Published:Updated:

''அரசனை நம்பி புருஷனை கைவிட்டுவிடாதீர்கள்..!''- அணிகளுக்குக் கெடு விதிக்கும் டி.டி.வி.தினகரன்

''அரசனை நம்பி புருஷனை கைவிட்டுவிடாதீர்கள்..!''- அணிகளுக்குக் கெடு விதிக்கும் டி.டி.வி.தினகரன்
''அரசனை நம்பி புருஷனை கைவிட்டுவிடாதீர்கள்..!''- அணிகளுக்குக் கெடு விதிக்கும் டி.டி.வி.தினகரன்

பெசன்ட் நகரில் இருக்கும் தனது இல்லத்தில் ஆதரவாளர்களைச் சந்தித்த டி.டி.வி.தினகரன், அ.தி.மு.க அம்மா அணியின் புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டார். இதையடுத்து, அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது தினகரன் கூறியதாவது, ''நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க வெற்றிபெற வேண்டும் என்பதற்காகவும் தேர்தலுக்காக தொண்டர்களுக்கு உற்சாகம் அளிக்கவும் புது நிர்வாகிகள் நிர்வகித்துவந்தனர். இரு அணிகள் இணைவதற்கு நான்தான் இடைஞ்சலாக இருந்தேன் என்று கூறியதால், 60 நாள்கள் ஒதுங்கியிருந்தேன். இப்போது 60 நாள்கள் கெடு முடிந்துள்ளதால், இந்தப் புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டுள்ளேன். எங்கள் இயக்கம் ஒன்றுபடும். அமைச்சர்களுக்கு சீக்கிரமே பயம் விலகி எங்களுடன் வந்து சேர்வார்கள். அவர்களுக்கு இணைப்பதற்கான திறமை இல்லை என்று தெரிகிறது. இனி நான்தான் இரு அணிகளையும் இணைக்க வேண்டும்.

அக்டோபர் 17-க்கு முன்புகூட நல்ல செய்தி வரலாம். ஏன், இணைப்பு நாளைக்கேகூட சாத்தியமாகலாம். என் நடவடிக்கைகளுக்கு அனைத்து மாவட்டச் செயலாளர்களும் ஆதரவு தெரிவிப்பர். தலைமை அலுவலகத்தில் எனது நாற்காலியை யாரும் ஆக்கிரமிக்கவில்லை. தேவைப்படும்போது என்றைக்கு வேண்டுமானாலும் நான் தலைமை அலுவலகத்துக்குச் செல்வேன். கட்சி அலுவலகம் எங்கள் சொத்து. அதற்கு எப்போது செல்ல வேண்டும் என்பதை நானே முடிவுசெய்வேன். இதுவரை வீட்டில் இருந்தேன், இனி களத்தில் இறங்கி கட்சியைப் பலப்படுத்துவேன். எங்களின் வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுவார்கள்.

நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிதான் என் இலக்கு. பொதுச் செயலாளரை, துணைப் பொதுச் செயலாளரை நீக்குவது என்று சொல்லுவதே சிறுபிள்ளைத்தனமானது. கட்சி அலுவலகத்தில் பாதுகாப்பில் இருக்கும் காவல் துறையினர் வரம்பு மீறி செயல்பட்டால், அவர்கள் விளைவுகளைச் சந்திக்கவேண்டிவரும் என்று அவர்களுக்கே தெரியும். பா.ஜ.க-வுடன் கூட்டணி என்று இப்போது பேசவேண்டிய அவசியம் இல்லை. ஜெயக்குமார் சமீபகாலமாக ஏன் இப்படிப் பேசிவருகிறார் என்பது எனக்குத் தெரியவில்லை. பொறுப்பற்ற முறையில் நான் நடந்துகொள்ள முடியாது. ஆனால், பொறுமைக்கும் எல்லை உண்டு. அரசனை நம்பி புருஷனை கைவிட்டுவிடாதீர்கள். ஜெயலலிதா பாதையில் சென்றால், இந்த ஆட்சி நான்கு ஆண்டுகள் நீடிக்கும்'' என்றார்.