Published:Updated:

இந்திரா காந்தியை எதிர்த்த மக்கள் பாடகர்! - கிஷோர் குமார் பிறந்த தின சிறப்புப் பகிர்வு

இந்திரா காந்தியை எதிர்த்த மக்கள் பாடகர்! - கிஷோர் குமார் பிறந்த தின சிறப்புப் பகிர்வு
இந்திரா காந்தியை எதிர்த்த மக்கள் பாடகர்! - கிஷோர் குமார் பிறந்த தின சிறப்புப் பகிர்வு

”தேரே பினா ஜிந்தகி சே கோயி... ஷிக்குவா நஹி!

தேரே பினா ஜிந்தகி பி லேகின்... ஜிந்தகி தோ நஹி..”

இசையமைப்பாளர் ஆர்.டி.பர்மன் இசையமைத்து 'ஆந்தி' என்கிற திரைப்படத்துக்காக லதா மங்கேஷ்கருடன் ஜோடி சேர்ந்து கிஷோர் குமார் பாடிய பாடல் அது.  

'நீ இல்லாதபோதும் இந்த வாழ்க்கையில் எந்தவித மனக்குறையும் இல்லை... ஆனால், நீ இல்லாத வாழ்க்கை வாழ்க்கையே இல்லை' என்பதுதான் அந்த பாடல் வரி உணர்த்துவது. கிஷோர் குமார் என்றாலே நினைவில் நின்றுவிடும் பல்லாயிரக்கணக்கான பாடல்களில் இந்தப் பாடலும் ஒன்று. இசைக்காகவென்றே பாடுபவர்கள், மக்கள் மனம்போலப் பாடுபவர்கள் என்று பாடகர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். தற்காலத்தில் அப்படி எஸ்.பி.பி., கார்த்திக் என்று வெர்ஸ்டைல் பாடகர்கள் வகைப்படுத்தப்பட்டாலும் இவர்களுக்கெல்லாம் முன்னோடி எனலாம் கிஷோர் குமாரை. 1929-ம் வருடம் இதே தேதியில் மத்தியப் பிரதேசத்தில் பிறந்த கிஷோருக்கு முறைப்படியான பாடல் பயிற்சியெல்லாம் இருந்ததில்லை. தொடக்கத்தில் சினிமாவில் நடிகராக அறிமுகமானவருக்கு அவர் படங்களில் பாடத் தொடங்கிய பிறகு ‘பாடகர்’ என்கிற அடையாளமே பிரதானமாக அமைந்தது. ஆல் இந்தியா ரேடியோவில் அவரது குரலில் ஒலிக்கும் சினிமாப் பாடல்களைக் கேட்பதற்காக ரேடியோ பெட்டி வாங்கிவைத்த நேயர்களும் உண்டு.

பின்னாளில், அதே ’ஆல் இந்தியா ரேடியோ’தான் அவரது பாடல்களை ஒலிபரப்புவதை நிறுத்திக்கொண்டது. அதற்கும் இந்திய ஜனநாயக வரலாற்றுக்குமே சீரிய தொடர்பு உண்டு. அது எமர்ஜென்சி காலகட்டம். 'இந்திரா காந்தி நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது' என்ற அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பையே செல்லாததாக்கும் விதமாக இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் 10 ஆகஸ்ட் 1975 அன்று திருத்தம் கொண்டுவரப்படுகிறது. அதன்படி ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மக்களவை சபாநாயகர் ஆகியோரின் தேர்வுகள் இந்திய நீதிமன்றங்களுக்கு அப்பாற்பட்டது என்று அறிவிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து அதிர்ச்சிகரமான அரசியல் திருப்பங்கள் நிகழ்ந்ததில் மக்கள், இந்திரா காந்தி தலைமையின்மீது தீவிர அதிருப்தியில் இருந்தார்கள். அவர்களை எப்படியேனும் திருப்திபடுத்த இந்திரா காந்தி தலைமையிலான அரசு இருபது அம்ச திட்டத்தை உருவாக்கியது.

மே 4, 1976 அன்று மும்பையில் நடந்த கட்சி மாநாட்டில் இந்திராவின் இருபது அம்ச திட்டத்தை விளக்கிப் பாடும்படி அழைக்கப்பட்டார் கிஷோர் குமார். அழைத்தவர், அப்போதைய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் வி.சி.சுக்லா. “எங்கள் பிரதமரின் இருபது அம்ச திட்டத்தை விளக்கி நீங்கள் பாடவேண்டும்” என்றிருக்கிறார் சுக்லா. “பாடவேண்டும் என்பது கட்டளையா அல்லது கோரிக்கையா? எப்படி இருந்தாலும் என்னால் பாட முடியாது” என்று மறுத்துள்ளார், கிஷோர் குமார். 

இது, சஞ்சய் காந்தியின் காதுகளுக்கு எப்படியோ எட்டியது. இதையடுத்து கோபமடைந்த இந்திரா தரப்பு ஆல் இந்தியா வானொலியில் ஒரு வருடத்துக்குக் கிஷோரின் பாடல்கள் எதுவும் ஒலிக்க முடியாமல் தடை செய்தது. இப்போது இருப்பதுபோலத் தனியார் பண்பலைகள் இல்லாத காலமும் அது. இதனால், அவரது வாழ்வின் இருண்டகாலமாகவே அந்த நாட்கள் இருந்தன. 

எமர்ஜென்சி காலம் முடிந்து அடுத்துவந்த 1977-ம் வருடத் தேர்தலில் மொரார்ஜி தேசாய் வெற்றிபெற்று அவரது அரசு பதவியேற்கும்வரை அந்தத் தடை அப்படியே இருந்தது. இருப்பினும், கலை மக்களுக்கானது... அதிகாரத்துக்கானது இல்லை என்பதில் தெளிவாகவே இருந்தார் கிஷோர்.

”..பரே படே இஸ் துணியா மேன்

அகல் கே அந்தே நிகல் கே தண்டே

ஜூட் மேன் பந்தே...”

1958-ல் கிஷோர், ‘சந்தன்’ என்னும் படத்துக்காகப் பாடிய சூப்பர் ஹிட் பாடல் அது. 'உலகத்தின் துருவங்கள் பஞ்சத்தால் பிணைக்கப்பட்டுள்ளன' என்பதே இதன் சாராம்சம். 2017-லும் இந்த வரிகள் உலக வாழ்வியலோடு ஒப்புக்கொள்ளப்படுவதில் வியப்பில்லைதான்.