்டிருக்கிறானே... எதற்காக? ஆசைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்குத்தான். வெளியிலிருக்கிற வஸ்துக்களிடம் இவனுக்கு ஆசை. ஒன்று கிடைத்துவிட்டாலும் போதவில்லை. அதனால் வருகிற சுகம் தீர்ந்துபோகிறது. இன்னொன்றுக்கு ஆசைப்படுகிறான். அதைத் தேடி ஓடுகிறான். அவற்றைப் பெறவே அலைகிறான். இவனது இயல்பான உள் ஆனந்தம், மகா சமுத்திரம் மாதிரி இருப்பதை அவன் உணரவில்லை. பதவி, பணம், கௌரவம், பப்ளிசிட்டி என்று இப்படி வெளியிலிருந்து நமக்கு ஆனந்தம் கிடைப்பதாக எண்ணிக்கொண்டு ஓயாமல் யத்தனம் செய்வது, அத்தனையும் சமுத்திரமாக இருக்கிற நாம் அதையறியாமல் ஒரு சொட்டு ஜலத்துக்காகத் தவிக்கிற மாதிரிதான்'' என்று சொன்னார். சாதாரண மனிதர்களே இப்படி இருக்க வேண்டும் என்று மகா பெரியவர் விரும்பினார் என்றால், நீங்கள் சொல்லும் துறவு மேற்கொண்ட சாமியார்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? ஆனால் இங்கு வழிகாட்ட வேண்டியவர்கள் சிலர் மக்களைவிட மோசமாகத்தானே இருக்கிறார்கள்.

 தமிழினியன், விழுப்புரம்.

39 தொகுதிகளில் தோற்க இந்த 33 பேர்தான் காரணமா?

அப்படித்தான் தி.மு.க தலைமை நினைக்கிறது போலும்!

தி.மு.க-வுக்கு மிகப்பெரிய களங்கம் 2ஜி வழக்கு. கடந்த சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கும், இப்போதைய நாடாளுமன்றத் தோல்விக்கும், அடுத்து எந்தத் தேர்தல் வந்தாலும் அப்போதும் தலைகுனிவை ஏற்படுத்தப்போகும் களங்கமாக இருக்கும் விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களை விலக்காமல், எங்கேயோஇருக்கிற ஒன்றியச் செயலாளர்களை மாற்றுவதால் என்ன ஆகிவிடப்போகிறது?

கிராமத்து கதை ஒன்று உண்டு. காதில் புண் வந்ததாம் ஒருத்திக்கு. அங்கு மருந்து போட்டால் தெரிந்துவிடும் என்று முதுகில் மருந்து போட்டுக்கொண்டாளாம். தி.மு.க-வில் இப்​போது நடப்பது இப்படித்தான் இருக்கிறது.

சம்பத்குமாரி, பொன்மலை.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பார்லிமென்ட் உறுப்பினர் ஏதாவது தவறு செய்தாலோ அல்லது சரியாக பணிபுரியாவிட்டாலோ அவரது தொகுதியில் உள்ள மொத்த வாக்காளர்களில் 10 சதவிகிதம் பேர் கையெழுத்திட்டால், அவரது பதவி பறிபோய்விடும் என்று புதிய சட்டம் ஒன்றை பிறப்பித்துள்ளதே பிரிட்டன். இந்தியாவிலும் அப்படிச் செய்தால் என்ன?

நல்ல யோசனைதான். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு பயமாவது இருக்கும்!

 ஜே.கே.தமிழோவியன், துறையூர்.

தமிழகத்தில் என்றைக்காவது ஒருநாள், தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் ஒருவரை ஒருவர் பாராட்டிக்கொள்ளும் அரசியல் மலருமா?

'தி.மு.க, அ.தி.மு.க கூட்டணி அமையுமா?’ என்று ஏற்கெனவே ஒரு வாசகர் கேள்வி கேட்டிருந்தார். அப்போது அளித்த பதில்தான் இதற்கும் பொருந்தும். தமிழகத்தில் தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் அல்லாத ஆட்சி அமையுமானால், அவர்கள் இருவரும் சேருவதற்கான வாய்ப்பு வரலாம்!

 கோவை சுந்தரம், சேலம்-1.

'பாகிஸ்தான், சீன ஆக்கிரமிப்பில் இருக்கும் இந்தியப் பகுதியை மீட்டால் மோடியை ஆதரிக்கத் தயார்’ என்று சொல்கிறாரே முலாயம்?

எது சாத்தியம் இல்லையோ, எது நீண்ட காலம் பிடிக்குமோ, எது அதிக உயிர் இழப்பைக் கொண்டதோ... அதனைக் கேட்கிறார் முலாயம். அதற்கு முன்னதாக முலாயம் ஆக்கிரமிப்பில் உள்ள உத்தரப்பிரதேசத்தை மீட்டுவிடுவோம் என்று மோடி சபதம் போட்டு இருக்கிறார். முலாயம் ஜாக்கிரதை!

 வீ.சுப்ரமணியன், சென்னை-53.

குண்டு வெடிக்காத அரபு நாடுகளே இல்லை என்ற நிலை உள்ளது. அங்குள்ள தீவிரவாதிகளின் லட்சியம்தான் என்ன?

அரபு நாடுகளில் நடக்கும் குண்டு வெடிப்புகள் அனைத்துக்கும் தீவிரவாதிகள் மட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது. அரபு நாடுகளின் எண்ணெய் வளத்தைக் குறிவைத்தே பல்வேறு சிக்கல்கள் தொடங்கின. தொடர்ந்து வருகின்றன.

முதல் உலகப் போருக்குப் பிறகு, எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்டது. அது ஈரானை உலகுக்கு அறிமுகப்படுத்தியது. எகிப்தும் சிரியாவும் இணைந்து ஐக்கிய அரபு குடியரசு உருவாக்கியதை உலக வல்லரசு நாடுகள் விரும்பவில்லை. அந்தக் கூட்டமைப்பில் இன்னும் சில நாடுகள் சேர முன்வந்தது. பெரும் எண்ணெய் உற்பத்தி நாடுகள் ஒன்றுசேர்ந்தால் அது நல்லதல்ல என்பதை உணர்ந்து உள்குழப்பங்களை ஏற்படுத்த ஆரம்பித்தார்கள். எகிப்து அதிபர் நாசர் வேட்டையாடப்பட்ட (1967) இரண்டாவது எண்ணெய் போரும், 1990-ல் வளைகுடா நாடுகளில் நடந்த மூன்றாவது எண்ணெய் போரும் தீரா தலைவலியாக மாறியது. இதனுடைய உச்சமாக ஈரான் - ஈராக் மோதல் வலுத்து சுமார் 10 ஆண்டுகள் நடந்தன.

அரபு நாட்டு மன்னர்களின் அலட்சியம், அங்கு நடந்த ஜனநாயக மறுப்பு ஆகியவற்றை வல்லரசு நாடுகள் பயன்படுத்திக்கொண்டு யுத்தங்கள் நடத்தி வருகின்றன. இதுதான் குண்டு சப்தத்துக்குக் காரணம்!

கழுகார் பதில்கள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு