Published:Updated:

பா.ஜ.க. மயமாகிக் கொண்டிருக்கும் இந்திய வரைபடத்தில் அடுத்த இலக்கு தமிழ்நாடா..?!

பா.ஜ.க. மயமாகிக் கொண்டிருக்கும் இந்திய வரைபடத்தில் அடுத்த இலக்கு தமிழ்நாடா..?!
பா.ஜ.க. மயமாகிக் கொண்டிருக்கும் இந்திய வரைபடத்தில் அடுத்த இலக்கு தமிழ்நாடா..?!

ந்து மாதங்களில் ஒரு லட்சம் கிலோமீட்டர் பயணம்... 2019 மக்களவைத் தேர்தலுக்கான பி.ஜே.பி-யின் முன் தயாரிப்பாக அமித்ஷா இந்தியா முழுதும் பயணிக்க இருக்கும் தொலைவு இது. மகாராஷ்டிரா, ஹரியானா, அசாம், உத்தரப்பிரதேசம், கோவா, மணிப்பூர் என சென்ற மாநிலங்களில் எல்லாம் கடந்த ஆண்டுகளில் வெற்றியை அடைந்துள்ளது பி.ஜே.பி. ’மோடி மஸ்தான்’ மந்திரம்தான் இதற்குப் பின்னணியிலான காரணம் என்று கூறப்பட்டாலும், மோடிக்குப் பின்னணியில் இயங்கும் அமித்ஷாவும் இதற்கு முக்கியக் காரணம் என்பதை மறுக்க முடியாது.

மற்ற மாநிலங்களில் எல்லாம் ஏற்கெனவே வலுவாகப் பி.ஜே.பி இருந்த நிலையில், அமித்ஷா தரப்புக்கு அங்கே அவ்வளவாகக் களப்பணியாற்ற வேண்டிய தேவை இருந்திருக்கவில்லை. ஆனால், உத்தரப்பிரதேசத்தில் மட்டும் கொஞ்சம் கூடுதல் கவனம் தேவைப்பட்டது. காரணம், அங்கிருந்துதான் மக்களவைக்கு அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அதற்காக அங்கே தலித் அரசியலை மற்ற கட்சிகள் கையிலெடுப்பதற்கு முன்பு, தேர்தலில் பி.ஜே.பி தன் கையில் எடுத்துக்கொண்டது. தேர்தலைச் சந்திப்பதற்கு முன்பு 2012 தொடங்கி சுமார் ஐந்து ஆண்டுகள் அங்கே கட்சியை வலுப்படுத்த செயல்பட்டார் அமித்ஷா. பகுஜன் சமாஜும் சமாஜ்வாடியும் கோலோச்சிக்கொண்டிருந்த கோட்டையைப் பி.ஜே.பி பிடித்தது அப்படித்தான். அதேபோல, அசாமில் 15 வருட காலம் அரியணையில் இருந்த காங்கிரஸை ஓரங்கட்டியது, உத்தரகாண்ட், ஹரியானா, மகாராஷ்டிரா மாநிலத் தேர்தல்களில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அடையாளம் காட்டாமலேயே இறுதியில் வென்றது, தற்போது தீப்பற்றி எரிந்துகொண்டிருக்கும் மேற்கு வங்க அரசியல் விவகாரம், பீகாரில் நிதிஷ் - லாலு கூட்டணியில் இருந்த ஆட்சியை நிதிஷ் - பி.ஜே.பி கூட்டணி ஆட்சியாக மாற்றியது என அத்தனைக்குப் பின்னணியிலும் அமித்ஷாவின் மூளை இருந்தது. 

ஜெயலலிதாவின் திடீர் மறைவு, கருணாநிதியின் செயல்திறன் குறைந்து இருப்பது, அ.தி.மு.க-வில் உள்கட்சிப் பூசல் என திராவிடக் கட்சிகள் சற்றே ஆட்டம் கண்டுள்ள நிலையில், அமித்ஷாவின் தோணி தற்போது இந்திய வரைபடத்தின் தென்கடைக் கோடி மாநிலமான தமிழகத்தை நோக்கி அசைந்து வந்துகொண்டிருக்கிறது. 22 ஆகஸ்ட் தொடங்கி மூன்று நாள் பயணமாகத் தமிழகம் வரவிருக்கும் அவர், தமிழக பி.ஜே.பி-யின் மாநிலத் துணைத் தலைவர்கள், தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் அமைக்கப்பெற்ற பொறுப்பாளர்கள் என அனைவரையும் சந்திக்க இருப்பதாகக் கட்சித் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கட்சியை வலுப்படுத்துவதற்கு மட்டுமே இந்தப் பயணம் என்று கூறப்பட்டாலும், ஏற்கெனவே கடந்த மே மாதத்தில் ஒருமுறை தமிழகத்துக்கு வருவதாகத் திட்டமிடப்பட்டிருந்து. அந்தத் திட்டம், ரத்தாகி மீண்டும் தற்போது தமிழகம் வருகிறார் அமித்ஷா. இவர் வருவதன் உண்மையான காரணம் என்ன? உத்தரப்பிரதேசம் என்னும் பெரு மாநிலத்தைப் பி.ஜே.பி தன் வசப்படுத்திக்கொண்ட பின் அடுத்த இலக்கா தமிழகம்?. 

“அ.தி.மு.க-வைத் தூக்கிப்பிடிக்க நாங்கள் இல்லை!”

தமிழக பி.ஜே.பி தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறுகையில்... ''பொது நிகழ்வுகள், அரசியல் சந்திப்புகள் என எந்தவித திட்டங்களும் அமித்ஷாவின் தமிழக வருகையில் இடம்பெறவில்லை. 234 தொகுதிகளுக்கான சட்டமன்றப் பொறுப்பாளர்கள், நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான பொறுப்பாளர்கள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான கமிஷனைச் சேர்ந்தவர்கள், கல்வியாளர்கள், பத்திரிகையாசிரியர்கள் ஆகியோரைச் சந்திக்கிறார் அமித்ஷா. ஏற்கெனவே நாங்கள் செய்துள்ள களப்பணிகள் திருப்திகரமாக இருப்பதாகக் கூறியுள்ளார். மைக்ரோ லெவல் மேனேஜ்மென்ட்டில் கைதேர்ந்தவரான அவரின் அறிவுரைகள் மேலும் இங்கே கட்சியை வலுப்படுத்துவதாக அமையும். மற்றபடி இங்கே எதிர்க் கட்சிகள் கூறுவதுபோல நாங்கள் கொல்லைப்புறமாக வந்து ஆட்சி அமைக்கத் திட்டம் தீட்டவோ அல்லது தற்போதைய அரசை மத்திய அரசு கைப்பாவையாக ஆட்டிவைக்கவோ இல்லை. எங்கள் கட்சியையே வலுப்படுத்த வேண்டிய நிலை இருக்கும்போது மற்ற கட்சிகளை நாங்கள் எதற்கு உயர்த்திப் பிடிக்கப் போகிறோம்” என்றார்.

''தலித்களின் வலிகளை உணர்ந்த கட்சி பி.ஜே.பி.!”

தாம் பயணம் செய்யும் மாநிலங்களில் எல்லாம் தனது பல்வேறு நிகழ்ச்சி நிரல்களுக்கு இடையே தலித் ஒருவரின் வீட்டில் உண்பதையும் ஒரு கட்டாய நிகழ்வாக அமைத்துக்கொள்கிறார் அமித்ஷா. அது, தெள்ளத்தெளிவான அரசியல் காய் நகர்த்தல் என்று ஒரு பக்கம் கூறப்படுகிறது. ''தமிழகப் பயணத்திலும் அமித்ஷாவுக்கு அப்படி ஏதேனும் திட்டமிருக்கிறதா'' என்று தமிழிசை சவுந்திரராஜனிடம்  கேட்டதற்கு, ''நான் உள்பட அனைத்து பி.ஜே.பி தலைவர்களுமே தலித்கள் வீட்டில் உண்பதை எங்களது செயல்பாடுகளில் ஒன்றாகக் கொண்டிருக்கிறோம். எழுபது ஆண்டுகால காங்கிரஸின் செயல்பாடுகளில் இன்றளவும் ஒடுங்கியே இருக்கும் அவர்களின் பிரச்னைகள் என்ன என்று அவர்களுடன் அமர்ந்து உண்ணும்போதுதான் விளங்கிக்கொள்ள முடியும். மற்றபடி இதில் எவ்வித அரசியல் பின்னணியோ அல்லது விளம்பரமோ இல்லை. தலித்களின் வலிகளை உணர்ந்த கட்சி பி.ஜே.பி” என்றார்.  

முதலில் தன்னிலை உணர்ந்து வலுப்படுத்திக்கொண்டால் மட்டுமே களத்திலும் வலுவாக நிற்கமுடியும் என்பதை நன்கு உணர்ந்தவர் அமித்ஷா. சிறுவனாக இருக்கும்போது ஆர்.எஸ்.எஸ்ஸில் சேர்ந்தது தொடங்கி, மோடியின்கீழ் அதே ஆர்.எஸ்.எஸ்ஸின் இளைஞர்கள் பிரிவில் பணியாற்றியது முதல் பின்னாளில் அந்த மோடியே தனது ஆட்சியை நீட்டிக்கத் தவிர்க்கமுடியாத ஓர் அங்கமாக மாறிவிட்ட அமித்ஷா தன்னளவிலும் கட்சியிலும் ஆர்.எஸ்.எஸ்ஸின் இதே கொள்கையைத்தான் பின்பற்றி வருகிறார். கிட்டத்தட்ட இது உத்தரப்பிரதேசத்தில் கையாண்ட யுக்தியும் இதுவே. ''கட்சியை வலுப்படுத்த மட்டுமே...” என்று தமிழிசை மீண்டும் மீண்டும் சொல்வதும், ''மற்ற கட்சிகளைத் தூக்கிவிட அவர் வரவில்லை” என்று சூசகமாகக் கூறுவதன் பின்னணியிலும், பி.ஜே.பி தனித்து களம்காணவே விரும்புகிறது என்கிற எண்ணம் தெளிவாகிறது. 

மதச்சார்பின்மையும் இறையாண்மையும் இன்னும் எஞ்சியிருப்பதாக நம்பப்படும் தமிழகத்தின் எதிர்காலம் என்னவாகும்? இதற்கும் காலத்தைத்தான் கைகாட்ட வேண்டும்.