Published:Updated:

“பிக் பாஸ் ரசிகர்களே... நான் சீக்கிரமே சாகப்போகிறேன்!’’ - இப்படிக்கு ஒரு சர்க்கஸ் கூடாரம்

“பிக் பாஸ் ரசிகர்களே... நான் சீக்கிரமே சாகப்போகிறேன்!’’ - இப்படிக்கு ஒரு சர்க்கஸ் கூடாரம்
“பிக் பாஸ் ரசிகர்களே... நான் சீக்கிரமே சாகப்போகிறேன்!’’ - இப்படிக்கு ஒரு சர்க்கஸ் கூடாரம்

மீபத்தில் கோவையில் நடைபெற்ற,  ‘தி கிரேட் பாம்பே சர்க்கஸ்’ பார்க்கச் சென்றிருந்தேன். கூட்டமெல்லாம் பெரிதாக இல்லை. மிஞ்சிப்போனால் 100 பேர் வந்திருப்பார்கள்.  அந்த 100 பேரை மகிழ்விக்க 50-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் உயிரைக்கொடுத்து போராடிக் கொண்டிருந்தார்கள்.  ஆயிரம் ஆயிரம் மனிதர்களைச் சந்தித்த அந்தக் கூடாரத்திற்கு நூறு என்பது வெகு சொற்ப எண்ணிக்கை. காலம் செய்த கோலம். களையிழந்து கிடக்கிறது அந்தக் கூடாரம். விதியை நொந்துகொண்டு வேறு வழி இல்லாமல், பிரம்மிக்க வைக்கும் விதவிதமான சாகசங்களை ஆண், பெண் பாரபட்சம் இல்லாமல் அரங்கேற்றிக்கொண்டிருந்தார்கள் சர்க்கஸ்காரர்கள். ஏதேதோ மாநிலங்களில் பிறந்து சர்க்கஸ் என்ற வார்த்தையில் ஒன்றுகூடி ஊர் ஊராக சுற்றிக்கொண்டிருக்கும் அவர்களின் வாழ்க்கை எத்தனை விசித்திரமான சித்திரம்?   

ஒற்றைக்கயிறில் அந்தரத்தில் தொங்கிய அந்த  பெண்ணைப் பார்த்தபோது அவரோடு  அவர்  எதிர்காலமும் சேர்ந்து தொங்குவதைப்போலவே தோன்றியது.  கூரான வாள்மீது  நின்ற இளைஞரின்  கால்கள் வெட்டுப்படவில்லையெனினும் அவர் வாழ்க்கை இன்னும் சிலநாள்களில் துண்டாடப்படலாம் என்ற துயரம்  அழுத்தியது. தரையில் நின்றுகொண்டு மெல்லிய  கயிற்றின் மூலம் பம்பரத்தைக் கூடாரத்தின் உச்சியில் ஏற்றி, தவறவிடாமல் கீழிறக்கும் அந்த இளைஞர் இன்னும் எத்தனை நாள்களுக்கு  பம்பரம் விட்டுப் பிழைக்கப்போகிறார்.? தொங்கும் தொப்பையை இறுக்கிப்பிடித்த ரப்பர் உடைகளை மாட்டிக்கொண்டு, கால்களின் பிடியை ஒரு கயிறிடம் கொடுத்துவிட்டு,  தலைகீழாகத் தொங்கியபடி நான்கைந்து இளைஞர்களைக் கையில் தூக்கி வீசும் அந்த நாற்பதைத் தாண்டிய  மனிதர்   இன்னும் சிலநாள்களில் எங்கோ தூக்கி வீசப்படப்போகிறார்தானே?  கூட்டம் இல்லாத சர்க்கஸையும், எதையும் பொருட்படுத்தாது சாகசம் செய்யும் கலைஞர்களையும் பார்த்தபோது மனதில் துயரம் கவிழ்ந்தது. பார்க்கச் சகிக்காமல் கூடாரத்தின் வெளியே வந்து அமர்ந்தேன். 

ஒரு காலத்தில் இந்த சர்க்கஸ் கூடாரம் எப்படி இருந்தது.? எவ்வளவு மக்கள் இதற்குள் திரள்வார்கள். எவ்வளவு கைத்தட்டல்கள், எத்தனை விசில் சத்தங்கள். காலத்தின் முன்னால் எல்லாம் கரைந்துபோய்விட்டது. கட்டுச்சோறு கட்டிக்கொண்டு  கட்ட வண்டியில் ஏறிவந்து.. மணிக்கணக்காக  காத்துக்கிடந்து சர்க்கஸ் பார்த்தவர்களின் தலைமுறைகளெல்லாம் இன்றைக்கு பிக் பாஸில் மூழ்கி கிடக்கிறார்கள். கேமிராக்களும் டிவியும் இல்லாத காலத்தில்  இந்த சர்க்கஸ்தானே நமெக்கெல்லாம்  பிக் பாஸ்?  பருவ வயதைக் கடந்து கிழடுதட்டிப்போய் மரணத்தின் கடைசிப்படிக்கட்டில்  நிற்கும் கிழவியைப் போல காட்சியளிக்கிறதே இந்த சாகச சாம்ராஜ்யம்.? யாருக்கும் தெரியாமல் என் மனதோடு பேசிக்கொண்டிருந்ததை எப்படியோ கேட்டுவிட்டது அந்த சர்க்கஸ் கூடாரம்.  

“அடச்சீ... ஏன்டா இப்படியெல்லாம் யோசிச்சிகிட்டு உட்காந்திருக்க. இதுவரைக்கும் என்னைத்தேடி வந்த யாரையும் நான் கவலைப்பட வச்சதே இல்லை. கவலையோட வர்றவங்களைக் கூட மகிழ்ச்சியோடு திருப்பி அனுப்புறதுதான் என் வேலை. அப்படிப்பட்ட  என் மடியில உட்கார்ந்துகிட்டு.. என்னை நினைச்சு ஒருத்தன் கலங்குறது எனக்கு என்னமோ மாதிரி இருக்கு. மாற்றம் ஒன்றே மாறாததுனு நீ.. படிச்சது இல்லையா.? இந்த உலகத்துல நிமிஷத்துக்கு நிமிஷம் எல்லாமே மாறிகிட்டு இருக்கு. இப்படி ஒவ்வொன்றையும் நினைச்சு நீ... கவலைப்பட்டா உன் வாழ்க்கையே கவலையா மாறிடும்.” என்று சர்க்கஸ் கூடாரம் ஆறுதல் சொல்ல  நான் திகைத்து நிமிர்ந்தேன். ஒன்றும் புரியாததுபோன்ற முகபாவனையோடு... நீ என்ன சொல்ல வர்ற? தெளிவா சொல்லு! சர்க்கஸ் கூடாரத்தைப் பார்த்து நான் கேட்க, மெல்லிய சிரிப்போடு ஆரம்பித்தது அந்தக் கூடாரம்...

''இந்த பூமியில இருக்க எல்லா உயிருக்கும், பொருளுக்கும்  ஏன்  கலைக்கும்கூட  ஆயுள் காலம்னு ஒண்ணு இருக்கு. காலம் எனும்  சுனாமி எல்லாத்தையும்  ஒவ்வொன்னா அடிச்சிகிட்டு போயிகிட்டே இருக்கும். ‛காலத்துகிட்டே இருந்து யாரும் ஓடவும் முடியாது. ஒளியவும் முடியாது’' என்று சர்க்கஸ் கூடாரம் சொல்லி நிறுத்திய நொடியில், ஐஸ்கிரீம் பார்லர்களால் அழிக்கப்பட்ட  ஐஸ் வண்டி அண்ணன்களும்... செல்ஃபோன் கேமிராக்களுள் செத்துக்கிடக்கும்  ஸ்டுடியோக்கார அங்கிள்களும்...  செல்ஃபோன் ஆப்களுக்கு தங்கள் வாழ்வாதாரத்தை பறிகொடுத்துக்கொண்டிருக்கும் ஆட்டோக்காரர்களும் என் நினைவில் வந்துபோனார்கள்.

