Published:Updated:

நீதிபதி ரகுபதி விசாரணை தொடருமா?

சாட்டையைச் சுழற்றும் உயர் நீதிமன்றம்

நீதிபதி ரகுபதி விசாரணை தொடருமா?

சாட்டையைச் சுழற்றும் உயர் நீதிமன்றம்

Published:Updated:

'மவுலிவாக்கம் 61 பேர் மரணம்’ பற்றி சட்டமன்றத்தில் வாய் திறக்க முடியாததால் நீதிமன்றப்

நீதிபதி ரகுபதி விசாரணை தொடருமா?

படியேறியிருக்கிறார் ஸ்டாலின். 'மவுலிவாக்கம் வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும்’ என சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு சூட்டை கிளப்பிக்கொண்டிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'மவுலிவாக்கம் விவகாரத்தை விசாரிக்கும் விசாரணை கமிஷன் நீதிபதி ரகுபதி மாநில நுகர்வோர் தீர்ப்பாயத்தின் தலைவராக இருக்கிறார். குண்டர் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் குழுவில் உறுப்பினராகவும் உள்ளார். புதிய தலைமைச் செயலக கட்டட விசாரணை கமிஷன் தலைவராகவும் பணியாற்றுகிறார். இத்தனை பொறுப்புகளை வைத்திருக்கிற ரகுபதி எப்படி மவுலிவாக்கம் விவகாரத்தையும் விசாரிக்க நேரம் கிடைக்கும். ரகுபதியை விட்டால் வேறு யாரும் நீதிபதி இல்லையா? ரகுபதி என்ன அற்புத சக்தி படைத்த மனிதரா?’ என்றெல்லாம் ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் சரமாரியாக கேள்விகளை வீசியிருக்கிறது நீதிமன்றம். 'நீதிபதி ரகுபதி இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள முன்வந்ததால், அவரிடம் ஒப்படைத்தோம்’ என்று நீதிமன்றத்தில் அரசு சொன்னதுதான் இந்த வழக்கின் உச்சகட்ட காமெடி. ''ஒரே ரகுபதி தலைமையில் ஒன்பது விசாரணைகளா? இது ஒரு கண்துடைப்பு கமிஷன்'' என இன்னொரு பக்கம் கருணாநிதி கொதிப்பைக் கொட்டியிருக்கிறார்.

நீதிபதி ரகுபதி யார்? பின்னணியை அறிய 2009-ம் வருடத்துக்குப் பயணிப்போம். டாக்டர் கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மகன் கிருபா ஸ்ரீதர். புதுச்சேரி மருத்துவக் கல்லூரி ஒன்றில் கிருபா ஸ்ரீதர் படித்துகொண்டிருந்தபோது, அதிகாரிகள் மற்றும் இடைத்தரகரைப் பிடித்து பாஸ் ஆனதாக கிருஷ்ணமூர்த்தி, கிருபா ஸ்ரீதர் ஆகியோர் மீது குற்றச்சாட்டு கிளம்பி, விவகாரம் சி.பி.ஐ-யின் பிடிக்குள் போனது. கைது வளையத்தில் இருந்து தப்பிக்க இருவரும் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினார்கள். அப்போது உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த ரகுபதி முன்பு வழக்கு வருகிறது. இங்கேதான் பிரச்னை வெடிக்கிறது. 'இந்த இருவருக்கும் முன்ஜாமீன் வழங்க வேண்டும் என மத்திய அமைச்சர் ஒருவர் மிரட்டினார்’ என 2009 ஜூன் 29-ம் தேதி ரகுபதி கொளுத்திய திரி... சுப்ரீம் கோர்ட் வரை எரிந்தது. அப்போதைய உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கோகலேவிடமும் 'மத்திய அமைச்சர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால், பிரதமருக்குக் கடிதம் எழுதுவேன்’ எனச் சொன்னார் ரகுபதி.

நீதிபதி ரகுபதி விசாரணை தொடருமா?

மத்திய அமைச்சரின் பெயரை ரகுபதி சொல்லாவிட்டாலும், அந்த ரகசியத்தை உடைத்தெறிந்தார் ஜெயலலிதா. 'தன்னை மிரட்டியது யார் என்பதை ரகுபதி தெரிவிக்காவிட்டாலும்கூட, ஸ்பெக்ட்ரம் புகழ் ஆ.ராசாதான் நீதிபதியை மிரட்டியவர் என்பதை அறிந்துகொள்ள மனித அறிவுக்கு மேற்பட்ட விசேஷ ஞானம் எதுவும் தேவையில்லை’ என அப்போது அறிக்கைவிட்டார் ஜெயலலிதா. அறிக்கையோடு நின்றுவிடவில்லை. சட்டசபையிலும் அப்போது அமளியை ஏற்படுத்தி வெளிநடப்பு செய்தது அ.தி.மு.க. ஆனால், இந்த விவகாரத்தை ராசா மறுத்தார்.

