Published:Updated:

உத்தரப்பிரதேசத்தில் பல்கலை தொடங்கியது ஏன்? - சிவ் நாடார் விளக்கம்!

உத்தரப்பிரதேசத்தில் பல்கலை தொடங்கியது ஏன்? - சிவ் நாடார் விளக்கம்!
உத்தரப்பிரதேசத்தில் பல்கலை தொடங்கியது ஏன்? - சிவ் நாடார் விளக்கம்!

சென்னை இன்டர்நேஷனல் சென்டர் சார்பில் நடத்தப்பட்ட கலந்துரையாடல் நிகழ்ச்சியில், ஹெச்.சி.எல் நிறுவனத்தின் நிறுவனரும் தலைவருமான சிவ் நாடார் கலந்துகொண்டார். அதில், ஹெச்.சி.எல் நிறுவனத்தின் பணிக்குப் பிறகு அவர் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பதைத் தெளிவாக எடுத்துரைத்தார்.

கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளும் பதில்களும்...

2016-ம் ஆண்டில் மட்டும் 650 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கி இருக்கிறீர்கள்அறப்பணி செய்ய, உங்களுக்கு எது உந்துதலாக இருந்தது?''

“தென்னிந்தியாவில் ஒரு வேப்பமரம் இருந்தால் அங்கு ஒரு பிள்ளையாரை வைத்து, தங்களால் முடிந்த அளவுக்கு நன்கொடை வழங்குவார்கள். இதன்மூலம் தென்னிந்தியாவில் ஏராளமான கோயில்கள் இருப்பதைப் பார்க்க முடியும். ஆகையால், இது இயல்பிலேயே வந்த ஒன்றுதான்." 

“ ‘கல்வி என்றாலே கேப்பிட்டேஷன் என்றிருந்த காலத்தில் கல்லூரி ஆரம்பித்ததன் நோக்கம் என்ன?''

“1977-ம் ஆண்டில் உத்தரப்பிரதேச அரசுடன் இணைந்து கம்ப்யூட்டர் நிறுவனத்தைத் தொடங்கினோம். 1991-ம் ஆண்டில் ஐந்து மடங்கு அதிக மதிப்புள்ள நிறுவனமாக வளர்த்தெடுத்தோம். இந்தச் சமயத்தில் இந்தியாவில் மாற்றங்கள் நடந்தன. நாங்கள் சர்வதேச அளவில் கால் பதித்து பெரிய நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்தோம். பெருந்தொகை கிடைத்தது. அப்போது என் அம்மாவிடம் `என்ன செய்யலாம்?' எனக் கேட்டபோது, `நான்கு பேருக்கு நல்லது செய்யும் வகையில் ஏதாவது செய்' என்றார். நான் கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் படித்தபோது அதன் நிர்வாகத்தைப் பார்த்து வியந்திருக்கிறேன். அதைப்போலவே, நல்ல கல்வி நிறுவனமாக இருக்கும் வகையில் எஸ்.எஸ்.என் கல்லூரியைத் தொடங்கினோம். 

கல்லூரி தொடங்கியதோடு, மிகுந்த திறமையான கிராமப்புற மாணவர்களை அடையாளம் கண்டு தேர்ந்தெடுத்து உதவித்தொகை வழங்கிப் படிக்கவைக்கிறோம். மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அழைக்கும்போது கால்களில் செருப்புகூட அணியாமல் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். ஆனால், அவர்களிடம் மிகுந்த திறமை இருக்கிறது. அவர்கள் சமுதாயத்தில் மிகச் சிறந்தவர்களாக வருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இவர்களுக்காக ஒவ்வோர் ஆண்டும் நான்கு கோடி ரூபாயைக் கல்வி உதவித்தொகையாக வழங்குகிறோம். இதுவரை 65 கோடி ரூபாய் வழங்கியுள்ளோம்". 

“சிவ் நாடார் பல்கலைக்கழகத்தை அமைக்க ஏன் உத்தரப்பிரதேச மாநிலத்தைத் தேர்ந்தெடுத்தீர்கள்?”

“சென்னையில் தொடங்குங்கள், மதுரையில் தொடங்குங்கள், திருநெல்வேலியில் தொடங்குங்கள் என ஆலோசனை செல்வார்கள். ஆனால், உத்தரப்பிரதேசத்தில் தலைமைச் செயலாளரே `எங்கள் மாநிலத்தில் தொடங்குங்கள்' என்று இடமே ஒதுக்கித் தந்தார். மேலும், பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் தென்னிந்தியாவில் இருக்கின்றன. வட இந்தியாவில் அந்த அளவுக்கு இல்லை. உத்தரப்பிரதேசத்தில் தொடங்க அதுவும் ஒரு காரணம். மேலும், நாங்கள் கல்வி நிறுவனத்தைத் தொடங்கும்போது எந்தவிதமான அரசியல் புள்ளிகளையும் அமைச்சர்களையும் சந்தித்ததில்லை. அதிகாரிகளே ஆதரவு தெரிவித்து அனைத்து வசதிகளையும் வழங்குகிறார்கள்."

