Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

Published:Updated:

பொன்விழி, அன்னூர்.

கழுகார் பதில்கள்!

 கல்கியின் 'பொன்னியின் செல்வன்’ நாவலை படமாக எடுக்க எம்.ஜி.ஆர் முயற்சித்தாராமே?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எம்.ஜி.ஆரின் நிறைவேறாத கனவுகளில் அதுவும் ஒன்று. 1959-ம் ஆண்டு டிசம்பரில் அவருக்கு இந்த ஆசை அரும்பியது. 'நாடோடி மன்னன்’ வெற்றிதான் அவருக்கு இந்த ஆசையைத் தூண்டியது. அதற்கான நடிகர், நடிகையர் தேர்வையும் தொடங்கினார். முக்கியமான வேடத்தில் பத்மா சுப்பிரமணியத்தை நடிக்கவைக்க முயற்சித்தார். அவர் ஏற்கவில்லை. ஆனாலும் விடாமல் அதற்கான முயற்சியில் இருந்தார். அடுத்தடுத்த படங்கள் அவருக்கு குவிந்துகொண்டு இருந்ததால், இந்த சொந்தப்பட முயற்சியை தள்ளிவைக்க வேண்டியதாயிற்று.

1964-ல் ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில், 'பொன்னியின் செல்வனை தமிழிலும் ஆங்கிலத்திலும் எடுக்கப் போகிறேன். ஆங்கில வசனங்களை அண்ணாவை எழுதும்படி கேட்கப் போகிறேன்’ என்று சொன்னார். நடிகர் சிவகுமாரின் 100-வது படவிழாவில் (1978) பேசிய எம்.ஜி.ஆர். 'பொன்னியின் செல்வனை படமாக எடுக்க நான் முயற்சித்தபோது, சோழ இளவரசனாக சிவகுமாரை நடிக்க வைக்கலாம் என்று நினைத்தேன்’ என்று பேசினார். இப்படி வந்தியத்தேவன், எம்.ஜி.ஆரை விரட்டிக்கொண்டே இருந்தான். ஆனால், காலம் கைகூடவில்லை!

 சுந்தரிப்ரியன், வேதாரண்யம்.

எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த்தின் உடல்நிலை பற்றி பல்வேறு தகவல்கள் வருகின்றன. ஆனால், உண்மை நிலை என்ன?

இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. சிறுநீரகம், கல்லீரல் சோதனைகள் செய்யப்பட்டு உள்ளன. தொடர்ச்சியாக அவரது கண்களில் இருந்து நீர் வருகிறது. அதற்கும் சிகிச்சை எடுத்துள்ளார். இன்னும் இரண்டு மூன்று வாரங்களுக்கு ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.

 ச.ந.தர்மலிங்கம், சத்தியமங்கலம்.

பேராசிரியர் க.அன்பழகனை யாரும் கடுமையாக விமர்சிப்பது இல்லையே... ஏன்?

அவரும் யாரையும் கடுமையாக விமர்சிப்பது இல்லையே... அதனால் இருக்கும்!

எம்.ஜி.ஆர் ஒருமுறை அவரை அ.தி.மு.க-வுக்கு அழைத்தார். 'நான் வர மாட்டேன். என் வீட்டு சமையல்காரரை வேண்டுமானால் அனுப்பிவைக்கிறேன்’ என்று அன்பழகன் சொல்லிவிட்டார். அப்போது, எம்.ஜி.ஆர். கோபப்படவில்லை.

ஜெயலலிதா ஒருமுறை, 'பேராசிரியர், பேராசிரியர் என்று அழைக்கிறீர்களே! அவர் பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியராகவே வளரவில்லை. துணைப் பேராசிரியராகத்தான் இருந்தார். இனிமேல் அவரை துணைப் பேராசிரியர் அன்பழகன் என்று அழையுங்கள்’ என்று சொன்னார். இதுதான் அன்பழகன் மீது வைக்கப்பட்ட பெரிய தாக்குதல். இதற்கும் என்ன காரணம் என்றால், பெங்களூருவில் நடக்கும் சொத்துக்குவிப்பு வழக்குக்கு எதிர்மனுதாரர் அன்பழகன். அதனால்தான் இந்த ஆத்திரம்!

 டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.

தி.மு.க ஆட்சியில் முதல்வரைத் துதிபாடுவது இல்லையா?

துதி பாடுவதே இல்லை என்று சொல்ல முடியாது. இந்த அளவுக்கு இல்லை. இந்தப் புகழ்ச்சி ஓரிரு நிமிடங்களுக்கு மேல் நீட்டித்தால், 'சரி... சரி... தொகுதியைப் பற்றிப் பேசுங்கள்’ என்று சொல்ல பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் பேரவைத் தலைவர் ஆசனத்தில் அமர்ந்திருந்தார். மூத்த அமைச்சர்கள் பி.டி.ஆரைப் பார்த்து பயந்தார்கள். கருணாநிதியே ஜாக்கிரதையாகப் பேசுவார். 'முதலமைச்சருக்கு நான் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன்’ என்று பி.டி.ஆர் எதிர் வாதம் எடுத்துவைத்த காட்சிகளையும் இந்தப் பேரவை பார்த்துள்ளது.

 கே.ராம்குமார், சென்னை-6.

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை காங்கிரஸ் கட்சிக்குத் தர பி.ஜே.பி மறுப்பதன் நோக்கம் என்ன?

எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பைப் பெறும் அளவிலான எண்ணிக்கை காங்கிரஸ் கட்சிக்கு இல்லையே! இதுபோன்ற நிலை பலமுறை இருந்துள்ளது. இந்தியாவின் முதல் தேர்தலில் பெரும்பாலான இடங்களை காங்கிரஸ் கட்சி கைப்பற்றியதால், எதிர்க்கட்சித் தலைவரே இல்லாமல்தான் சபை இருந்தது. அது மாதிரிதான் இப்போதும் இருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை காங்கிரஸுக்குக் கொடுப்பதன் மூலமாக, வீழ்த்தப்பட்ட கட்சிக்கு லேசாக உயிரூட்டுவதாக ஆகிவிடும் என்று பி.ஜே.பி நினைக்கிறது. மேலும், அந்தப் பொறுப்பில் ராகுல்தான் உட்காரவைக்கப்படுவார். ராகுல் தனது தலைமைக்கானத் தகுதியை வளர்த்துக்கொள்ள இதனைப் பயன்படுத்திக்கொள்வார் என்ற பயமும் இருக்கலாம். தமிழ்நாடு சட்டமன்றமாக இருந்தாலும் மத்திய நாடாளுமன்றமாக இருந்தாலும் எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்பது ஏனோ ராசி இல்லாததாக ஆகிவிட்டது. அங்கே இல்லை. இங்கே, இருந்தும் இல்லை!

 பி.சாந்தா, மதுரை-14.

'என் சுயசரிதை வெளிவரும்போது உண்மை தெரியும்’ என்கிறாரே சோனியா?

அவரைப் பற்றிய உண்மைகள்தானே! தெரியட்டும். தெரியட்டும்!

 எஸ்.எம்.சுல்தான், கோ.புதூர்.

'முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவை சோனியா வெறுத்தார்’ என்று நட்வர்சிங் தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளது பற்றி?

1. 1991-ம் ஆண்டு ராஜீவ் நினைவு மையத்தின் அறக்கட்டளையை சோனியா ஆரம்பித்தார். அதில், அன்றைய பிரதமர் நரசிம்மராவும் ஓர் உறுப்பினர். மத்திய அரசு 100 கோடி ரூபாயை அந்த அறக்கட்டளைக்கு வழங்கியது. இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. உடனே 100 கோடியைத் திரும்பப் பெற்றார் ராவ். இது சோனியாவுக்குக் கோபம் ஏற்படுத்தியது.

2. தனது தனிச் செயலாளர் வின்சன் ஜார்ஜுக்கு எம்.பி பதவி தரவேண்டும் என்று சோனியா கேட்டபோது, மார்க்ரட் ஆல்வாவுக்கு நரசிம்ம ராவ் கொடுத்தார்.

3. ராஜீவ் கொலை தொடர்பாக அமைக்கப்பட்ட ஜெயின், வர்மா ஆகிய இரு கமிஷன்களின் விசாரணையும் மத்திய அரசால் ஒழுங்காக நடத்தப்படவில்லை என்று சோனியா நினைத்தார். 'முன்னாள் பிரதமர் கொலையை விசாரிக்கவே இவ்வளவு தாமதம் என்றால், சாதாரண குடிமகனின் நிலைமை என்ன?’ என்று அமேதி கூட்டத்தில் (1995 ஆகஸ்ட் 24) சோனியா பேசினார்.

இந்த மூன்று சம்பவங்கள்தான் சோனியா - ராவ் மோதலுக்குக் காரணம். அப்போது ராவ் பிடிக்காததால் சோனியா பக்கம் இருந்தவர் நட்வர். அதனால், அவருக்குப் பல உண்மைகள் தெரியும்.

 மு.ரா.பாலாஜி, கோலார் தங்கவயல்.

இன்று மூப்பனார் உயிரோடு இருந்திருந்தால்?

த.மா.கா-வை காங்கிரஸில் இணைத்திருக்க மாட்டார். த.மா.கா ஆரம்பித்ததால் 96 தேர்தலில் பாதாளத்துக்குப்போன காங்கிரஸ், இவரது இணைப்புக்குப் பிறகு மெள்ள மீண்டும் எழுந்தது. இப்போது மீண்டும் பாதாளத்துக்குப் போய்விட்டது!

 எஸ்.கிருஷ்ணராஜ், அதிகாரட்டி.

தமிழக சட்டசபையில் மேஜையைத் தட்டும் ஓசை அதிகமாக கேட்கிறதே?

சட்டமன்ற விதிகளில் ஒன்று 'உஷ்’ என்ற ஒலியைக்கூட யாரும் எழுப்பக் கூடாது என்பது. அதாவது, அவையின் நடவடிக்கைகளுக்கு குந்தகம் ஏற்படுத்தக் கூடாது என்று நினைத்தார்கள். ஆனால் இன்று, மேஜையைத் தட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.

கழுகார் பதில்கள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism