Published:Updated:

கமல் மீது பா.ஜ.க பாய்வது எதனால் தெரியுமா ?

ந.பா.சேதுராமன்
கமல் மீது பா.ஜ.க பாய்வது எதனால் தெரியுமா ?
கமல் மீது பா.ஜ.க பாய்வது எதனால் தெரியுமா ?

.தி.மு.க-வின் மூத்த அமைச்சரான டி.ஜெயக்குமார், நடிகர் கமல்ஹாசனை தொடர்ந்து சீண்டுவது எதனால் என்ற பின்னணித் தகவல் வியப்பை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

நடிகர் கமல்ஹாசன், தமிழக அரசியல் நிலவரத்தை, மந்திரிகளின் செயல்பாட்டை விமர்சிக்க ஆரம்பித்தார். நடிகர் கமல்ஹாசனுக்கு அதிக அளவு எதிர்ப்புக்குரல் கொடுக்கும் அமைச்சர்கள் பட்டியலில், டி.ஜெயக்குமார் முதலிடம் பிடித்துள்ளார். கமல்ஹாசனின் அடுத்தடுத்த 'ட்வீட்- அறிக்கை' களின் எதிரொலி, பரபரப்பாகப் பேசப்பட்டது. அமைச்சர்களின் இணையதளமே, சில நாட்கள் 'கோமா' வுக்குப் போனது. பின்னர், 'அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை, இணையதளங்கள் நன்றாகவே செயல்படுகின்றன' என்று அமைச்சர்கள் தெரிவித்தனர். ஒரு கட்டத்தில் ஜெயக்குமார், ' 'மூன்றாம்பிறை' படத்தின் க்ளைமாக்ஸ் நிலைமைதான் கமலுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கும் ஏற்படும்' என்று காட்டமாகப் பேட்டியளித்தார். அ.தி.மு.க. அமைச்சர்கள் மட்டுமல்ல, பா.ஜ.க-வின் சுப்பிரமணியன் சுவாமி, ஹெச்.ராஜா, தமிழிசை சௌந்தரராஜன் என்று வரிசையாக பலரும் கமல்ஹாசனுக்கு எதிரான தாக்குதலில் கைகோத்தனர். இன்று வரை இந்தத்    தாக்குதல்கள்  தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.


'அ.தி.மு.க. அமைச்சர்களும், பா.ஜ.க-வும் நடிகர் கமலை குறிவைத்து 'ரவுண்டு' கட்டுவதன் பின்னணி என்ன?' என்று பா.ஜ.க. வட்டாரத்திலேயே விசாரித்தேன். "நடிகர் கமல், அடிப்படையில் கடவுள் மறுப்பாளர். முற்போக்கு என்று சொல்லிக்கொண்டு இந்துக்களுக்கு எதிராகத்தான் எப்போதும் யோசிப்பார். ஏறக்குறைய, அவர் இன்னொரு தி.மு.க. என்றுதான் சொல்ல வேண்டும். அதனால்தான் எங்களுக்கு தி.மு.க-வைப்போல கமலையும் பிடிக்கவில்லை. ரஜினிகாந்த் அப்படி இல்லை. அவர் தனிக்கட்சி ஆரம்பித்தால் கூட எங்களுக்கு சந்தோஷம்தான். ஏனென்றால், அவர் இந்துக்களுக்கு எதிராகப் போக மாட்டார். அதனால்தான், ரஜினியை அரசியலில் இழுத்து விட  முடிவெடுத்தோம். தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வை நாங்கள்தான் சீரழித்தோம் என்ற அவப்பெயரை எங்களுக்கு ஏற்படுத்தி வைத்திருப்பதும் தி.மு.,க-தான்.

இதையெல்லாம் மாற்றத்தான் ரஜினியை வரவழைக்க முயற்சிசெய்தோம். அது நடக்கவில்லை, ஆனால்  நடுவில் கமலஹாசன் வருவார் என்று நாங்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ஜெயகுமார் உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவருமே பா.ஜ.க.வுடன் நல்ல உறவை வைத்துக்கொண்டு, எஞ்சிய ஆட்சிக்காலத்தை பிரச்னையில்லாமல் கொண்டுபோகும் எண்ணத்துடன் செயல்படுகிறார்கள். நடிகர் கமல்ஹாசனை அ.தி.மு.க. அமைச்சர்கள் தீவிரமாக எதிர்ப்பது இதனால்தான்" என்றனர்.