படமாத்தூர் ஊராட்சியில் பல லட்சம் முறைகேடு செய்த அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டிருப்பது சிவகங்கை ஊரக வளர்ச்சித் துறையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தாலும் பல்வேறு அதிகாரிகளுக்கு வயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்திருக்கிறது.
ஊரக வளர்ச்சித் துறையில் முறைகேடுகள் நடந்தது குறித்து அதிகாரிகளிடம் பேசியபோது, அவர்கள் சொன்ன தகவல்கள் நமக்கு அதிர்ச்சியைத் தந்தது. ''சிவகங்கை மாவட்டத்தில் 445 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகள், நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில், ஒரு மண்டலத்துக்கான துணை வட்டார வளர்ச்சி அதிகாரியாக இருப்பவர் சங்கரன். இவர் தனக்குச் சாதகமான ஊராட்சிகளைத் தேர்வுசெய்திருக்கிறார். அங்குப் பணியாற்றும் ஊராட்சி செயலர்கள் குறிப்பிட்டச் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிற பஞ்சாயத்துகளைத் தேர்வு செய்திருக்கிறார். அப்படி அவர் தேர்வுசெய்த ஊராட்சிகள் குடம்சாடி, படமாத்தூர், அரசனி முத்துப்பட்டி, முடிகண்டம், இலுப்பக்குடி ஆகியவை. இந்த ஊராட்சிகளில் இருந்து படமாத்தூர் ஊராட்சிக்கு 49 லட்சத்து 67 ஆயிரத்து 84 ரூபாய் ஊழல் நடந்திருப்பதைக் கண்டுபிடித்தார் டெபுடி பி.டி.ஓ-வான ஜோதிஸ்வரி. சமீபத்தில், பாலாஜி தலைமையிலான குழு படமாத்தூர் ஊராட்சி உள்ளிட்ட ஊராட்சிகளைத் தணிக்கை செய்தது. அப்போது, இந்த முறைகேட்டைக் கண்டுபிடிக்கவில்லை. காரணம், இந்தப் பாலாஜி பற்றிச் சொல்ல வேண்டும் என்றால், தனிக்கதையே இருக்கிறது. இவர், ஆடிட்டர் வேலையைவிட மற்ற வேலைகளான வாங்கிக் கொடுக்கும் வேலையை நன்றாகவே பார்த்தார். இவரை, தணிக்கைக் குழுவில் இருந்து விலக்கினால்தான் உண்மை நிலவரம் தெரியவரும் என்று மேலிடத்துக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் அறிக்கை அனுப்பினார் திட்ட இயக்குநர். ஆனாலும், மாவட்ட ஆட்சியர் செவிசாய்க்கவில்லை. உடனே, ஊரக வளர்ச்சித் துறை ஆணையர் பாஸ்கரன், பணியில் இருந்து அவரைத் தற்காலிகமாக விலக்கிவைத்து உத்தரவிட்டார்.
பஞ்சாயத்துக்குப் பல்வேறு கணக்குகள் உண்டு. ஆனால், கணக்கு எண் ஒன்றுதான் மிகவும் முக்கியமானது. எத்தனை கோடி பணம் வந்தாலும் இந்தக் கணக்கில்தான் வரவு வைக்கப்படும். ஆனால் சங்கரன், கணக்கு எண் இரண்டுக்குப் பணத்தை மாற்றியிருக்கிறார். அதற்கு, பி.டி.ஓ அறிக்கையோடு செக் கொடுக்க வேண்டும். ஆனால், பிரபல வங்கியில் இருந்து பி.டி.ஓ அறிக்கை கொடுத்ததுபோல் தயார் செய்துகொடுத்திருக்கிறார் சங்கரன். இதற்கு அந்த வங்கியும் உடந்தையாக இருந்திருக்கிறது. பெரிய தொகையை வேறொரு கணக்குக்கு மாற்றும்போது செக் கேட்டிருக்க வேண்டும். ஆனால், அதை அந்த வங்கி கேட்கவில்லை. இதனால், மொத்தப் பணத்தையும் அபேஸ் செய்திருக்கிறார் சங்கரன்.
இந்த முறைகேடு கிளம்ப முதல் காரணமே, அரசாணி முத்துப்பட்டி பஞ்சாயத்துக்கு மின்சாரக் கட்டணம் செலுத்தவில்லை என்று நோட்டீஸ் வந்தபோதுதான் தெரியவந்தது. கணக்கு எண் இரண்டை செக் செய்தபோது பணம் இருக்கிறது. ஆனால், படமாத்தூர் ஊராட்சிக்கு மாற்றப்பட்டிருக்கிறது. படமாத்தூர் கணக்கைச் செக் செய்தபோது சுமார் ஐம்பது லட்சம் ரூபாய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பிறகுதான் விஷயம் பூதாகரமாக வெளியானது. உடனே, மாவட்ட ஆட்சித் தலைவர் ஆடிட் செய்ய உத்தரவிட்டார்கள்.
ஆனாலும், மாவட்ட ஆட்சியருக்கும் திட்ட இயக்குநருக்கும் இடையே உள்ள பணிமோதலால் முறைகேட்டுக்குச் சம்பந்தப்பட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில், சென்னையில் இருந்து துணை இயக்குநர்கள் மனோகர் சிங், ராஜஸ்ரீ, இணை உதவி இயக்குநர்கள், உதவி இயக்குநர் என ஐந்துபேர் கொண்ட குழு, தேவகோட்டை, சிவகங்கை, மானாமதுரை, திருப்பத்தூர், காளையார்கோவில் பகுதிகளில் இரண்டு நாள்களாகத் தணிக்கை செய்திருக்கிறார்கள். சிவகங்கை ஊராட்சியை, அங்குள்ள முத்துமகாலில் வைத்து விசாரணை அதிகாரிகள் ஆய்வு செய்தார்கள். ஒவ்வொரு மாதமும் ஃபாம் 13-ல் கையிருப்பு ரொக்கம் எவ்வளவு இருக்கிறது; அதற்கான வங்கிக் கணக்குப் புத்தகம் அனைத்தையும் கணக்கில் காட்ட வேண்டும். மேலும், இந்த ஆடிட்டர்கள் என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை. இதன் உடந்தையில் அவர்களுக்கும் தொடர்பு இருக்கும் என்று சந்தேகம் இருக்கிறது. கைதுசெய்யப்பட்ட சங்கரன் திருச்சி மத்திய சிறையிலும், ஊராட்சி செயலர்கள் மருதமுத்து (முடிகண்டம்), ராஜா (இலுப்பகுடி), கிருஷ்ணன் (குடம்சாடி), முத்துப்பாண்டி (பில்லூர்) ஆகியோர் மதுரை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
தணிக்கை அதிகாரியான பாலாஜியை, விசாரணை அதிகாரிகள் முறையாக விசாரித்தால்... தனிநபர் கழிப்பறை கதவு டெண்டர்முதல் அனைத்தும் வெளியே வரும். பலகோடி ஊழல் பூதமும் வெளியே கிளம்பும். இந்தப் பூதம் கிளம்புவதற்கு முன்னாடியே விலகி ஓடிடலாம் என்று முடிவுசெய்து, இரண்டு மாதங்களுக்கு முன்பே வீ.ஆர்.எஸ் கேட்டு கலெக்டரிடம் மனுகொடுத்திருக்கிறார் பாலாஜி. விசாரிக்க வேண்டிய நேர்மையான அதிகாரிகள் இன்னும் முறையாக விசாரித்தால், சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் பலகோடி ஊழல் வெளிச்சத்துக்கு வருவதோடு, அது யார்யாருக்கு எல்லாம் தாரைவார்க்கப்பட்டிருக்கிறது என்கிற விசயமும் வெளியே வரும்'' என்கிறார்கள் அந்த அதிகாரிகள்.
ராஜாராம் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, ஆலங்குளம் பஞ்சயாத்தில் 36 லட்சம் ரூபாய் இதேபோல் கையாடல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.