Published:Updated:

திருவண்ணாமலை, திருப்பூர் மாவட்டத்தில் 2 புதிய தாலுகாக்கள்: ஜெ.உத்தரவு!

திருவண்ணாமலை, திருப்பூர் மாவட்டத்தில் 2 புதிய தாலுகாக்கள்: ஜெ.உத்தரவு!
திருவண்ணாமலை, திருப்பூர் மாவட்டத்தில் 2 புதிய தாலுகாக்கள்: ஜெ.உத்தரவு!
திருவண்ணாமலை, திருப்பூர் மாவட்டத்தில் 2 புதிய தாலுகாக்கள்: ஜெ.உத்தரவு!

சென்னை: திருவண்ணாமலை மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் 2 புதிய  தாலுகாக்கள் அமைக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
 
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "திருவண்ணாமலை  மாவட்டம், போளூர் வட்டத்திலுள்ள 9 குறுவட்டங்களில் 3 குறுவட்டங்களான  கலசப்பாக்கம், கடலாடி, கேட்டவரம்பாளையம் ஆகிய  உள்வட்டங்களை உள்ளடக்கி   புதியதாக கலசப்பாக்கம் என்ற வட்டத்தினை (தாலுகா) உருவாக்க முதலமைச்சர்  ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
 
இந்த புதிய வட்டத்தில் பணியாற்றுவதற்காக வெவ்வேறு நிலைகளில் மறுபணி  பரவலமர்த்தல் மூலம் 23 பணியிடங்களும் மற்றும் புதியதாக  19 பணியிடங்களும்   உருவாக்கப்படும்.
 
இதற்காக தொடரும் செலவினமாக 1 கோடியே  35 லட்சத்து 46 ஆயிரத்து 176  ரூபாயும், வட்டாட்சியர் அலுவலகம், குடியிருப்பு, வட்டாட்சியர்  அலுவலகத்திற்கு  தேவையான  தளவாடங்கள், ஜீப், கணினி, பிரிண்டர், ஜெராக்ஸ் இயந்திரம்.,  பேக்ஸ், குளிர்சாதனம், தீயணைப்பான் ஆகியவற்றிற்காக தொடரா செலவினமாக 2  கோடியே 41 லட்சத்து 53 ஆயிரத்து 300 ரூபாய் அரசுக்கு ஏற்படும்.
 
இதே போன்று, திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டத்திலுள்ள குடிமங்கலம்,  பெதப்பம்பட்டி உள்வட்டங்களை உடுமலைப்பேட்டை வட்டத்தில் சேர்த்தும்,  மடத்துக்குளம் உள் வட்டத்திலுள்ள 8 கிராமங்களைப் பிரித்து துங்காவி என்ற  உள்  வட்டத்தை  உருவாக்கி மடத்துக்குளம், துங்காவி என்ற இரு உள் வட்டங்கள் அடங்கிய  சீரமைக்கப்பட்ட புதிய மடத்துக்குளம் வட்டத்தினை மக்களின் தேவைக்காக உருவாக்க  முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
 
இந்த வட்டத்திற்கென புதியதாக வருவாய் ஆய்வாளர் 1, உள்வட்ட அளவர் 1,  உதவியாளர் 1, பதிவறை எழுத்தர் 1, ஆகிய 4 பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும்.  இதனால் தொடர் செலவினமாக ஆண்டொன்றுக்கு 9 லட்சத்து 98 ஆயிரத்து 724 ரூபாய்  அரசுக்கு ஏற்படும். திருப்பூர்  மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டத்தை இரண்டாக  பிரித்து உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் ஆகிய இரண்டு வட்டங்கள்  உருவாக்கப்பட்டு, உடுமலைப்பேட்டையை தலைமையிடமாகக் கொண்டு,  உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டம் உருவாக்கப்பட்டது.
 
இந்த வருவாய் கோட்ட அலுவலகம் தற்பொழுது உடுமலைப்பேட்டை வட்டாட்சியர்  அலுவலக வளாகத்தில் தற்காலிகமாக இயங்கி வருகிறது. இதர கோட்ட அளவிலான  அலுவலகங்கள் ஆங்காங்கே பல்வேறு இடங்களில் வாடகை கட்டடங்களில்  செயல்பட்டு  வருகின்றன.
 
வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் ஆகிய இரண்டும்  ஒரே கட்டிடத்தில் இயங்குவதனால் ஏற்படும் இட நெருக்கடியினாலும், இதனால் அங்கு  வரும் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களையும் கருத்தில் கொண்டு,  உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டத்திற்கென கோட்டாட்சியர் அலுவலகம்  அமைப்பதற்காக உடுமலைப் பேட்டையில் நிலம் தேர்வு செய்யப்பட்டு, 1 கோடியே  85  லட்சத்து 61 ஆயிரம் ரூபாய் செலவில் புதியதாக வருவாய் கோட்ட அலுவலகம் கட்ட   முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
 
வருவாய் துறையில் அரசு மேற்கொண்ட இந்த நடவடிக்கைகள் மூலம் பொது மக்கள்  பெரிதும் பயன் அடைவார்கள்” என்று கூறப்பட்டு உள்ளது.