Published:Updated:

சிவாஜி சிலை அகற்றப்பட்டதில் சதி, மெரினா கடற்கரையில் அமைக்க வேண்டும்! - ராமதாஸ் கோரிக்கை

சிவாஜி சிலை அகற்றப்பட்டதில் சதி, மெரினா கடற்கரையில் அமைக்க வேண்டும்! - ராமதாஸ் கோரிக்கை
சிவாஜி சிலை அகற்றப்பட்டதில் சதி, மெரினா கடற்கரையில் அமைக்க வேண்டும்! - ராமதாஸ் கோரிக்கை

'சென்னை கடற்கரைச் சாலை, ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில், கடந்த 11 ஆண்டுகளுக்கும் மேலாக கம்பீரமாக நின்றுகொண்டிருந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலை, இரவோடு இரவாக அகற்றப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இது, நீதிமன்ற ஆணைப்படி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்று கூறப்பட்டாலும்கூட, இதன் பின்னணியில் சில சதிகள் அரங்கேற்றப்பட்டதை மறுக்க முடியாது' என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சிதம்பரனார் உள்ளிட்ட வரலாற்றுப் பாத்திரங்களுக்கு திரையில் உயிரூட்டியவர், நடிகர் திலகம். அவருக்கு சென்னையில் சிலை வைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை எழுப்பினர். அதைத் தொடர்ந்து, கடந்த 2006-ம் ஆண்டு அவரது நினைவு நாளான ஜூலை 21-ம் தேதி கடற்கரைச் சாலையில் காந்தி சிலை அருகில் திறந்துவைக்கப்பட்டது. அப்போதே இந்தச் சிலையால் விபத்துக்கள் ஏற்படுவதாகவும், அதனால் அதை அகற்றக்கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. ஆனால், சிவாஜி சிலையை அகற்ற முடியாது என்று உயர் நீதிமன்றம் இடைக்காலத் தீர்ப்பளித்தது. அதன்பின், 7 ஆண்டுகள் கழித்து 2013-ம் ஆண்டு இவ்வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது,  சிவாஜி சிலையால் சாலை விபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும், அகற்றத் தேவையில்லை என்றும் தமிழக அரசு தெரிவித்தது.

ஆனால், அடுத்த ஒரு வாரத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்ட தமிழக அரசு, சிவாஜி சிலையால்தான் அந்தப் பகுதியில் அதிக விபத்துகள் ஏற்படுவதாகவும், அதனால் சிலையை அகற்றலாம் என்றும் கூறியது. இதன் அடிப்படையில்தான்  சிலையை அகற்ற உயர் நீதிமன்றம் ஆணையிட்டது. சிலை அமைக்கப்பட்ட 7 ஆண்டுகளில், அந்தப் பகுதியில் எந்த விபத்தும் ஏற்படாத நிலையில், விபத்துகள் ஏற்பட்டதாக பொய்யான தகவலை நீதிமன்றத்துக்கு வழங்கி, சிலை அகற்றும்படி நீதிமன்றமே உத்தரவிடும் நிலையை ஏற்படுத்தியது அப்போதைய ஜெயலலிதா அரசு திட்டமிட்டுச் செய்த சதி என்பதில் ஐயமில்லை.

கடற்கரைச் சாலையில் சிவாஜி சிலை இருந்ததால் விபத்துகளோ, போக்குவரத்து பாதிப்புகளோ ஏற்பட்டதில்லை. சென்னை அண்ணா சாலையின் நடுவில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோரின் சிலைகள் உள்ளன. தமிழகம் முழுவதும் சாலைகளின் நடுவில் 10,000-க்கும் மேற்பட்ட சிலைகள் உள்ளன. இவற்றால் போக்குவரத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை என்று கூறிவரும் தமிழக அரசு, இந்த உண்மையை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்து, சிவாஜி சிலை தொடர்ந்து அதே இடத்தில் நீடிக்க வகை செய்திருக்க முடியும். ஆனால், அதைச் செய்ய தமிழக அரசு தவறிவிட்டது.

புதிய சிலை ஒன்றைத் தயாரித்து, அதை மெரினா கடற்கரையில் காந்தி, காமராஜர் சிலைகளுக்கு இடையில் நிறுவ வேண்டும். சிவாஜி கணேசனின் 90-வது பிறந்தநாள், வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், அந்த நாளில் அவரது புதிய சிலையை அரசு திறக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.