Published:Updated:

’கட்டணக் கொள்ளை:மருத்துவ கல்லூரிகள் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்’

Vikatan Correspondent
’கட்டணக் கொள்ளை:மருத்துவ கல்லூரிகள் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்’
’கட்டணக் கொள்ளை:மருத்துவ கல்லூரிகள் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்’
’கட்டணக் கொள்ளை:மருத்துவ கல்லூரிகள் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்’

சென்னை:  கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் தனியார் மருத்துவ கல்லூரிகளின்  அங்கீகாரத்தை ரத்து செய்ய  வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று விடுவித்துள்ள அறிக்கையில்,"தமிழ்நாட்டில் மருத்துவ  கல்லூரி மாணவர் சேர்க்கை முடிவடைந்து வகுப்புகள் தொடங்கியுள்ள நிலையில்,  தனியார் மருத்துவ கல்லூரிகளில் நடைபெறும் கட்டணக் கொள்ளைகள் குறித்து  அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ்நாட்டில் மொத்தம் 13 தனியார்  மருத்துவ கல்லூரிகள் உள்ளன.

அவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேரும் மாணவர்களிடம், கல்லூரிகளில் உள்ள  அடிப்படை கட்டமைப்பு வசதிகளை பொறுத்து ரூ. 2.3 லட்சம் முதல் ரூ. 2.8 லட்சம்  வரையும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.6 லட்சமும் கட்டணமாக வசூலிக்கப்பட  வேண்டும் என்று நீதியரசர் பாலசுப்பிரமணியம் தலைமையிலான கட்டண நிர்ணயக்குழு  ஆணையிட்டிருக்கிறது.

ஆனால் பெரும்பாலான தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேரும்  மாணவர்களிடம் அரசுக்குழு நிர்ணயித்ததைவிட அதிக மாக ரூ.7 லட்சம் கட்டணம்  செலுத்தும்படி கல்லூரி நிர்வாகங்கள் கட்டாயப்படுத்துவதாக மாணவர்கள் குற்றம்  சாட்டியுள்ளனர்.

பல மாணவர்கள் கடன் வாங்கி கட்டணம் செலுத்தியுள்ளனர். ஆனால், கடன் வாங்க  வழியில்லாத மாணவர்கள் கட்டணம் செலுத்த இயலாததால் கல்லூரியில் சேர முடியாமல்  தவிக்கின்றனர். குறிபிட்டக் காலத்திற்குள் கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு இடம்  இல்லை என சில கல்லூரி நிர்வாகங்கள் கூறி விட்டதால், அந்த மாணவர்கள் கிடைத்த  இடத்தை விட்டுவிட்டு வேறு படிப்பில் சேர வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

தனியார் கல்லூரிகளின் கட்டணக்கொள்ளை காரணமாக ஒரு மாணவன் கிடைத்த  மருத்துவ கல்லூரி இடத்தில் சேர முடியாத நிலை நிலவுவது பெரும் அவலம் ஆகும்.  மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடர்பான மோகினி கிரி வழக்கில், கல்வி  பெறும் உரிமை அடிப்படை உரிமையாகும்.

##~~##
கல்விக் கட்டணம் செலுத்தாததற்காக எந்த மாணவருக்கும் மருத்துவ கல்லூரியில் இடம்  மறுக்கப்படக்கூடாது. அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம்  வசூலிக்காமல் தனியார் மருத்துவக் கல்லூரிகளை கட்டுப்படுத்த வேண்டியது அவற்றுக்கு  அங்கீகாரம் அளித்த அரசின் கடமையாகும் என்று கடந்த 1992-ஆம் ஆண்டில் உச்ச  நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து 20 ஆண்டுகளுக்கு பிறகும் மருத்துவக் கல்லூரிகளில்  கல்விக் கட்டணக் கொள்ளை தொடர்வது தமிழகத்தை ஆண்ட மற்றும் ஆளும் கட்சிகள்  கடமை தவறிவிட்டதையே காட்டுகிறது. இனியும் இந்த அவலம் தொடரக்கூடாது.
தமிழகத்தில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் நடைபெறும் கல்விக் கட்டணக் கொள்ளை  குறித்து தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும். தவறு செய்த மருத்துவக்  கல்லூரிகளின் அங்கீகாரத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.