Published:Updated:

“ஒடுக்கப்பட்டவர்கள் என்பதாலேயே மறுக்கப்பட்டது நீதி!” - புத்தகம் தரும் அதிர்ச்சி ரிப்போர்ட்

“ஒடுக்கப்பட்டவர்கள் என்பதாலேயே மறுக்கப்பட்டது நீதி!” - புத்தகம் தரும் அதிர்ச்சி ரிப்போர்ட்
“ஒடுக்கப்பட்டவர்கள் என்பதாலேயே மறுக்கப்பட்டது நீதி!” - புத்தகம் தரும் அதிர்ச்சி ரிப்போர்ட்

“ஒடுக்கப்பட்டவர்கள் என்பதாலேயே மறுக்கப்பட்டது நீதி!” - புத்தகம் தரும் அதிர்ச்சி ரிப்போர்ட்

நாகை மாவட்டத்தில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உண்மைச் சம்பவம். ஆண் உயர்ந்த சாதி... பெண் தாழ்த்தப்பட்ட சாதி. சில மாதக் காதல். கரம்பிடிப்பதாகச் சொல்லி அவளைப் புணர்ந்துவிட்டுத் தன்னந்தனியாகச் சாலையில் விட்டுச் செல்கிறான், அவன். மாதங்கள் கடக்கின்றன, இதற்கிடையே அந்தப் பெண் கருத்தரித்து.. அவளுக்கு ஒரு குழந்தையும் பிறக்கிறது. குழந்தையுடன் தன்னை ஏற்றுக்கொள்ளும்படி காதலனிடம் கேட்கும் அவளை, தகாத வார்த்தைகளாலும் சாதியப் பெயரைக் குறிப்பிட்டும் திட்டி வீட்டைவிட்டு விரட்டுகிறான். “அவன், நடுரோட்டில் தனியாக விட்டுச்சென்ற வலிகூட எனக்குப் பெரிதாகத் தெரியவில்லை... ஆனால், அவனை முழுதுமாக நம்பிய என்னைத் தகாத வார்த்தைகளால் பேசியதைத்தான் தாங்கிக்கொள்ள முடியவில்லை” என்று கூறி விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்கிறாள் அந்தப் பெண். தற்கொலைக்குக் காரணமாக இருந்த காதலன்மீது வழக்குத் தொடுக்கப்படுகிறது. இதற்கிடையே தன் மகளுக்கு நியாயம் கேட்டுப் போராடிய தந்தை (காதலியின் தந்தை) இறந்துவிட... அந்தப் பெண்ணின் தம்பி வழக்கைக் கையில் எடுக்க முனைகிறான். ஆனால், ''உன் தந்தை எப்போதோ வழக்கைத் திரும்பப் பெற்றுக்கொண்டு விட்டாரே” என்று வாய்வார்த்தையாகக் கூறி வழக்கு மூடிவைக்கப்படுகிறது. இதுபோல ஒன்றல்ல... இரண்டல்ல. பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கு எதிராக 3,36,995 குற்றங்கள் கடந்த பத்தாண்டுகளில் நிகழ்ந்துள்ளதாகக் கூறுகிறது, மக்கள் இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பு வெளியீட்டில் வந்திருக்கும் 'ஒடுக்கப்பட்டவர்களின் வழக்குகளும் மறுக்கப்படும் நீதியும்' புத்தகம்.

இதில், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் பதியப்பட்ட வழக்குகள் வெறும் 1,06,935 மட்டுமே. தமிழக அளவில், நடந்த 14,930 குற்றங்களில் வெறும் 10,251 மட்டுமே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன. கல்லூரி ஆய்வறிக்கைக்காக ஆர்.டி.ஐ தாக்கல் செய்த லயோலா கல்லூரி மாணவரான அஜு அரவிந்த் மற்றும் அவருக்கு உதவிய சக மாணவரான நரேஷுக்குக் காத்திருந்தது மேற்குறிப்பிட்டுள்ள அதிர்ச்சிகர எண்ணிக்கை. இதையடுத்து கிராமங்களும் நகரங்களுமாகப் பயணப்பட்டு அங்கு பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து உருவாக்கப்பட்டதுதான் இந்தப் புத்தகம், ஒன்றரை வருட உழைப்பு. 

புத்தகத்தின் அணிந்துரையில்... சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன் இவ்வாறு குறிப்பிட்டு இருக்கிறார், ''மத்திய அரசு 1989-ம் ஆண்டு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைப் நாடாளுமன்றம் மூலம் இயற்றியது. தாழ்த்தப்பட்ட மக்கள் சாதிக் காரணத்தால் படுகொலை செய்யப்படுவதும், தாக்கப்படுவதும், பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படுவதும், இறந்தபின்பு சுடுகாடுகூட மறுக்கப்படுவதும் தினமும் தொடர் நிகழ்வுகளாக நடைபெறுவதால், இந்தச் சட்டத்தால் பெரிய அளவில் தீண்டாமை வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்த முடியவில்லை என்பதே உண்மை'' என்று குறிப்பிட்டுள்ளார். 

