Published:Updated:

'எனக்கொரு வாய்ப்பு கொடுங்கள்...!'- அன்புமணி ராமதாஸ் மக்களிடம் கோரிக்கை

'எனக்கொரு வாய்ப்பு கொடுங்கள்...!'- அன்புமணி ராமதாஸ் மக்களிடம் கோரிக்கை
'எனக்கொரு வாய்ப்பு கொடுங்கள்...!'- அன்புமணி ராமதாஸ் மக்களிடம் கோரிக்கை

எனக்கொரு வாய்ப்பு கொடுங்கள்  என  அன்புமணி ராமதாஸ்  மீண்டும் வாய்ப்பு கேட்க ஆரம்பித்துள்ளார்.

பா.ம.க இளைஞரணித் தலைவரும், தருமபுரி  எம்.பி-யுமான அன்புமணி ராமதாஸ், கடந்த வெள்ளிக்கிழமை தருமபுரி மாவட்டத்தில் “ஒகேனக்கல்லில் இருந்து பூம்புகார் வரை கரம் கோப்போம்-காவிரி காப்போம்” எனும் தலைப்பில் காவிரி பாதுகாப்புப் பிரசாரப் பயணத்தை தொடங்கினார். அவர் நேற்றும் இன்றும் திருச்சியில் பயணம் மேற்கொண்டார்.

அக்கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் திலீப் குமார், கட்சியின் தலைவர் ஜி.கே.மணி, விவசாய சங்கத் தலைவர்கள் பி.ஆர்.பாண்டியன், பாலு தீட்ஷிதர், நல்லுசாமி ஆகியோர் சகிதமாக திருச்சி சருக்குப் பாறையில் நடந்தப் பொதுக்கூட்டத்தில் பேசினார்.

மேடையில் பேசிய அன்புமணி ராமதாஸ்,

“காவிரியைப் பாதுகாக்கதான் இந்த விழிப்புணர்வு பயணம். இளைஞர்களைத் தட்டி எழுப்பி உணர்வு ஊட்டுவதே நோக்கம். ஓ.என்.ஜி.சி காவிரி டெல்டா மாவட்டங்களிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும். மணல் கொள்ளை முற்றிலும் தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம்.

50ஆண்டுக் கால திராவிட ஆட்சியில் தமிழகத்தின் உரிமைகள் இழந்து வருகிறோம். இரண்டு கட்சிகளும் மணல் கொள்ளையை ஆதரிக்கிறது. இதனால் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளோம். காவிரி மணலை அள்ளுவது அவருடைய அம்மாவின் மேலுள்ள துணியை உருவுவதற்குச் சமம். வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க கரம் கோர்ப்போம். மணல் கொள்ளையைத் தடுக்க உடனடி சட்டமியற்ற வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாமல் இருப்பதற்கு, கருணாநிதி செய்த மிகப்பெரிய துரோகம்தான் காரணம். ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாமல் போனது, கர்நாடகா அனுமதியில்லாமல் தடுப்பணைகளை கட்ட அனுமதித்தது இதற்குக் காரணம்.  

அதோடு கையாலாகாத முதுகெலும்பு இல்லாத தற்போதைய தமிழக அரசும் மற்றொரு காரணம். ஜல்லிக்கட்டுக்காகப் போராடிய மக்கள், காவிரியை காக்கப் போராட வர வேண்டும். 5 கோடி பேருக்கான குடிநீர் தரும் ஆதாரமாகக் காவிரி இருக்கிறது. நாங்கள் விவசாயத்துக்கு முன்னுரிமை அளிக்கிறோம். திராவிட கட்சிகளுக்கு நீர் மேலாண்மை பற்றி தெரியாது. அவர்கள் ஆட்சியில் ஏரி, குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் 900 டி.எம்.சி தண்ணீர்  தமிழகத்தில் வீணாகக் கடலில் கடந்துள்ளது.

கர்நாடகாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் வெற்றி பெற்று பி.ஜே.பி ஆட்சி அமைக்க வேண்டும் என்று நினைக்கிறது. அதனால்தான் காவிரி மேலாண்மை அமைக்க மத்திய அரசு தயாராக இல்லை. தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதைப்போல், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டபத்தை அமைக்க வேண்டும். பா.ம.க-வுக்கு வாய்ப்பளித்தால் முக்கொம்பில் உயரமான அணை கட்டப்படும்.

விவசாயிகளுக்கு ஊதிய குழு தேவை. விஞ்ஞானி சுவாமிநாதன், விவசாயிகள் வருவாய் ஆணையர் அமைக்கவேண்டும் எனக் குறிப்பிட்டதை வரவேற்கிறோம். நெல்லுக்கான உற்பத்தி விலை 2450 ரூபாய் கொடுத்தால் விவசாய கடன் தள்ளுபடி வேண்டாம். அப்படிக் கொடுக்காத காரணத்தால் விவசாயிகளின் தன்மானத்தை இழந்துவிட்டார்கள். ஒரு டன் கரும்புக்கு 4000 ரூபாய் கொடுத்திருக்கலாம். கொடுக்கப்படவில்லை. தி.மு.க, அ.தி.மு.க-வுக்கு விவசாயத்தைப் பற்றி என்ன தெரியும். மேடை போடுங்கள், விவாதிக்கலாம்.

தமிழ்நாட்டில் 20-க்கும் மேற்பட்ட நீர் மேலாண்மை திட்டங்கள் நிலுவையில் உள்ளது. இந்தத் திட்டங்களை நிறைவேற்ற 50,000 கோடி ரூபாய் மட்டுமே தேவை. ஆனால் இலவசங்களுக்கும், மானியத்திற்கும் 64,000 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் நீர் மேலாண்மை சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. கரூர் மணல் கொள்ளையின் தலைநகராக விளங்குகிறது. எல்லா விவசாயிகளும் சென்னையை நோக்கி வாருங்கள். விவசாய ஒற்றுமை தேவை. இரண்டு கட்சியையும் ஒதுக்குங்கள். அவர்கள் தோல்வி அடைந்துவிட்டார்கள். டெங்கு பரவுகிறது, வேளாண்மை வளர்ச்சி இல்லை, சுகாதாரம் சீர் கெட்டுக் கிடக்கிறது.

விவசாய பிரச்னைகளை புரியாத கட்சிகளாக தமிழ்நாட்டை ஆளும், ஆண்ட கட்சிகள் இருக்கிறது. டெல்டாவை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக சட்டமியற்ற வேண்டும். இளைஞர்களே போராட வாருங்கள். இரண்டு கட்சிகளும் துரோகம் இழைத்துள்ளது. பா.ம.க-வுக்கு ஐந்து ஆண்டு மட்டும் கொடுங்கள். தலையெழுத்தை மாற்ற முடியும்” என்றார்.

இறுதியாக இன்று மாலை கல்லணை சென்ற அவர், கரிகால சோழனுக்கு, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அடுத்த கட்டுரைக்கு