Published:Updated:

மிஸ்டர் கழுகு: ''நான் சந்தோஷமாக இல்லை!''

மிஸ்டர் கழுகு: ''நான் சந்தோஷமாக இல்லை!''

மிஸ்டர் கழுகு: ''நான் சந்தோஷமாக இல்லை!''

கழுகார் உள்ளே நுழைந்ததும், ''அ.தி.மு.க செயற்குழுவில் இருந்து ஆரம்பியும்'' என்று அன்புக் கட்டளை போட்டோம். அதற்குத் தயாராக வந்திருப்பவர் போலவே ஆரம்பித்தார்!

''அ.தி.மு.க செயற்குழு ஜூன் 21-ம் தேதி நடக்க இருப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், ஏனோ திடீரென்று அந்த தேதி ஒத்திவைக்கப்பட்டது. 'முதல்வர் சில நாட்கள் ஓய்வில் இருக்கிறார்’ என்று அதற்கு சிலர் காரணம் சொன்னார்கள். இதைத் தொடர்ந்து ஜூலை 2-ம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. அறிவித்தபடி ராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழகத்தில் கட்சியின் செயற்குழு கூடியது. நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு ஜெயலலிதா கலந்துகொள்ளும் நிகழ்ச்சி என்பதால், பிரமாண்டம் களைகட்டியது. ஜெயலலிதாவை புகழ்ந்து தள்ளி பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 'எதிர்த்து நின்றோர் அனைவரும் நிலைகுலைந்து போகும் வண்ணம் இந்திய அரசியல் வானில் ஒளிரும் நட்சத்திரமாக வெற்றி முகட்டில் உயர்ந்து நிற்கும் இயக்கமாய் அ.இ.அ.தி.மு.க-வை உயர்த்தி இருக்கும் அரசியல் ஞானி, எளியோரின் நம்பிக்கை நட்சத்திரம், இளைய தொண்டர்களின் காவல் தெய்வம், புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு இந்த செயற்குழு மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறது’ என்ற ரீதியில் பாராட்டு மழையைப் பொழிந்தார்கள். 'அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் 100 சதவிகிதம் முழுமையான வெற்றியைப் பெற வேண்டும்’ என்ற சூளுரையும் மேற்கொள்ளப்​பட்டது!''

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''யார் யார் என்ன பேசினார்​களாம்?''

''ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன் ஆகியோர் பேசியிருக் கிறார்கள். திருச்சி எம்.பி. குமார் தீர்மானங்களை வாசித்தாராம். அதன் பிறகு ஜெயலலிதா பேசியிருக்கிறார். இறுக்கமான முகத்துடன்தான் ஜெயலலிதா அன்று வந்திருந்தார். பால்கனியில் அவர் முகம் தெரிந்ததும், கீழே இருந்த தொண்டர்கள் விசில்

மிஸ்டர் கழுகு: ''நான் சந்தோஷமாக இல்லை!''

அடித்து கை காட்டினார்கள். அப்போது லேசான புன்னகையுடன் இரட்டை விரலைக் காட்டினார் ஜெயலலிதா. உள்ளே செயற்குழுவில் அவரது பேச்சு இறுக்கமாகத்தான் இருந்துள்ளது. 'நீங்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்கிறீர்கள். 37 தொகுதிகள் வென்றுவிட்டோம்; சட்டமன்றத் தொகுதி என்ற அடிப்படையில் பார்த்தால் 217 சட்டமன்றத் தொகுதிகள் வெற்றி பெற்றுவிடுவோம் என்று நினைத்து மகிழ்ச்சியில் இருக்கிறீர்கள். ஆனால், நான் மகிழ்ச்சியாக இல்லை’ என்று சொன்னதும், கட்சி நிர்வாகிகள் என்னமோ ஏதோ என்று பதற்றம் ஆக ஆரம்பித்தார்கள். வேறு ஏதோ சொல்ல வந்த ஜெயலலிதா, தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு, 'ஆனால் மற்ற இரண்டு இடங்களில் நாம் தோற்றுப்போனது ஏன் என்பதுதான் என்னுடைய கவலை. 17 சட்டமன்றத் தொகுதிகளில் நாம் இரண்டாவது இடத்துக்கு வந்துள்ளோம். இதற்கு என்ன காரணம்? அதுபற்றி யாராவது யோசித்தீர்களா? வெற்றி பெற்றுவிட்டோம் என்ற நினைப்பில் நீங்கள் இருக்கக் கூடாது. இந்த வெற்றியை அடுத்து வரும் தேர்தலில் தக்கவைக்க வேண்டும். அதற்கு நீங்கள் மக்கள் பணியாற்ற வேண்டும். மக்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்க வேண்டும். செல்போனை சுவிட்ச்டு ஆஃப் செய்து​விட்டு இருந்துவிடக் கூடாது. எப்போதும் மக்கள் பணி​யாற்றத் தயாராக இருக்க வேண்டும். எம்.பி-க்​களாக டெல்லி செல்பவர்கள் அங்கு அறிமுகம் இல்லாத புதிய நபர்​களிடம் பேசக் கூடாது. அவர்கள் உங்களை எதிலாவது மாட்டிவிடக் கூடும். நாடாளுமன்றத்தில் தேவையில்லாமல் எழுந்து பேசக் கூடாது. நம்முடைய கருத்தைச் சொல்லியாக வேண்டிய விஷயங்களுக்கு, முக்கியமானவர்கள் பதில் சொல்லிக்கொள்வார்கள்’ என்று அறிவுரை​களாகச் சொல்லி​யிருக்கிறார் ஜெயலலிதா!''

''ஜெயலலிதா சந்தோஷத்தைப் பகிர்ந்துகொள்ளாமல், 'நான் சந்தோஷமாக இல்லை’ என்று சொல்வதற்கு என்ன காரணம்?''

''அவருக்கு பெங்களூரு வழக்கின் நிலவரங்கள் உற்சாகத்தைக் குறைத்து வருவதாக விவரம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள்'' என்ற கழுகார், அடுத்து தி.மு.க மேட்டருக்கு வந்தார்.

''மு.க.ஸ்டாலின் அவரது மருமகன் சபரீசனுடன் லண்டன் சென்றுவிட்டார். 2-ம் தேதி இரவு 10 மணிக்கும் நள்ளிரவு 1 மணிக்கும் என, இரண்டு விமானங்களில் டிக்கெட் ப்ளாக் செய்யப்பட்டு இருந்தன. 10 மணி விமானத்திலேயே துபாய் சென்று அங்கிருந்து லண்டன் சென்றுவிட்டதாகச் சொல்லப்படுகிறது. 'ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அவர் லண்டனுக்குச் சென்று உடல் பரிசோதனை செய்துகொள்வது வழக்கம். அதன் காரணமாகத்தான் அவர் லண்டன் சென்றுள்ளார்’ என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்!''

''எப்போது திரும்புகிறாராம்?''

''அநேகமாக 9-ம் தேதி திரும்புவார். 10-ம் தேதி சட்ட​மன்றம் கூடுகிறது அல்லவா? அதில் பங்கேற்பார் என்கிறார்கள். இதற்குள் இன்னொரு சிக்கல் ஸ்டாலினை மையம் கொண்டு தொடங்கியுள்ளது!''

''அது என்ன?''

''ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஸ்டாலினை மையப்படுத்தி சி.பி.ஐ சில நகர்வுகளைச் செய்யப்போகிறதாம். இதுபற்றி அறிய டெல்லி சி.பி.ஐ மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சென்னைக்கு வந்துசெல்கிறார்கள். சி.பி.ஐ தாக்கல் செய்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, வழக்கின் நீதிமன்ற விசாரணை பாதி தூரம் கடந்துவிட்டது. ஆனால், அமலாக்கத் துறையின் விசாரணை இப்போதுதானே ஆரம்பக் கட்டத்தில் உள்ளது? இந்த அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகையின் மிக முக்கியமான குற்றச்சாட்டே, கலைஞர் டி.வி-க்கு பணம் கைமாறியது பற்றித்தான். இது தொடர்பாக தயாளு அம்மாள், கனிமொழி ஆகிய இருவரும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். 'நான் 60 சதவிகித ஷேர்கள் வைத்திருந்தாலும், என்னுடைய வயதின் காரணமாக நிர்வாக விஷயங்களில் அவ்வளவாகப் பங்கேற்கவில்லை. இதுபற்றி எனக்குத் தெரியாது’ என்று மனு தாக்கல் செய்திருக்கும் தயாளு, 'என்னை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும்’ என்றும் மனு தாக்கல் செய்துள்ளார். 80 வயதைத் தாண்டியவர், அல்சைமர் நோய் பாதிப்புக்கு உள்ளானவர் என்பதால், அவர் மீது அமலாக்கத் துறை பிடி லேசாக தளர்ந்துள்ளது.

கனிமொழி தாக்கல் செய்துள்ள மனுவில் தேதி வாரியாக ஆவண சாட்சிகளை தாக்கல் செய்து, 'இந்தப் பணப்பரிவர்த்தனை நடந்த காலகட்டத்தில் நான் கலைஞர் டி.வி-யில் பொறுப்பிலேயே இல்லை’ என்று மனு தாக்கல் செய்துள்ளார். ஆவணங்களின் அடிப்படையில் இதற்கும் அமலாக்கத் துறையால் வலுவான மறுப்பைச் சொல்ல இயலாதாம். அப்படியானால், அமலாக்கத் துறை வழக்கே மொத்தமாக விழுந்துவிட வாய்ப்பு இருக்கிறது என்று அதிகாரிகள் அதிர்ச்சியுடன் பேசிக்கொண்டார்களாம். 'கலைஞர் டி.வி-க்குப் பணம் வந்தது உண்மை. அதில் நேரடியாக சம்பந்தப்பட்டவர் யார்? யார் மூலமாகப் பணம் கைமாறியது? அப்போது பேச்சுவார்த்தை நடத்தியவர்கள் யார்? நேரடி சந்திப்புகள் யார் யாருக்கு நடந்தது?’ இந்தக் கேள்விகளுக்கு விடை தேடி அமலாக்கத் துறை புறப்பட்டு உள்ளது!''

''தற்கொலை செய்துகொண்ட சாதிக் பாட்ஷா எழுதிக் கொடுத்த வாக்குமூலத்தில், 'ஸ்டாலின் வீட்டுக்கு சாகித் பால்வா வந்து சென்றார்’ என்று சொல்லப்பட்டு இருப்பதாகச் செய்திகள் ஏற்கெனவே வந்ததே?''

''இறந்துபோன சாதிக் பாட்ஷாவின் வாக்குமூலத்தை வைத்து இந்த வலையைப் பின்ன முடியாது என்று அமலாக்கத் துறை நினைக்கிறது. அவர்கள் வலுவான ஆதாரம் ஒன்றை கடந்த இரண்டு வாரங்களாகத் தேடி வந்தார்கள். அதில் ஒரு வலுவான சாட்சி சிக்கிவிட்டதாக டெல்லித் தகவல்கள்

மிஸ்டர் கழுகு: ''நான் சந்தோஷமாக இல்லை!''

சொல்கின்றன. சாதிக் பாட்ஷாவின் அலுவலகத்தில் அவரோடு சேர்ந்து பணியாற்றிய ஒருவருக்கு இது முழுமையாகத் தெரியும் என்று அமலாக்கத் துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது. அவரை சாட்சியாக நிறுத்தும் முயற்சியில் இருக்கிறார்களாம். 'ஷாகித் பால்வா மூன்று முறை சென்னைக்கு வந்து ஸ்டாலினைச் சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்புகள் 2009-ம் ஆண்டு செப்டம்பர் முதல் 2010 மார்ச் வரை நடந்துள்ளது. இரண்டு முறை காலை விமானத்திலும், ஒரு முறை மதிய விமானத்திலும் பால்வா வந்துள்ளார். மூன்று முறையும் செனடாப் சாலையில் உள்ள ஸ்டாலின் வீடு வரைக்கும் வந்து அடையாளம் காட்டியது இந்த நபர்தான். அவர் தன்னுடைய சாட்சியத்தை சொன்னால் போதும்’ என்று அமலாக்கத் துறை நினைக்கிறதாம். ஒன்றே கால் கோடி ரூபாய் மதிப்பிலான வாட்ச் ஒன்றும் 25 லட்சம் மதிப்பிலான வாட்ச் ஒன்றும் கைமாறியுள்ளது. அது யாருக்கு யார் கொடுத்தது என்பதையும் அமலாக்கத் துறை தோண்ட ஆரம்பித்து உள்ளதாம்.  தனது வாக்குமூலத்தில் என்ன சொல்ல வேண்டும், என்ன சொல்லக் கூடாது என்பதை பிரச்னையின் மையப்புள்ளியான வி.ஐ.பி ஒருவர் சாதிக் பாட்ஷாவுக்கு வகுப்பு எடுத்ததும், அதில் குறிப்பிட்ட ஒருவரது பெயரைச் சேர்க்க அந்த வி.ஐ.பி வலியுறுத்தியதும் இந்த நபருக்கு மட்டும்தான் தெரியுமாம். சாதிக் பாட்ஷா தற்கொலை செய்துகொண்ட அன்று, அவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரியின் சில பக்கங்கள், அன்றைய போலீஸ் அதிகாரி ஒருவரின் உதவியுடன் கிழிக்கப்பட்டனவாம். அந்த தகவலையும் இந்த நபர் அறிவாராம்.''

''எல்லாமே பகீர் ரகமாக இருக்கிறதே?''