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி நந்தினி, வயிற்றில் சிசுவுடன் இருந்த நிலையில்... அவளைக் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்து கிணற்றில் வீசிய அவளது காதலன் உள்ளிட்ட நான்கு பேர் கொண்ட கும்பல்மீது இதே வன்கொடுமைத் தடுப்புச் சட்டமும் பதியப்பட்டது. ஆனால், இன்றைய தேதியில் திருச்சி மத்திய சிறையில் நால்வரும் உல்லாசமாகப் பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கும் நிலையில் நீதிபதி சொல்வதையும் மறுப்பதற்கில்லை. 

நாடு முழுவதும் தலித் மக்கள்மீதான வன்கொடுமைகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்கள் இருக்கும் நிலையில், தமிழகத்தின் 32 மாவட்டங்களில் வெறும் 6 மாவட்டங்களில் மட்டுமே தலித் மக்களுக்கான சிறப்பு நீதிமன்றங்கள் அமையப்பெற்றுள்ளன. 

''இப்பல்லாம் யாரு சார் சாதி பாக்குறா'' என்று, இடஒதுக்கீடு கேட்கும்போதெல்லாம் ஒரு மறுப்புக்குரல் எழும்பும் நிலையில், 'ஒடுக்கப்பட்டோர் வழக்குகளும் மறுக்கப்படும் நீதியும்' நூலினைச் சற்று  புரட்டிப் பார்க்கலாம். ''எழுபது ஆண்டுகால சுதந்திர இந்தியாவின் நடைமுறை என்னவாக இருக்கிறது?, சாதி இந்துச் சமூகம் தலித் மற்றும் பழங்குடி மக்களுக்கு எதிராக நாள்தோறும் வன்கொடுமைகளைக் கட்டவிழ்த்துவிடும்; சட்டங்களும் அரசு நிர்வாகமும் அதைத் தடுக்காது; குடிமைச் சமூகம் வேடிக்கை பார்க்கும்; குற்றங்கள் நிகழ்ந்த பிறகு குற்றவாளிகளைக் கைதுசெய்யவும் சில நிவாரணங்களை வழங்கவும், தண்டனைகளை அளிக்கவும் பல்வேறு போராட்டங்கள் நடைபெறும்; ஆனால், நீதிமட்டும் ஒருபோதும் கிடைக்காது. இதுதான் டிஜிட்டல் இந்தியாவின் எதார்த்த நிலை” என்கிறார், இந்தப் புத்தகத்தை திறனாய்வு செய்துள்ள ‘தலித் முரசு’ ஆசிரியர் புனித பாண்டியன். 21-ம் நூற்றாண்டில் தொழில்நுட்ப நாகரிகம் வளரவளர... சாதியச் சமூகமும் இயல்பான வாழ்க்கை முறையாக மாறிக்கொண்டிருக்கும் அபாய கட்டத்தில் பயணித்துக்கொண்டிருக்கிறோம்.   

குற்றங்கள் குறித்து பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து கள ஆய்வு மேற்கொண்டிருக்கும் இந்த நூலின் ஆசிரியர்கள், ''நாங்கள் 60 கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்தோம். அதில் 25 வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை. கொடூரக் குற்றங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யக்கூட நமது அரசாங்கம் தயாராக இல்லை” என்கின்றனர். 

அப்படியெனில், அரசு தனது செய்திக்கோப்புகளில் மட்டுமே அறிவிக்கும் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண நிதிகள் எல்லாம் எங்கே சென்றடைகின்றன என்கிற கேள்வி எழுகிறது. உண்மையில், ஒரு குற்றத்தால் பாதிப்படையும் எந்த ஒரு பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவரும் அந்தக் குற்றத்தைவிட அதன்பிறகான நீதிகேட்டு அலையும் போராட்டத்தில்தான் மிகவும் பாதிப்படைகின்றனர் என்பதே நிதர்சனம். 

மனித மாண்பானது, இதுதான் என்பதைச் சட்டத்தின் வழி மீண்டும் மீண்டுமாக மக்களுக்கு நினைவூட்டுவதே நீதி. இந்த எழுபது ஆண்டுகளில் நீதி என்றுமே நினைவூட்டப்படவில்லை என்பதுதான் கசப்பான உண்மை.

அடுத்த கட்டுரைக்கு