Published:Updated:

'கக்கூஸ்' இயக்குநர் திவ்யா விவகாரத்தில் இன்னொரு கோணம்!

'கக்கூஸ்' இயக்குநர் திவ்யா விவகாரத்தில் இன்னொரு கோணம்!
'கக்கூஸ்' இயக்குநர் திவ்யா விவகாரத்தில் இன்னொரு கோணம்!

சட்டப் படிப்பை முடித்ததும் ஆவணப்படம் எடுப்பதில் இறங்கிய திவ்யாபாரதியின் முதல் ஆவணப்படம், கக்கூஸ். இந்தப் படத்தை முன்னிட்டு தென்மாவட்ட சாதிய அரசியலில் பரபரப்பு நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த ஆவணப்படத்தை முன்னிட்டும், இதையொட்டி திவ்யாபாரதியின் தொடர்ந்த சில செயல்பாடுகள் குறித்தும் தலித்திய அரசியலில் விமர்சனங்களும் எழுந்துள்ளன. 

கட்சிஅரசியலில் புதிய தமிழகம் கட்சியின் எதிர்வினையைத் தாண்டி, சாதிவிடுதலை அரசியலில் இப்படம் பற்றிய உரையாடல்கள் கவனம்பெற்றுள்ளன. விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் முன்னியான, இந்திய தலித் சிறுத்தைகள் இயக்கத்தின் நிறுவனர் மறைந்த மலைச்சாமியின் மகனும் ஆவணப்பட இயக்குநருமான வினோத், தொடர்ச்சியாக இக்கருத்தை பேசியும் எழுதியும் வருகிறார். 

”தோழர் திவ்யா பாரதி மீதான வன்முறைகள் கண்டிக்கப்படவேண்டியது. ஆனால் இந்தப் படம் வெளியானதிலிருந்தே, அருந்ததியரைத் தவிர  (ம)பள்ளர் சமூகத்தினரும் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது தவறானது; சமூகப் புறக்கணிப்பிலிருந்து மேலெழுந்து வரும் சமுதாயத்தினரை, மீண்டும் மீண்டும் இழிதொழில் செய்பவர்கள் எனச் சித்தரிப்பது தவறு. துப்புரவுத் தொழிலில் மற்ற பல சமூகத்தினரும் ஈடுபட்டுள்ள நிலைமையில், பட்டியல் சாதியினர் மட்டும் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளதாக ஏன் குறிப்பிடவேண்டும்?” எனக் கேட்கிறார். 

“ஓர் ஆவணப்படத்தை எடுத்ததற்காக ஆபாசத் தாக்குதல், கொலைமிரட்டல் என்றெல்லாம் இறங்குவது, கலாச்சார போலீஸ்தனம். இதை அரசும் மற்றவர்களும் பார்த்துக்கொண்டு இருக்கமுடியாது” எனும் எழுத்தாளர் மாலதி மைத்ரியிடம் இந்தப் பிரச்னை குறித்துக் கேட்டோம். 

” இந்த ஆவணப்படமானது, இரண்டு சேதிகளை முன்வைக்கிறது. ஒன்று துப்புரவுத் தொழிலாளர்களை கையால் மலமள்ளும் தொழிலாளர்களாக(manual scavenging)அங்கீகரிக்கவேண்டும் என்பது; பாதுகாப்புக் கருவிகளோடு பணியாற்றுபவர்களை(manual scavenger) கையால் மலமள்ளும் தொழிலாளர்களாகக் கணக்கில்கொள்ள வேண்டும்; இதற்காக  சட்டத்தைத் திருத்தவேண்டும்; அப்படிச் செய்தால்தான் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய பணிப்பாதுகாப்பும் நிவாரணம் கிடைக்கும் என இந்தப் படம் சொல்கிறது. இது ஒரு என்.ஜி.ஓ. பார்வை. பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு தரவேண்டும் எனப் படம் சொல்கிறது; தலித் தலைவர்களின் பேட்டிகளைக் கொண்டிருக்கிறது. ஆனால் படத்தில் தங்களுக்கு பாலியல்சீண்டல் தரும் ஒப்பந்தகாரர்களைப் பற்றி துப்புரவுத் தொழிலாளர்கள் சொல்கிறார்கள். பழனியில் துப்புரவுத் தொழிலாளர்களை மொத்தமாக வேலைநீக்கம் செய்தபோது, ஒரு தொழிலாளர் தீக்குளித்தார். இவற்றில் எல்லாம் காரணமாக இருக்கும் அதிகாரிகள், ஒப்பந்தகாரர்களிடம் கேமரா போயிருக்கவேண்டும். அப்படிப் போகவில்லையே? துப்புரவுத் தொழிலாளர்களுக்கு பெரும்பாலாக எதிராகச் செயல்படும் சாதி இந்துக்களின் மீதான குற்றச்சாட்டுக்குள் இந்தப் படம் போகவில்லை. 

பழனியில் தீக்குளிப்புக்குக் காரணமான அரசு அதிகாரிகளை, ஒப்பந்தகாரரை இந்தப் படம் கேள்விக்கு உட்படுத்தவில்லை. ஆனால், படத்திலும் பின்னர் வெளியிலும் மலக்குழிக்குள் இறங்கி இறந்துபோனவரின் மைத்துனர் விடுதலைவீரன் என்பவர், இழப்பீட்டில் கமிசன் வாங்கிக்கொண்டார் என்று அம்பலப்படுத்தி, அதை ஒரு இயக்கமாக எடுக்கிறார். துப்புரவுத் தொழிலாளர்களைச் சுரண்டும் பிரச்னையில், தலித்துகளை மட்டும் இலக்காக வைத்து அம்பலப்படுத்தி இயக்கம் எடுப்பது தலித் விடுதலை அரசியலை அழித்தொழிக்கும் முயற்சியாகவே நான் பார்க்கிறேன். தலித்திய அரசியலில் குறைகள் உண்டு; அவை சரிசெய்யப்படவேண்டும். ஆனால், தலித் அடையாள அரசியல் மீது கம்யூனிஸ்ட்டுகளுக்கு எப்போதுமே காழ்ப்புணர்வு உண்டு. பாஜக, ஆர்.எஸ்.எஸ்.-ஐவிட அம்பேத்கரை வீழ்த்துவதில் இவர்கள் தீவிரமாக இருக்கிறார்கள். 

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் துப்புரவுப் பணியை 30 ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பந்த முறைக்கு மாற்றிவிட்டார்கள். 15 நாட்களுக்கு ஒரு முறை ஒப்பந்தம் மாறும். அதன் பிறகு இன்றுவரை முன்னேறிய சாதி என்பவர்களும் துப்புரவுப் பணியில் ஈடுபடுகிறார்கள். எனக்குத் தெரிந்து பல மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினர் இந்தப் பணியில் இருக்கிறார்கள். இந்த நிலையில், ஓர் ஆவணப்படத்தில் அருந்ததியர்கள், பள்ளர், பறையர், ஒட்டர்கள் மலமள்ளும் தொழிலில் இருக்கிறார்கள் என்று படம் சொல்கிறது. ஆனால் பிற சாதி இந்துக்களும் மலமள்ளும் தொழிலில் இருப்பதை ஏன் காட்டவில்லை என பள்ளர் சமூகத் தோழர்கள் கேள்வி எழுப்புவதை சரி என்றே நினைக்கிறேன். இந்தப் படம், பத்தோடு பதினொன்றாகப் போகக்கூடியது அல்ல; இணையத்தில் எங்கோ ஒரு நாட்டில் இதை ஆவணப்படமெனப் பார்ப்பவர்களுக்கு, முழுமையான சித்திரம் காண்பிக்கப்படவேண்டும். சில குறைகள் நீங்கலாக, இந்தப் படத்தை எடுத்த முயற்சியைப் பாராட்டுகிறேன்” என்கிறார் எழுத்தாளர் மாலதி மைத்ரி. 

திவ்யாவுக்கு முன்னோடியாகவும் தமிழகத்தின் முக்கிய ஆவணப்பட இயக்குநருமான ஆர்.பி. அமுதன், திவ்யாவுக்கு எதிரான ஆபாச, வன்முறை தாக்குதல்களை எதிர்த்து கையெழுத்து இயக்கம் நடத்துகிறார். அவரே, ”படம் குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்கவேண்டியது இயக்குநரின் கடமை; இந்தக் கேள்விகள், ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வருகின்றன”என்பதை அழுத்தமாகச் சொல்கிறார். 

விமர்சனங்களை சுயவிமர்சனமாக ஆக்கி படைப்பை மேம்படுத்துவது படைப்பாளியின் கடமைதானே!