Published:Updated:

திருச்சி மாநாட்டுக்கு வாருங்கள்..! ரசிகர்களுக்கு ரஜினி திடீர் அழைப்பு

திருச்சி மாநாட்டுக்கு வாருங்கள்..! ரசிகர்களுக்கு ரஜினி திடீர் அழைப்பு
திருச்சி மாநாட்டுக்கு வாருங்கள்..! ரசிகர்களுக்கு ரஜினி திடீர் அழைப்பு

திருச்சியில் வரும் 20-ம் தேதி நடக்கும் காந்திய மக்கள் இயக்க மாநாட்டுக்கு செல்லுங்கள் என்று ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் தரப்பில் தகவல் சொல்லப்பட்டுள்ளது. இதனால் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த அழைப்பை ரஜினி அரசியல் பிரவேசமாகவே ரசிகர்கள் கருதுகின்றனர்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, தமிழக அரசியலில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க ஆட்சி நடந்தாலும் அரசு எடுக்கும் எந்த முடிவுகளும் பா.ஜ.க-வை மையப்படுத்தியே இருக்கின்றன. இந்தச் சூழ்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, அண்மையில் ரஜினிகாந்த், தனது ரசிகர்களைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பு, ரஜினி அரசியலுக்கு அச்சாரம் போடுவதாகத் தகவல் வெளியானது. ஆனால், ரஜினி தரப்பிலிருந்து உறுதிப்படுத்தவில்லை. ஒட்டுமொத்த ரஜினி ரசிகர்களும் அவரை அரசியலுக்கு வர வேண்டும் என அறைகூவல் விடுத்தனர். இந்தச் சமயத்தில் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன், ரஜினி அரசியலுக்கு வருவார் என்று பகிரங்கமாக அறிவித்தார். ஆனால், ரஜினி தரப்பில் இருந்து மறுப்பு ஏதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதற்கிடையில், தமிழக அரசை நடிகர் கமல் கடுமையாக விமர்சித்தார். அவரும் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதையடுத்து, காந்திய மக்கள் இயக்கத்தின் சார்பில் ஆகஸ்ட் 20-ம் தேதி திருச்சியில் மாநாடு நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டில் ரஜினி ரசிகர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு ராகவேந்திரா மண்டபத்திலிருந்து அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்ட நிர்வாகிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து ரஜினி மன்ற நிர்வாகிகள் கூறுகையில், "போருக்குத் தயாராக இருங்கள் என்று ரஜினி அழைப்பு விடுத்திருந்தார். நாங்களும் தயாராகத்தான் இருக்கிறோம். எங்களுக்கு ராகவேந்திரா மண்டபத்திலிருந்து காந்திய மக்கள் இயக்கம் நடத்தும் திருச்சி மாநாட்டில் கலந்து கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. அந்த மாநாட்டில் ரஜினி வருவார் என்று நம்புகிறோம். ரஜினி அரசியலுக்கு வந்தால்மட்டுமே தமிழகத்தைக் காப்பாற்ற முடியும்" என்றனர்.

இதுகுறித்து காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியனிடம் கேட்டபோது, இந்த மாநாட்டை காந்திய மக்கள் இயக்கம்தான் நடத்துகிறது. அந்த மாநாட்டில் ரஜினி அரசியலுக்கு வந்தால் தமிழகத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து நான் பேச உள்ளேன். இதனால், ரஜினி ரசிகர்கள் அந்த மாநாட்டுக்கு வரலாம். ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று ஒரு குடிமகனாக விரும்புகிறேன். ஆனால், இந்த மாநாட்டில் பங்கேற்க ரஜினிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை" என்றார்.

ராகவேந்திரா மண்டபத்திலிருந்து ரசிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதை ஊர்ஜிதப்படுத்த அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்றப் பொறுப்பாளர் சுதாகரைத் தொடர்புகொள்ள முயன்றோம். பலனில்லை. இது தொடர்பான ஊர்ஜிதமான தகவலை அவர் தரப்பினர் அளித்தால், பரிசீலனைக்குப் பின் பிரசுரிக்கத் தயாராகவே இருக்கிறோம்!