Published:Updated:

மரணம் மற்றும் வயோதிகத்தை நம்மால் தடுக்க முடியுமா..? திகிலூட்டும் அறிவியல் முயற்சிகள்

மரணம் மற்றும் வயோதிகத்தை நம்மால் தடுக்க முடியுமா..? திகிலூட்டும் அறிவியல் முயற்சிகள்
News
மரணம் மற்றும் வயோதிகத்தை நம்மால் தடுக்க முடியுமா..? திகிலூட்டும் அறிவியல் முயற்சிகள்

மரணம் மற்றும் வயோதிகத்தை நம்மால் தடுக்க முடியுமா..? திகிலூட்டும் அறிவியல் முயற்சிகள்

முயற்சி 1: அது மரணம் அல்ல, உறக்கம்!

சில்வியா மற்றும் ஆலன் சின்க்ளைர் தம்பதிகள் 40 வருடங்களாகக் கணவன் மனைவியாக வாழ்ந்தவர்கள். அவர்களுக்கு 4 குழந்தைகள், 8 பேரக்குழந்தைகள். அதுமட்டுமில்லாமல், பல குழந்தை பராமரிப்பு இல்லங்களை பார்த்துக் கொண்டவர்கள். சஸ்ஸேக்ஸ் கடற்கரையை ஒட்டிய வீட்டில் இனிமையாக வாழ்ந்து கொண்டிருந்த போது, 66 வயதான சில்வியாவிற்கு நுரையீரல் புற்றுநோய், அதுவும் முற்றிய நிலை என்று தெரிய வருகிறது. மருத்துவம் கையை விரிக்க, ஒரு சில வாரங்களில் மரணம் சில்வியாவை அழைத்துச் சென்று விடுகிறது. ஆலனுக்கும் அவரது குடும்பத்திற்கும் இது ஒரு எதிர்பாராத பூகம்பம்! ஒருவரை மட்டும் அவர்கள் இழக்கவில்லை. ஒரு மனைவி, ஒரு நல்ல தாய், ஒரு அன்பான பாட்டி என்று மூன்று பேர் அன்று மரணித்ததாகத் தான் கருதப்பட்டது. ஆம், சில்வியா எல்லாமுமாய் இருந்தார்!

அவரது இறப்பு, அந்தக் குடும்பத்திற்கு வேண்டுமானால் பெரிய இழப்பு. ஆனால் அந்த மருத்தவமனையின் பெஞ்சில் அமர்ந்திருந்த அந்த நண்பர்கள் கூட்டத்திற்கு இல்லை. அவர்கள் கண்களில் ஒரு துளி கண்ணீர் இல்லை. அழுவதற்கான நேரம் இதுவல்ல என்று உணர்ந்தவர்கள் அவர்கள். இறப்புச் செய்தி வந்தவுடன் தாமதிக்காமல் களத்தில் இறங்கினார்கள். தனி ஆம்புலன்ஸ் ஒன்றில் சில்வியாவின் உடலை பெற்றுக் கொண்டார்கள். உடல் கெட்டுப்போகாமல் இருக்கச் செய்யப்படும் எம்பாமிங் (embalming) செய்முறைகள் கடைப்பிடிக்கப்பட்டன. ஐஸ் பெட்டியில் வைக்கும் முன், அமிலத்தை முறிக்கத் தொண்டை வழியே ஒரு திரவம், மார்பெலும்பிற்குத் தகுந்த மருத்துவம், CPR என அனைத்தும் செய்தாயிற்று. இரத்தத்தில் Anti-Freeze சொல்யூஷன் கலக்கப்பட்டு லண்டன் மாநகரத்திற்கு எடுத்துச் சென்றார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பெட்டியில் வெப்பநிலை -70 டிகிரியை தொட்டவுடன், உடல் அமெரிக்காவிற்குக் கொண்டு செல்லப்பட்டது. பின்பு, அங்கே ஒரு உலோக பெட்டகத்தில் க்ரையோஜெனிக் முறையில் உடல் பதப்படுத்தப்பட்டது. அதே அறையில் தான் அவரின் முன்னோர்களின் உடல்களும் அதே முறையில் பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டு இருக்கின்றன. 1977ஆம் வருடம் இறந்தவர்களின் உடல் கூட கெடாமல் இன்னும் பாதுகாக்கப்படுகிறதாம். இவர்கள் என்றாவது ஒரு நாள் மீண்டும் உயிருடன் வருவார்கள் என்பது அவர்கள் நம்பிக்கை. ஆனால், இவர்கள் இதற்காக நம்புவது கடவுளை அல்ல. நேரம் வரும்போது, சரியான தொழில்நுட்பம் வரும்போது, அறிவியலால் இறப்பு என்ற ஒன்றை நிச்சயம் மாற்ற முடியும் என்று நம்புகிறார்கள் இவர்கள். அதற்காகவே அனைத்து உடல்களும் பாதுகாக்கப் படுகின்றன. இது மரண கடிகாரத்தை நகராமல் நிறுத்தி வைக்கும் அதிசயம்!

முயற்சி 2: மறுபிறப்பு மருத்துவம்

நீங்கள் ஒரு கார் வைத்திருக்கிறீர்கள். அதன் எதோ ஒரு ஸ்பேர் பார்ட் செயலிழந்து விடுகிறது, உடனே வேறு ஒரு புது பார்ட்டை கடைகளில் வாங்கி காரை சரி செய்வதில்லையா? உங்கள் மடிக்கணினியில், டேட்டாவை பேக்கப் எடுத்து வைப்பீர்கள். ஹார்ட் டிஸ்க்கிற்கு எதாவது சேதம் ஏற்பட்டு டேட்டா காணாமல் போனால், பேக்கப் டேட்டாவை எடுத்துக் கொள்வது இல்லையா?  அதையே தான் மனித உடலில் அறிவியல் மூலம் இங்கே செய்ய முற்படுகிறார்கள். இதில், முன்னரே பல படிகளைக் கடந்து விட்டோம் என்பதும் உண்மை. மீளுருவாக்கம் என்ற முறைப்படி, சேதமடைந்த மற்றும் செயலிழந்த உறுப்புகள் அனைத்திற்கும் அந்த நோயாளியின் ஸ்டெம் செல்கள் வைத்தே புத்துயிர் ஊட்டுகிறார்கள். முழுக்க முழுக்க பரிசோதனை கூடத்தில் பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்பட்ட இரத்தக் குழாய்கள், சிறுநீர்ப்பை, பித்தப்பை போன்றவற்றை பாதிக்கப்பட்ட மனிதர்களுக்குப் பொருத்தும் முயற்சிகள் நடந்த வண்ணம் உள்ளது.

முயற்சி 3: அழிவில்லா டிஜிட்டல் மனிதன்

அழிவில்லா மனிதர்களை உருவாக்க எதற்கு உயிரியல் மற்றும் மருத்துவம் பின்னால் ஓடுகிறார்கள்? டிஜிட்டல் டெக்னாலஜி பக்கம் வாருங்கள் என்று அழைக்கிறார் புகழ்பெற்ற கணினி விஞ்ஞானியான ரே குர்சுவில். நம் மூளையில் இருக்கும் அனைத்துத் தகவல்களையும் டவுன்லோடு செய்து கணினியில் சேமித்து வைத்து விட்டால் போதும். பின்னாளில், இதை ஒரு ரோபோவிற்கு அப்லோட் செய்துவிட்டால், உங்களுக்கும் உங்கள் நினைவுகளுக்கும் என்றும் அழிவு இல்லை. 2045ஆம் ஆண்டிற்குள் இது நிச்சயம் சாத்தியம் என்று அதிரவைக்கிறார் ரே. இவர் ஏதோ உளறுகிறார் என்று நினைத்து விட வேண்டாம். மூன்று அமெரிக்கா ஜனாதிபதிகள் இதுவரை ரேவின் ஆராய்ச்சிகள் மற்றும் முயற்சிகளைப் பாராட்டியிருக்கிறார்கள். முத்தாய்ப்பாக, பில்கேட்ஸ், “செயற்கை நுண்ணறிவின் எதிர்காலம் மற்றும் வளர்ச்சியைக் கணிப்பதில் ரேவை மிஞ்சிய ஆள் இந்த உலகத்திலேயே இல்லை” என்று புகழாரம் சுட்டியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அது இருக்கட்டும், இந்த டவுன்லோடிங் சமாச்சாரத்தை அப்போதே தனது ‘பேசும் பொம்மைகள்’ நாவலில் சுஜாதா எழுதியிருந்தார் என்பது நம்மில் எத்தனைப் பேருக்கு தெரியும்?

முயற்சி 4: வயோதிகம் ஒரு வியாதி தான், அதைக் குணப்படுத்தலாம்

மரணத்தைத் தடுப்பது ஒரு புறம் இருக்கட்டும். பலருக்கு இளமையோடு என்றும் வாழவேண்டும் என்பதே கனவு. எலிசபெத் பரேஷ் ஒன்றும் விதிவிலக்கல்ல. மார்க்கண்டேயனைப் போல் என்றும் இளமையோடு இருப்பதே அவர் எண்ணம். அவரைப் பொறுத்தவரை, வயது முதிர்ச்சி என்பது ஒரு வியாதி. கேன்சர், இருதய நோய் போல இந்தக் கொடிய வியாதியையும் குணப்படுத்த முடியும் என்று நம்புகிறார். அதற்காக அவர் நடத்தும் ஒரு நிறுவனம் தான் பயோவிவா (BioViva). அதில் புகழ்பெற்ற அமெரிக்க மூலக்கூறு உயிரியலாளர் மற்றும் உயிரியல் நிபுணர் சிந்தியா கென்யோன் அவர்களின் ஆராய்ச்சிகளைச் சுற்றி பரிசோதனைகள் செய்து வருகின்றனர். அதன்படி, நம் உடம்பின் செல்கள் அனைத்தும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு செயலிழந்து விடுவது போல அமைக்கப்பட்டுள்ளது. இதை ஜீன் தெரபி மூலம் மாற்றி அமைக்க முடியும். இப்படிச் செய்வதால், வயதான பிறகு ஏற்படும் எண்ணற்ற உடல் உபாதைகளை இல்லாமல் செய்து விட முடியும் என்று கூறுகிறார்கள். ஸ்பானிஷ் தேசிய புற்றுநோய் ஆராய்ச்சி மையம் இந்த ஜீன் தெரபியை பயன்படுத்தி ஒரு எலியின் ஆயுளை 40 சதவீதம் வரை உயர்த்திக் காட்டியிருக்கிறதாம்.

இந்த ஆச்சர்யத்தின் அடுத்த கட்டமாக, அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் இருக்கும் மயோ கிளினிக்கில், நம்பத்தகுந்த வகையில் தங்கள் ஆராய்ச்சியின் மூலம் விளக்கம் அளிக்கிறார்கள். அதன்படி செனசென்ட் செல்கள் (Senscent Cells) எனப்படும் ஒருவகை செல்கள் தான் நம்மை கேன்சர் போன்ற நோய்களில் இருந்து காக்கிறது. வேலை முடிந்தாலும் இந்த செனசென்ட் செல்கள் உடலிலேயே தங்கி இரட்டிப்பாவதால் நமக்கு வயதாகிறது என்று கண்டுபிடித்துள்ளனர். எனவே, இவ்வகை செல்களை உடலிலிருந்து அகற்றிவிட்டால், வயதாவதைத் தடுக்க முடியும் என்று கூறுகிறார்கள். கீழ்க்கண்ட காணொளியை பாருங்கள்…

இப்படி அறிவியல் இறக்கைகளைக் கொண்டு மனிதன் பறக்க முயற்சிக்கும் இந்தத் தருணத்தில், மரணம் மற்றும் வயோதிகத்திற்கு எதிரான ஆராய்ச்சிகள் இயற்கைக்கு எதிரானவை. இதைச் செய்வதால் மனித இனத்திற்கு அழிவு தான் வரும் என்று பலர் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்கள். பிறப்பு என்று ஒன்று இருந்தால், இறப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்று என்பது அவர்கள் கருத்து. மரணம் வந்துவிட்டுப் போகட்டும், ஆனால் அது ஒவ்வொரு மனிதனும் தாங்களாக விருப்பப்படும் போது தான் நிகழ வேண்டும் என்று கூறுகிறார்கள் இவ்வகை ஆராய்ச்சிகள் செய்யும் அறிவியல் ஆய்வாளர்கள். விபத்து, திடீர் மரணம், நோயால் மரணம் போன்றவை இல்லாமல், இயற்கை மரணம், அதுவும் விரும்பிய போது மரணம் இது தான் எங்களுக்கு இலக்கு, அதை நிகழ்த்தியும் காட்டுவோம் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். இவர்களை வாழ்த்துவதா, எச்சரிப்பதா தெரியவில்லை!