Published:Updated:

மக்களை அலைக்கழித்த ஓ.பன்னீர்செல்வம்!

மக்களை அலைக்கழித்த ஓ.பன்னீர்செல்வம்!
மக்களை அலைக்கழித்த ஓ.பன்னீர்செல்வம்!

தேனி மாவட்டம் லெட்சுமிபுரம் கிணறு பிரச்னை கடந்த ஒரு மாதமாக நீடித்துவந்த நிலையில், சர்ச்சைக்குரிய அந்தக் கிணற்றை தானமாக வழங்க ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சம்மதித்துள்ளனர். நேற்று பத்திரப்பதிவு நடத்தப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், வரும் திங்கள் பத்திரப் பதிவை வைத்துக்கொள்ளலாம் என்று திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், கடுமையான தொடர்போராட்டங்களுக்கு மத்தியில், கிணற்றை மீட்டிருக்கும் நிலையில், ஊர் பொதுமக்கள் அனைவரும் இணைந்து, மழை வேண்டி நேற்று காலை ஊரில் உள்ள காளியம்மன் கோவிலில் பொங்கலிட்டு, கூழ் காய்ச்சி வழிபாடு நடத்திக்கொண்டிருந்தனர். இதனை அறிந்த ஓ.பி.எஸ் தரப்பு, ஊருக்குள் வந்து, “கிணற்றைப் பார்வையிட பன்னீர்செல்வம் இங்கே வர இருக்கிறார்.” என்று தெரிவித்தனர். இதனைக் கேட்ட மக்கள், கிணற்றுக்குச் செல்ல ஆயத்தமானார்கள். பத்திரிகையாளர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

எல்லோரும் தயாராக இருந்த நேரத்தில், பன்னீர்செல்வம் தனது வீட்டில் சாப்பிட்டுவிட்டு தூங்கிக்கொண்டிருக்கிறார் என்று தகவல் கிடைத்தது. நம்மைத் தயாராக இருக்கச்சொல்லிவிட்டு ஏன் இப்படிச் செய்தார் என்று மக்கள் மத்தியிலும், பத்திரிகையாளர்கள் மத்தியிலும் சலசலப்பு உண்டானது. உடனே நிலைமையைச் சரி செய்ய, பன்னீர்செல்வத்தின் நெருங்கிய நண்பரான சுப்புராஜ் அந்தக் கிணற்றைப் பார்வையிட்டு, நிலம் சம்மந்தமாக கிராம முக்கியஸ்தர்களிடம் பேசவிருப்பதாகத் தகவல் கிடைத்தது. ஆனால், கடைசிவரை அவரும் வரவில்லை. பத்திரிகையாளர்களும், கிராமப் பொதுமக்களும் அதிருப்தியடைந்தனர். “இன்னைக்கு ஆடி வெள்ளி, வருசா வருசம் சந்தோசமா கூல் காய்ச்சி, பொங்கல் வச்சு சாமி கும்பிடுவோம். ஆனால், இந்த வருசம்தான் இப்படி நடந்திருக்கு. இருந்தாலும், கிணற்றை ஊர் மொத்தமும் கூடி நின்னு மீட்டது எங்களுக்குப் பெரிய சந்தோசம்தான்.!” என்றனர் கிராம மக்கள்.!