“கடந்த ஆண்டு 650 கோடி ரூபாய் நன்கொடை வழங்கி இருக்கிறீர்கள். இது உங்களுடைய செல்வாக்கா அல்லது நிறுவனத்தின் லாபத்தை வழங்கி இருக்கிறீர்களா?”

“ஒரு பல்கலைக்கழகம் வளர வேண்டும் என்றால், 20 முதல் 25 வருடங்கள் ஆகும். நான் இதுவரை லாபத்தைப் பற்றி யோசித்ததே இல்லை. என்னுடைய இதயபூர்வமாக வழங்குவதாகத்தான் நினைக்கிறேன். மாணவர்கள் இதயத்துக்கு நெருக்கமானவர்கள். என்னை வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்திருப்பார்கள்".

“நீங்கள் என்னவாக நினைவுகூர விரும்புகிறீர்கள்?”

“நான் கல்வியாளராக நினைவுகூரப்படுவதையே பெருமையாகக் கருதுகிறேன். கல்வியின் மூலமே அதிக தாக்கத்தை ஏற்படுத்த முடியும்". 

“கல்லூரியைத் தவிர,  வேறு என்னென்ன பணிகளை மேற்கொள்கிறீர்கள்?”

மகள் ரோஷ்னியை முன்நிறுத்தியபடி, “மகளின் தலைமையில் உத்தரப்பிரதேசத்தில் ‘வித்யாக்யான்’ என்ற பெயரில் இரண்டு பள்ளிகளைத் தொடங்கியிருக்கிறோம். இதுகுறித்து மகளிடம் கேளுங்கள்" என்று சொன்னார். 

வித்யாக்யான் பள்ளிகள் குறித்து சிவ் நாடாரின் மகள் ரோஷ்னி “இரண்டு பள்ளிகளுமே லீடர்ஷிப் அகாடமிகளாகத் தொடங்கியிருக்கிறோம். இதன்மூலம் மிகவும் பின்தங்கிய கிராம மக்களின் குழந்தைகளுக்குக் கல்வி வழங்குகிறோம். 6-ம் வகுப்பிலிருந்து 12-ம் வகுப்பு வரை இலவசக் கல்விதான். எதிர்காலத்தில் இந்தப் பள்ளியிலிருந்து குடியரசுத் தலைவர்கள் உருவாவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

உத்தரப்பிரதேசத்தில் பல கிராமங்களைத் தேர்ந்தெடுத்து `சிக்‌ஷா' மற்றும் `சாமுதாய்' என்ற இரண்டு திட்டப்பணிகளை மேற்கொள்கிறோம். எங்களுடைய பணிகளை பில்கேட்ஸ் பவுண்டேஷன் பாராட்டியிருக்கிறது. உத்தரப்பிரதேச உயர் அதிகாரிகள், `சிறிய அளவில் தேர்ந்தெடுத்து மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறீர்களே!' என ஆச்சர்யமடைந்தனர்." 

“தமிழ்நாட்டில் நீங்கள் பல அரசியல் தலைவர்களிடம் பழகி இருக்கிறீர்கள். அந்த அனுபவம் எப்படியிருந்தது?''  என சிவ் நாடரிடம் கேட்டதற்கு அவர்....

“தமிழ்நாட்டில் கலைஞரையும் ஜெயலலிதாவையும் முதலமைச்சராக இருந்தபோது சந்தித்திருக்கிறேன். இரண்டு முதலமைச்சர்களும் `கல்லூரி சீட்டு கொடுங்கள்' என்று என்னிடம் கேட்டதில்லை.

கலைஞர் கருணாநிதியை ஒருமுறை சந்தித்தபோது `பொறியியல் கல்லூரியில் ஒரு லட்சம் பேர் படிக்கிறார்கள். பத்தாயிரம் பேர் ஐ.டி வேலைக்குச் செல்கிறார்கள்; பத்தாயிரம் பேர் இதர வேலைக்குச் செல்கிறார்கள். மீதம் உள்ள 80,000 பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள். இவர்களின் பெற்றோர்கள் வீடு, நிலத்தை எல்லாம் விற்றுப் படிக்கவைக்கிறார்கள்.  இந்த 80,000 பேரின் வேலைக்கு என்ன செய்யலாம்?' என்று என்னிடம் கேட்டார். இந்தக் கேள்வி என்னை ஆச்சர்யப்படுத்தியது."

நிகழ்ச்சியின் இறுதியில் “சிவ் நாடாராக வேண்டும் என்றால், என்ன செய்ய வேண்டும்?'' என்று நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஓர் இளைஞர் கேட்டதற்கு, “நீங்கள் சிவ் நாடாராக வேண்டும் என்றால், உங்களின் தாய் சொல்வதைக் கேட்டாலே போதும்” என்றார்.