''இவை அனைத்தும் ஸ்டாலினைக் குறிவைப்பதாக இருக்கிறது. இதில் இருந்து சமாளித்து அவர்கள் எப்படி வெளியேறப்போகிறார்களோ?'' என்று சொல்லிக்கொண்டே கழுகார்,

''சமீப காலமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை சேர்க்கும் படலம் தொடங்கியிருக்கிறது. 33 பேரை தற்காலிகமாக நீக்கினார்கள் அல்லவா? அதில் ஏழு பேரை  மீண்டும் சேர்த்துவிட்டார்கள். கவுண்டம்பாளையம் நகரச் செயலாளர் கே.எம்.சுந்தரம். 'முறைப்படி வேலை செய்தோம். தேர்தல் தோல்விக்கு நாங்கள் எந்த வகையிலும் காரணம் இல்லை. அ.தி.மு.க பணம் கொடுத்து ஓட்டு கேட்டது. நகர பகுதிகளில் இருந்த மோடி அலைதான் ஓட்டு குறைந்ததற்குக் காரணம். தி.மு.க ஓட்டுக்களை வாங்கியிருக்கிறோம்’ என்று இவர் விளக்கம் கொடுத்தாராம். பொள்ளாச்சி நகரச் செயலாளரான தென்றல் செல்வராஜ், தான் வீடு வீடாக ஓட்டு கேட்டது. கட்சி நிர்வாகிகளுக்கு பணம் பிரித்துக் கொடுத்தது உள்ளிட்டவற்றை ஆதாரத்தோடு அறிக்கையாகக் கொடுத்தாராம். வால்பாறை ஒன்றியச் செயலாளரான கோழிக்கடை கணேசன், கருணாநிதியையும் ஸ்டாலினையும் நேரில் சந்தித்து விளக்கம் கொடுத்துள்ளார். பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியச் செயலாளரான சுப்பிரமணியம், 'எனக்குக் காலில் அடிப்பட்டிருந்ததால் கொஞ்சம் ஓய்வில் இருக்க வேண்டி இருந்தது. கடைசி நேரத்துல நான் தேர்தல் வேலைகள் பார்த்தேன்’ என்று சொன்னாராம். இதனை ஏற்றுக்கொண்டு கட்சிக்குள் சேர்த்துள்ளார்கள்!'' என்று சொல்லிவிட்டுப் பறந்தார்!

தி.மு.க மீது திருமா கோபம்!

மிஸ்டர் கழுகு: ''நான் சந்தோஷமாக இல்லை!''

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர் நிலைக்குழுக் கூட்டம், தொல்.திருமாவளவன் தலைமையில் சென்னையில் நடந்தது. அந்தக் கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள் பலரும், ''விடுதலைச் சிறுத்தைகளின் ஓட்டுக்கள், தி.மு.க-வுக்கு விழவில்லை என்று தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் குறை சொல்கிறார்கள். தலித்கள் ஓட்டுக்கள் தி.மு.க கூட்டணிக்கு விழுந்துள்ளது என்பதற்கு பூத் வாரியாக ஆதாரங்கள் இருக்கின்றன. தி.மு.க-வினர்தான் நமக்கு வேலை செய்யவில்லை. இனி வரும் தேர்தல்களில் நாம் தனித்து நிற்போம்'' என்று பேசியிருக்கிறார்கள்.

வைரமுத்துவுக்கு மணிவிழா!

மிஸ்டர் கழுகு: ''நான் சந்தோஷமாக இல்லை!''

60 வயதை ஜூலை 13-ம் தேதி எட்டுகிறார் கவிஞர் வைரமுத்து. கலை இலக்கியத் திருவிழாவாக கோவையில் நடக்கிறது கொண்டாட்டம். பாராட்டு விழாவுக்கு முன்னதாக தமிழ் சார்ந்த விழிப்பு உணர்வை பரப்பும் வகையில் தமிழ்நடைப் பேரணி ஒன்று 12-ம் தேதி நடக்க இருக்கிறது. அனைத்துப் பள்ளிகளிலும் தமிழைக் கட்டாயம் ஆக்குங்கள், தேசிய நூலாக திருக்குறளை அறிவிக்க வேண்டும், நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக ஆக வேண்டும் என்பது இந்தப் பேரணியின் நோக்கங்களாம். அப்துல் கலாம் தொடங்கி பொன்னம்பல அடிகளார் வரை பங்கேற்கிறார்கள்.

'கருணாநிதி இல்லாமல் வைரமுத்து விழாவா?’ என்ற கேள்வி எழலாம். 'கோவையில் நடக்கிறது விழா. உங்களைத் தொந்தரவு செய்யவில்லை’ என்று வைரமுத்து​வே கருணாநிதியிடம் சொல்ல, அவர் அதனை ஆமோதித்துவிட்டாராம்.