Published:Updated:

விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு நஷ்ட ஈடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி

விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு நஷ்ட ஈடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி
விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு நஷ்ட ஈடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி

அரசுப் பேருந்து  விபத்து வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு வழங்க வேண்டிய நஷ்ட ஈட்டுத் தொகையை வழங்காததால் ராமநாதபுரம் நீதிமன்ற உத்தரவின்படி வியாழக்கிழமை மாலை அரசுப் பேருந்து ஜப்தி செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
 ராமநாதபுரம் அருகே வளையர்வாடி கிராமத்தைச் சேர்ந்த முனியசாமியின் மகன் சதீஷ்வரன் (17). இவர் தனது சொந்த ஊரிலிருந்து இருசக்கர வாகனத்தில் உச்சிப்புளி வந்துகொண்டிருந்தார். இரு சக்கர வாகனத்தில் உச்சிப்புளி அருகே குஞ்சார்வலசை கிராமப் பகுதியில் வந்துகொண்டிருந்தபோது ராமேஸ்வரத்திலிருந்து ராமநாதபுரம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மோதியது. இதில் சதீஷ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதி நடந்த இச்சம்பவம் தொடர்பாக உச்சிப்புளி போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். 


 

இதனிடையே விபத்தில் உயிரிழந்த சதீஷ்வரனின் தந்தை முனியசாமி ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் தனக்கு ரூ.15 லட்சம் நஷ்ட ஈடாகத் தர வேண்டும் என வழக்குத் தொடர்ந்தார். வழக்கினை விசாரித்த நீதிமன்றம் கடந்த ஆண்டு பிப்ரவரியில்
6.54 லட்சம் அரசு போக்குவரத்துக் கழகம் இழப்பீடாக வழங்கிடுமாறு உத்தரவு பிறப்பித்திருந்தது. இத்தொகையைப் போக்குவரத்துக் கழகம் வழங்காததால் முனியசாமி வட்டியுடன் சேர்த்து தனக்கு ரூ.7.17 லட்சம் வழங்கவில்லை என்றும் அதைப் பெற்றுத் தருமாறும் நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றக் கோரும் மனுவைத் தாக்கல் செய்தார்.

இம்மனுவின் மீது விசாரணை மேற்கொண்ட ராமநாதபுரம் கூடுதல் விரைவு நீதிமன்ற நீதிபதி லிங்கேசுவரன் அரசுப் பேருந்தை ஜப்தி செய்யுமாறு உத்தரவிட்டார். இந்த உத்தரவைத் தொடர்ந்து நீதிமன்ற ஊழியர்கள் ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ராமநாதபுரத்திலிருந்து மதுரை நோக்கி செல்லும் இடை நில்லாப் பேருந்தை ஜப்தி செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.