இன்னொரு பக்கம் ரகுபதி புகார் பற்றி முதலில் கவலையும் கோபமும் தெரிவித்த அப்போதைய சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், பிறகு 'இதுபற்றி கோகலேவிடம் இருந்து எந்தக் கடிதமும் வரவில்லை. ரகுபதியிடம் மத்திய அமைச்சர் யாரும் பேசவில்லை’ என்றார். 'ரகுபதியை ராசா மிரட்டியது கே.ஜி.பாலகிருஷ்ணனுக்குத் தெரியும்’ என்று பதிலடி கொடுத்தார் கோகலே.

ரகுபதி மீது அ.தி.மு.க காட்டிய ஃபிளாஷ்பேக் பாசம் இது. இனி, நடப்பு விஷயத்துக்கு வருவோம். புதிய தலைமைச் செயலக கட்டுமான முறைகேடு தொடர்பாக, முதலில் முன்னாள் நீதிபதி தங்கராஜ் விசாரணை கமிஷன் நியமிக்கப்பட்டது. ரகுபதியைப்போலவே அப்போது தங்கராஜுக்கும் எதிர்ப்புகள் கிளம்பி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் ஆனது. அதனால், தங்கராஜை மாற்றிவிட்டு ரகுபதியை நியமித்தார்கள். இப்போது மவுலிவாக்கம் விவகாரத்தில் ரகுபதிக்கும் அதேபோல் பிரச்னை.

''ஊடகத்தின் அந்த நேரத்துக் கவனக் குவிப்பைத் திசைதிருப்பவே விசாரணை கமிஷன்கள் கருவிகளாக பயன்படுகின்றன. பழைய விசாரணை கமிஷன்களை போஸ்ட்மார்டம் செய்தாலே கமிஷன்கள் அமைப்பது என்பது பிரச்னையை மழுங்கடிப்பதற்கான ஏற்பாடாகத்தான் இருப்பது புரியும்'' என்பது அரசியல் அறிந்தவர்கள் கருத்து.

- எம்.பரக்கத் அலி

கண்டுகொள்ளப்படாத சில கமிஷன்கள்!

நீதிபதி ரகுபதி விசாரணை தொடருமா?

மேம்பாலங்கள் கட்டியதில் ஊழல் என சொல்லி கருணாநிதியை நள்ளிரவில் கைதுசெய்த விவகாரம் 2001-ல் அரங்கேறியது. இதுபற்றி விசாரிக்க நீதிபதி ராமன் தலைமையில் முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் கமிஷன் அமைத்தார் ஜெயலலிதா. கடைசிவரை இந்த கமிஷனின் அறிக்கை வெளிவரவில்லை.

நீதிபதி ரகுபதி விசாரணை தொடருமா?

முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் வெங்கடேச பண்ணையார் போலீஸ் என்கவுன்டரில் கொல்லப்பட, நீதிபதி ராமன் தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த அறிக்கையும் இன்றுவரை வெளியாகவில்லை.

நீதிபதி ரகுபதி விசாரணை தொடருமா?

1996-2001 தி.மு.க ஆட்சியில் சென்னை பெரம்பூரில் மேம்பாலம் கட்டும் பணி இடையிலேயே நின்று போனது. அடுத்து ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, 'பெரம்பூர் பாலம் கட்டுவதில் ஊழல் நடந்திருக்கிறது’ என்று சொல்லி நீதிபதி ஆறுமுகம் விசாரணை கமிஷனை நியமித்தார். அவர் அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்துவிட்ட பிறகும் அறிக்கை ரிலீஸ் ஆகவில்லை!

இப்படி கமிஷன்கள் அமைப்பது கண் துடைப்பாகத்தான் இருக்கிறது. புதிய தலைமைச் செயலகம் கட்டட முறைகேடு தொடர்பான 2011-ல் நியமிக்கப்பட்ட ரகுபதி கமிஷன் இன்னும் முடிவடையவில்லை. ஆனால், இந்த கமிஷனுக்காக இதுவரை ஒதுக்கப்பட்ட தொகை 95.79 லட்சம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism