Published:Updated:

கைதிகள் அடுத்தடுத்து இறப்பு..! கேள்விக்குறியாகும் புழல் சிறை பாதுகாப்பு

கைதிகள் அடுத்தடுத்து இறப்பு..! கேள்விக்குறியாகும் புழல் சிறை பாதுகாப்பு
கைதிகள் அடுத்தடுத்து இறப்பு..! கேள்விக்குறியாகும் புழல் சிறை பாதுகாப்பு

சென்னை குரோம்பேட்டை சென்ட்ரல் பேங்க் காலனியைச் சேர்ந்த அந்தோணிராஜ், கொலைவழக்கில் சிறைக்குப் போனவர். அவர் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சிறைக் கைதிகள் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடும் அளவுக்கு மிகவும் வசதியாக அமைந்திருக்கிறது, மத்திய புழல் சிறை. அந்த வகையில் நேற்று முன்தினம்  இறந்திருப்பது, அந்தோணிராஜ்.  புழல் சிறையில் அடுத்தடுத்த தற்கொலைகளால் உள்ளே இருக்கும் பிற கைதிகள் பீதியடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், புழல்சிறை பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது. காதலி நிவேதாவை கார் ஏற்றிக் கொன்றதாகக் கைதாகி, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இளையராஜா, கடந்த மே மாதம் 8- ம் தேதி  தூக்கிட்ட நிலையில் பிணமாகக் கிடந்தார்.  தமிழகத்தையே உலுக்கிய, பொறியாளர் சுவாதி கொலை வழக்கு தொடர்பாக போலீஸாரால் கைதாகி புழல் சிறையில் அடைபட்டவர் ராம்குமார். கடந்த  2016- ஆண்டு செப்டம்பரில்,  மின்சார கேபிளைக் கடித்து  சிறையிலேயே ராம்குமார் தற்கொலை செய்துகொண்டதாகச் சொல்லப்பட்டது. அடுத்ததாக, சென்னை போரூரில், பிப்ரவரி மாதம் நடந்த இரட்டைக் கொலை வழக்கில் கைதாகி  புழல் சிறையில் இருந்த செந்தில் என்பவர்,  கடந்த மே 29-ம் தேதி  இறந்துகிடந்தார்.  கழிப்பறைக்குப் போனவர், தன்னுடைய லுங்கியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார் என்கிறது போலீஸ். ஆசியாவிலேயே மிகப்பெரிய சிறைச்சாலை,  221 ஏக்கர் பரப்பளவு. ஒரே நேரத்தில்  3 ஆயிரம் கைதிகளை அடைக்கும் வசதி, 30 அடி உயர சிறைச்சாலை சுவற்றின் மீது, ஒன்றரை அடி உயரத்துக்கு மின்வேலி, சுற்றிலும் 15 கண்காணிப்புக் கேமராக்கள். இருந்தும் தற்கொலைகள் சாதாரணமாக நிகழ்கின்றன.


                                       

லேட்டஸ்ட் தற்கொலைப் பட்டியலில் வந்திருக்கும் அந்தோணிராஜ், புழல் மத்தியச் சிறையில் சிறை எண் 1-ல்  2015-ம் ஆண்டுமுதல் அடைபட்டுக்கிடந்தவர். சென்னை குரோம்பேட்டை,சென்ட்ரல் பேங்க் காலனியைச் சேர்ந்த அந்தோணிராஜ், சிறையில் உள்ள குளியல் அறையில்  கழிவறையைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தும்  பிளீச்சிங் பவுடரை எடுத்து அந்தோணிராஜ் உட்கொண்டதாகக் கூறப்படுகிறது.  சிறைக் காவலர்கள் அவரை  மீட்டு,  சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுவந்து சேர்த்தனர். இதுகுறித்து புழல்  போலீசார் விசாரணை நடத்திவந்தநிலையில், மருத்துவ சிகிச்சை பலனின்றி அந்தோணிராஜ் உயிரிழந்தார் .தமிழகத்தில் புழல் மற்றும் பிற சிறைகளில் தற்கொலை செய்துகொண்டவர்களின் எண்ணிக்கை 69. அந்தோணிராஜ் இறப்புக்குப் பின் அது 70 ஆக உயர்ந்துள்ளது.