பேச்சைத் தொடர்ந்த சர்க்கஸ் கூடாரம்,  “எனக்கும் வருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனால்,  நான் அழியப்போறேங்கிறதுக்காகவோ இல்லை இன்றைய தலைமுறைக்கு சர்க்கஸ் என்ற பெயரே தெரியாமல் போய்விடும் என்பதற்காகவோ இல்லை. என்னை நம்பி இருக்கும் நூத்துக்கணக்கான சர்க்கஸ் கலைஞர்களை நினைச்சு நான் தினமும் வருந்துறேன். ஏன்னா மத்த வேலைகளைப்போல இங்க இருக்கவங்க ஏதோ ஒரு வேலையா  நெனைச்சி இதைச் செய்யலை. செய்யவும் முடியாது. இது ஒரு கலை. இது ஒரு தவம்.  பத்து வயசுலேயிருந்து சர்க்கஸுக்கு பழக்குனாதான் அந்த உடம்பு ரப்பர் மாதிரி எல்லாத்துக்கும் வளைஞ்சு கொடுக்கும். இப்ப என் கூடாரத்துக்குள்ள இருந்து சாகசம் செய்யுறவங்க எல்லாம் அப்படி சின்ன வயசுலயே வந்தவங்கதான். ரசிகர்களை மகிழ்விக்கிறதுக்காக  தங்கள் வாழ்க்கையையே பலி கொடுத்தவர்கள் இங்க இருக்கும்  சர்க்கஸ் கலைஞர்கள். அவுங்களுக்கு இதுதான் உலகம். சொந்த வீடு, ஊரு, மக்கள், என எல்லாத்தையும் விட்டுட்டு முகம் தெரியாத மனுஷங்களை சந்தோஷப்படுத்த அலைகிற சர்க்கஸ் கலைஞர்களோட இன்றைய நிலை ரொம்பவும் பரிதாபமா இருக்கு.  வாழ்நாள் முழுக்க எல்லாரையும் சந்தோஷப்படுத்திகிட்டே இருந்தவங்க.. அவங்க கடைசி காலத்துல பொருளாதார ரீதியா ரொம்பவும் கஷ்டப்படுறாங்க.  பல சர்க்கஸ் கம்பெனிகள் இழுத்து மூடிட்டாங்க. இன்னும் ஒண்ணு ரெண்டுதான் செயல்பாட்டுல இருக்கு. அதுவும் பெருசா வருமானம் வரலை. இன்னைக்கோ நாளைக்கோனு இழுத்துகிட்டு, கடன்லதான் இயங்கிட்டு இருக்கு.  இன்னைக்கு எல்லார் கையிலயும் இருக்கிற செல்ஃபோன்லயே போதும்ங்கிற அளவுக்குப் பொழுதுபோக்கு வந்திருச்சி. எல்லாம் டெக்னாலஜி என்னும் மாய உலகை நோக்கி ஓட ஆரம்பிச்சிட்டாங்க. அதனால, எனக்கு ரொம்ப நாளைக்கு இங்கு வேலை இல்லை. சீக்கிரமே நான் சாகப்போகிறேன். மக்களோட ரசனை மாற்றமும் டெக்னாலஜி வளர்ச்சி மட்டும் என் சாவுக்குக் காரணமில்லை’’ - என்று பொடிவைத்துப் பேசியது கூடாரம். மீண்டும் எனக்குள் குழப்பம்.

அதற்கும் சளைக்காமல்  பதில் சொன்னது அந்தக் கூடாரம், “முன்பெல்லாம் சிங்கம், புலி, யானை, ஒட்டகம் என ஏராளமான மிருகங்கள் என் கூடாரத்துக்குள் இருந்துச்சி. அந்த விலங்குகளைக் காட்டுவதற்காகவே குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு குடும்பம் குடும்பமாக என்னைத்தேடி மக்கள் ஓடி வருவாங்க. அரசாங்கம் சர்க்கஸ்ல விலங்குகளைத் துன்புறுத்துறதா சொல்லி எல்லாத்தையும் பிடுங்கிருச்சி. அப்பவே என் பாதி உசிரு போயிடுச்சி. அப்புறம், புதுப்புது சர்க்கஸ் கலைஞர்கள் உருவாகுறதுல சிக்கல் பண்ணாங்க. பத்து பதினைஞ்சு வயசுலயே யாருக்காச்சும் சர்க்கஸ் பயிற்சி கொடுத்தா குழந்தை தொழிலாளர்னு சொல்லி சர்க்கஸ் கம்பெனிகாரங்க மேல  அரசாங்கம் ஆக்‌ஷன் எடுக்குது? கலையும் ஒரு படிப்புதானே? சிலம்பம் கத்துக்கிறது சினிமா கத்துக்கிறது மாதிரிதானே சர்க்கஸும்? இது ஏன் அரசாங்கத்துக்கு புரிய மாட்டேங்குது. ஒரு கலையைக் காப்பது அரசாங்கத்தோட அடிப்படை கடமைதானே?’- என்று கேட்ட சர்க்கஸ்கூடாரம் ''நான் உயிரோட இருக்கும் வரைக்கும் என் கலைஞர்களுக்கு சோறுபோடணும். அவங்களைக் காப்பத்தணும்.. என் கடைசிகாலம் வரைக்கும் என்னை நாடி வர்ற எல்லோரையும் சிரிக்க வெச்சுகிட்டே இருக்கணும். சாகக் கிடக்கிற இந்த சர்க்கஸ் எந்த ஊர்ல போட்டாலும் கடைசியா வந்து கண்ணாற பாத்துட்டுப்போங்கனு இன்றைய பிக் பாஸ் ரசிகர்கள்கிட்ட போய் சொல்லு” என்றபடி தன் பேச்சை நிறுத்திக்கொண்டது.

சொல்லிட்டேன்.!