Published:Updated:

மோடியுடன் பறந்த 50 குருக்கள்!

டெல்லி சலோ

மோடியுடன் பறந்த 50 குருக்கள்!

டெல்லி சலோ

Published:Updated:

சார்க் நாடுகளுக்கு வரிசையாகப் பயணம் புறப்பட்டுவிட்டார் பிரதமர் மோடி. பூடானைத் தொடர்ந்து கடந்த வாரம் நேபாள பயணம். இனி வரிசையாக சார்க் நாடுகளுக்குப் பிரதமர் செல்வார் என்கிறது டெல்லி வட்டாரம்.

நரேந்திர மோடி பிரதமர் ஆனவுடனே நேபாளத்தில் இருந்து முன்னாள் அரச குடும்பத்தினர் சிலர் வந்து சந்தித்தனர். ''நேபாளத்தில் மீண்டும் மன்னர் ஆட்சிக்கு வழிவகுத்துக் கொடுங்கள்'' என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் மோடி எடுத்த எடுப்பிலேயே அந்தக் குடும்பத்தினரிடம் அவர்களது கோரிக்கையை மறுத்தார். ''அது இயலாத காரியம். நான் மக்களாட்சித் தலைவராக இருந்துகொண்டு இதுபோன்ற பழைமைவாதத்துக்கு ஆதரவு கொடுக்க முடியாது'' என்று சொன்னதோடு, ''நீங்களும் ஜனநாயக வழியில் அரசியலுக்குத் திரும்புங்கள்'' என்று ஆலோசனை கூறினார். எனவே, மோடியிடம் இருந்து அரச குடும்பத்துக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை.

மோடியுடன் பறந்த 50 குருக்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அந்த நாட்டுக்கான பயணத்துக்கு இரண்டு நோக்கங்கள் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டன. அந்த நாட்டுக்குத் தேவையான அயோடின் கலந்து உப்பு, சாலை மற்றும் தகவல் தொடர்பு வசதிகள், தொலைக்காட்சி ஒப்பந்தங்கள் போன்றவற்றுக்குக் கடன் உதவிகளாக நேபாள செலாவணியில் 69 மில்லியன் தரப்பட்டது. வேறு பல நீர்மின் திட்ட ஒப்பந்தங்களையும் பிரதமர் மோடி ஏற்று வந்துள்ளார். நேபாளம் தன்னுடைய தேவைக்கான எரிவாயு, பெட்ரோலியம் போன்ற விவகாரங்களில் இந்தியாவை நம்பியுள்ளது. இதே அளவுக்கு சீனாவோடும் நேபாளம் ஒப்பந்தங்களைப் போட்டு பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. இந்த அளவுக்கு இதுவரை நேபாளத்துக்கு இந்தியா நிதியுதவி தந்தது இல்லை. மோடியின் இந்த அறிவிப்பை சிலர் விமர்சனமும் செய்துள்ளார்கள். 'இந்தியா சொல்லும். ஆனால், சீனா செய்யும்’ என்பது அவர்களது விமர்சனம்.

இந்த விமர்சனங்களுக்கு நேபாளப் பிரதமர் சுஷில் கொய்ராலா பதில் அளித்துள்ளார். 'ஒப்பந்தம் வேறு, நம்பிக்கை வேறு. இந்தியாவையும் மோடியின் வாக்குறுதியிலும் நம்பிக்கை உண்டு’ என்று சொல்கிறார். இப்படி கொய்ராலாவும் மோடியும்  நம்பிக்கையாக உள்ளனர். ''நேபாளத்தை முழுமையாக இந்தியாவோடு இணைந்து செயல்பட மோடி காய் நகர்த்துகிறார்... அதுதான் புதைந்து இருக்கும் விவகாரம்'' என்றும் சிலர் விமர்சனங்களை வைக்கிறார்கள்.

நேபாளம் சென்ற மோடி அங்கு நாடாளுமன்றத்தில் உரையாற்றியதோடு, அரசியலமைப்பு நிர்ணய சபைத் தலைவர் சுபாஷ் சுந்தர நெம்பாகையும் சந்தித்துவிட்டு வந்தார். 2006-ல் ஏற்பட்ட புரட்சிக்குப் பின்னர் முடியாட்சி முடிவுக்கு வந்தது. பின்னர் நேபாள கம்யூனிஸ்ட் - மாவோயிஸ்ட்கள் ஆட்சிக்கு வந்தார்கள். இப்போது மற்றொரு பலம் வாய்ந்த கட்சியான நேபாளம் காங்கிரஸ் மற்றும் வேறொரு இடதுசாரி கட்சி ஆதரவோடு ஆட்சி நடக்கிறது. அங்கு முதன்முறையாக அரசியலமைப்புச் சட்டமும் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு நேபாளத்துக்குச் சென்றுள்ளார் மோடி.

காத்மாண்ட்டில் புகழ்பெற்ற பசுபதிநாத் சிவன் கோயிலிலும் காவி உடையோடு சென்று பிரதமர் மோடி முக்கிய பூஜைகளை மேற்கொண்டார். தமிழர்களின் ஆடி மாதிரி வட இந்திய பஞ்சாகப்படி ஷார்வன் மாதம் இது. இந்த நாட்களில் இந்த பூஜையை மேற்கொண்டால் நல்லது என்று கருதி மோடி தனது பயணத்தோடு சுமார் 50 குருக்களையும் விமானத்தில் ஏற்றிக்கொண்டு காத்மாண்டுக்குச் சென்றிருந்தார். சுமார் 2,500 கிலோ சந்தனக் கட்டைகளும் எடுத்துச் செல்லப்பட்டது.  இந்த பசுபதிநாத் கோயிலின் பக்தர்கள் மடம் கட்ட 25 கோடியும் கொடுத்தார்.

இப்படி பக்தி பயணமாகவும் ராஜதந்திரப் பயணமாகவும் இது அமைந்தது. இனி மோடி மற்ற சார்க் நாடுகளுக்கும் போக வேண்டும். தீவிரவாதிகளைத் தூண்டும் பாகிஸ்தானுக்கும் புலம்பெயர்ந்தோர்கள் பிரச்னையைத் தீர்க்க மறுக்கும் பங்களாதேஷ§க்கும் மோடி போவாரா என்பது சந்தேகம். அடுத்து மோடி இலங்கைக்குப் பயணம் மேற்கொள்வார் என்று டெல்லி அதிகாரிகள் வட்டாரம் சொல்கிறது.

''சார்க் நாடுகளின் தலைவர்களைத் தனது பதவியேற்பு விழாவுக்கு அழைத்ததன் மூலமாக தெற்காசியாவில் தன்னுடைய முக்கியத்துவத்தை மோடி புலப்படுத்திவிட்டார். இனி அந்த நாடுகளுக்குச் செல்வதன் மூலமாக தன்னுடைய பிடிமானத்தை இன்னும் இறுக்க நினைக்கிறார்'' என்று வெளியுறவுத் துறை அதிகாரிகள் சொல்கிறார்கள்.

மோடி டெக்னிக் பயன்தருமா என்பது போகப் போகத்தான் தெரியும்!

- சரோஜ் கண்பத்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism