Published:Updated:

மதுரை திமுகவில் பிளவா?: மு.க.அழகிரி மறுப்பு!

Vikatan Correspondent
மதுரை திமுகவில் பிளவா?: மு.க.அழகிரி மறுப்பு!
மதுரை திமுகவில் பிளவா?: மு.க.அழகிரி மறுப்பு!
மதுரை திமுகவில் பிளவா?: மு.க.அழகிரி மறுப்பு!

மதுரை:  மதுரை திமுகவில் பிளவு எதுவும் ஏற்பட்வில்லை என்றும், அதைப்பற்றி தாம்   நினைக்கவும் இல்லை என்றும்  மத்திய அமைச்சரும், திமுக தென்மண்டல அமைப்பு  செயலாளருமான மு.க. அழகிரி கூறியுள்ளார்.

மு.க.அழகிரி கடந்த 15 நாட்கள் அரசு முறைப்பயணமாக ஜப்பான் சென்றிருந்தார்.  தனது சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு நேற்று சென்னை வந்த அவர், விமானம்  மூலம் மதுரை வந்தார்.

மதுரை விமான நிலையத்தில் ஏராளமான திமுகவினர் திரண்டு வந்து மு.க.அழகிரியை  வரவேற்றனர்.

மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்களான மதுரை நகர் மாவட்ட திமுக செயலாளர்  கோ.தளபதி,முன்னாள் அமைச்சர் பொன்.முத்து ராமலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ.  வேலுச்சாமி,முன்னாள் மேயர் குழந்தை வேலு,முன்னாள் மண்டலத் தலைவர் குருசாமி,  இளை ஞரணி செயலாளர் ஜெயராம் உள்ளிட்ட திமுகவினர் மு.க.அழகிரியை வரவேற்க  விமான நிலையத்திற்கு வராமல் புறக்கணித்தனர்.இதனால் மதுரை திமுகவில் மீண்டும்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில்,விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அழகிரியிடம்,
மதுரை திமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறதே? அதுபற்றி உங்கள் கருத்து  என்ன?என்று கேட்டபோது,"அப்படி ஒன்றும் இல்லை. நான் இதைப்பற்றி நினைக்கவும்  இல்லை. ஆனால் நான் மனசாட்சிபடி நடக்கிறேன்” என்று பதிலளித்தார்.

##~~##
நீங்கள் ஜப்பானில் இருந்து மதுரை திரும்பியதும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று  திமுகவினர் கூறியிருக்கிறார்களே? என்று கேட்டதற்கு,"எதுவும் கிடையாது.  அனைவரும் கட்சி வேலை பார்ப்போம்” என்று கூறினார் அழகிரி.
நில அபகரிப்பு வழக்கில் தி.மு.க.வினர் தொடர்ந்து கைது செய்யப்படுகிறார்களே? என்று  கேட்டபோது,"இந்த வேலையை தவிர அதிமுக அரசு வேறு எந்த வேலையும்  செய்யவில்லை” என்றார்.