Election bannerElection banner
Published:Updated:

மன்னார்குடி குடும்பமா... அ.தி.மு.க அமைச்சர்களா..? சக்கர வியூகத்தில் சிக்கியிருப்பது யார்..?

மன்னார்குடி குடும்பமா... அ.தி.மு.க அமைச்சர்களா..? சக்கர வியூகத்தில் சிக்கியிருப்பது யார்..?
மன்னார்குடி குடும்பமா... அ.தி.மு.க அமைச்சர்களா..? சக்கர வியூகத்தில் சிக்கியிருப்பது யார்..?

மன்னார்குடி குடும்பமா... அ.தி.மு.க அமைச்சர்களா..? சக்கர வியூகத்தில் சிக்கியிருப்பது யார்..?

யிரோடு இருக்கும்வரை ஜெயலலிதாவின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டுக்கிடந்த அ.தி.மு.க நிர்வாகிகள், இப்போது ஆளாளுக்கு நாட்டாமை செய்துவருகிறார்கள். வெளியே தலைகாட்டாமல் அடங்கி ஒடுங்கி இருந்த மன்னார்குடி குடும்பத்தார், இப்போது ஒவ்வொரு பிரச்னையிலும் கருத்துகளைச் சொல்லி, அ.தி.மு.க-வுக்குள் கலகத்தை உருவாக்கிவருகிறார்கள். ''சக்கர வியூகத்தில் அ.தி.மு.க சிக்கியிருக்கிறது'' என்ற திவாகரனின், 'லேட்டஸ்ட் கமென்ட்'  அங்கே, அதிகார மோதலில் உழன்றுகொண்டிருக்கும் பிரச்னைகளை அம்பலப்படுத்தியிருக்கிறது.

அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டு, 75 நாள்களுக்குப் பிறகு உயிரற்ற உடலாகப் போயஸ் தோட்டத்துக்குக் கொண்டுவரப்பட்டார் ஜெயலலிதா. 2016-ம் ஆண்டு, டிசம்பர் 5-ம் தேதி, மெரினா கடற்கரையில் அவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்டதும், சசிகலாவின் உறவுகள் போயஸ் தோட்டத்துக்குள் வந்து கோலோச்சின. அந்த அதிகார மோதலில்தான் ஓ.பன்னீர்செல்வம் ஓரங்கட்டப்பட்டார். அவர், சசிகலாவுக்கு எதிராகப் பொங்கி எழுந்த பிறகு, அ.தி.மு.க உடைந்தது... கட்சிக்கொடி முடக்கப்பட்டது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரன் சார்பில் வாக்கு சேகரித்த எடப்பாடி பழனிசாமி உள்பட, அமைச்சர்கள் பலர் வருமான வரித்துறை சோதனையில் சிக்கினர். அத்துடன், 89 கோடி ரூபாய் பணப் பரிமாற்ற ஆவணம், அமைச்சர்களின் தலைக்குமேல் கத்தியாகத் தொங்கிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில்தான், தேர்தல் ஆணையத்துக்குப் பணம் கொடுக்க முயன்றார் என்று டி.டி.வி.தினகரன் கைதுசெய்யப்பட்டு, திஹார் சிறையில் அடைக்கப்பட்டுப் பின்னர் வெளியேவந்த அவர், பெங்களூரு சிறையில், ஜூன் 4-ம் தேதி சசிகலாவைப் பார்த்துவிட்டு, ''60 நாள்கள் பொறுத்திருக்கச் சொல்லியிருக்கிறார் சசிகலா. அதற்குப் பிறகு, கட்சி நடவடிக்கைகளில் ஈடுபடுவேன்'' என்று அறிவித்தார். அவர் சொன்ன ஆகஸ்ட் 5-ம் தேதி கெடு, இன்னும் சில நாள்களில் வர இருக்கிறது. அதற்குள், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் இணைய, பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கிறது. மேலும், இவர்கள் இருவருமே போட்டிபோட்டுக்கொண்டு மத்திய அரசுக்கு ஆதரவளிப்பது, மன்னார்குடி குடும்பத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கட்சி, ஆட்சி என்ற அதிகாரப் போதையைச் சுவைக்க முடியாமல் ஓரங்கட்டப்பட்டுவருகிறோமோ என்ற பயம், மன்னார்குடி குடும்பத்தாருக்கு இப்போது வந்துள்ளது.

அதன் வெளிப்பாடுதான், சசிகலாவின் அண்ணியும், டி.டி.வி.தினகரனின் மாமியாருமான சந்தானலட்சுமி இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் சசிகலா குடும்பம் (சசிகலாவைத் தவிர) ஒன்றுதிரண்டு நின்றது. மகாதேவன் மரணத்தின்போது, ஆளுக்கொரு மூலையில் உட்கார்ந்திருந்தவர்கள், சந்தானலட்சுமி இறுதி அஞ்சலியின்போது ஓரணியாகத் திரண்டு நின்றார்கள். அப்போது திவாகரன் நிருபர்களிடம்,  ''அமைச்சர்கள் இங்கே வரவில்லை என்ற வருத்தம் எங்களுக்கு இல்லை. கட்சியில் என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கட்சி வேறு; ஆட்சி வேறு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். தற்போது, சோதனையான காலகட்டம். சக்கர வியூகத்தில் மாட்டிக்கொண்ட அபிமன்யூபோல அ.தி.மு.க சிக்கித் தவிக்கிறது. அதை எப்படியும் மீட்போம். எங்கள் குடும்பத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம்'' என்றார்.

வருமான வரித்துறை சோதனையில் அமைச்சர்கள் பெயர்கள், பான்-குட்கா லஞ்சப் புகார், டி.ஜி.பி மீது குற்றச்சாட்டு என்று ஆட்சி நிர்வாகம் பல சிக்கலில் சிக்கியிருக்கிறது. இரட்டை இலைச் சின்னம் பெற லஞ்சம், பெங்களூரூ ஜெயிலில் சொகுசு வாழ்க்கைக்கு இரண்டு கோடி ரூபாய் லஞ்சம், அமலாக்க வழக்கு விசாரணை வளையத்தில் சசிகலா, தினகரன் என்று ஆங்காங்கு செக் வைக்கப்பட்டு, அ.தி.மு.க அமைச்சர்களும் மன்னார்குடி வகையறாக்களும் விழிபிதுங்கி நிற்கிறார்கள். ஆட்சி, அதிகாரத்தில் கோலோச்சலாம் என்ற மன்னார்குடி வகையறாக்கள் கனவும் சிதைந்து சிதறிக்கிடக்கிறது. இப்படி ஆங்காங்கு செக் வைக்கப்பட்டு, சக்கரவியூகத்தில் மாட்டி இருப்பது மன்னார்குடி வகையறாக்களா, அமைச்சர்களா, அ.தி.மு.க-வா என்று அ.தி.மு.க தொண்டர்கள் ஏக்கப்பெருமூச்சோடு பார்க்கிறார்கள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு