Published:Updated:

காவல் நிலையத்தில் புகுந்து கைதியைக் கடத்திய ரவுடிகள்..! சினிமா பாணியில் நடந்த அதிரவைக்கும் சம்பவம்!

காவல் நிலையத்தில் புகுந்து கைதியைக் கடத்திய ரவுடிகள்..! சினிமா பாணியில் நடந்த அதிரவைக்கும் சம்பவம்!
காவல் நிலையத்தில் புகுந்து கைதியைக் கடத்திய ரவுடிகள்..! சினிமா பாணியில் நடந்த அதிரவைக்கும் சம்பவம்!

நெல்லை மாவட்டம் நாங்குநேரி காவல்நிலையத்துக்குள் நுழைந்து போலீஸாரை அரிவாளால் வெட்டிவிட்டு கைதியைக் கடத்திச் சென்ற கும்பலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய ரவுடிகளைப் பிடிக்க போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

குளத்தில் உள்ள கரம்பை மண்ணை அள்ளி விவசாயத்துக்குப் பயன்படுத்திக்கொள்ள தமிழக அரசு அனுமதித்துள்ளது. அதன்படி விவசாயிகள் குளத்தில் இருந்து மண் அள்ளி வருகின்றனர். நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மஞ்சக்குளத்தில் மண் அள்ளப்பட்டு வருகிறது. அருகில் உள்ள மறுகால்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த சிலரும் அந்தக் குளத்தில் மண் அள்ளி வருகின்றனர்.

இது தொடர்பாக மஞ்சக்குளத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கும் மறுகால்குறிச்சி கிராமத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து, மறுகால்குறிச்சி கிராமத்தினர் சிலர் மஞ்சக்குளம் கிராமத்துக்குச் சென்று ஆறுமுகம் என்பவரைத் தேடி இருக்கிறார்கள். அவர் இல்லாததால் அவரது அண்ணன் சுடலைக்கண்ணு என்பவரது வீட்டுக்குச் என்று அடித்து நொறுக்கினர். இது தொடர்பாக போலீஸில் புகார் செய்யப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீஸார் மறுகால்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த இருவரைப் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் ஒருவருக்குத் தொடர்பு இல்லாததால் அவரை விடுவித்துவிட்டனர். உதயகுமார் என்பவருக்கு சுடலைக்கண்ணு வீட்டை அடித்து நொறுக்கியதில் தொடர்பு இருப்பது தெரியவந்ததால், அவரை ரிமாண்ட் செய்ய திட்டமிட்டு வாகனத்தில் அழைத்துச் சென்றனர். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் போலீஸ் வாகனத்தை மறித்தது.

பின்னர், அவர்கள் வாகனத்தில் இருந்த உதயகுமாரை விடுவிக்க வேண்டுமென வலியுறுத்தினர். ஆனால், காவலர்களான சதீஷ்குமார், தர்மராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்ட உதயகுமாரை விடுவிக்க மறுத்து விட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த அந்தக் கும்பல் காவலர்கள் இருவரையும் அரிவாளால் வெட்டிவிட்டு, கைதியான உதயகுமாரை விடுவித்து அழைத்துச் சென்று விட்டனர். இதுபற்றி உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து போலீஸார் விரைந்து சென்று காயமடைந்த காவலர்களை மருத்துவ சிகிச்சைக்கு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.  

இந்த விவகாரம் காரணமாக நாங்குநேரி பகுதியில் பதற்றம் நிலவுகிறது. இதனால் ஏராளமான போலீஸார் பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டு உள்ளனர். மறுகால்குறிச்சி கிராமத்துக்குச் சென்று கைதியைக் கடத்திச் சென்ற நபர்களைத் தேடி வருகின்றனர். இதனிடையே, போலீஸ் பிடியில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட உதயகுமார் தலைமறைவாக இருக்கிறார். அவரையும் அவரை விடுவித்தவர்களையும் பிடிக்க போலீஸார் தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர்.   இதனிடையே, நாங்குநேரி காவல் நிலைய ஆய்வாளர் சுரேஷ் பெலிக்ஸ் பீட்டர் ஆயதப்படைக்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்.