Published:Updated:

''அ.தி.மு.க-வின் மூன்று அணிகளுமே வேஸ்ட்!'' - எம்.ஜி.ஆர் நண்பர் ஹெச்.வி. ஹண்டே

''அ.தி.மு.க-வின் மூன்று அணிகளுமே வேஸ்ட்!''  -  எம்.ஜி.ஆர் நண்பர் ஹெச்.வி. ஹண்டே
''அ.தி.மு.க-வின் மூன்று அணிகளுமே வேஸ்ட்!'' - எம்.ஜி.ஆர் நண்பர் ஹெச்.வி. ஹண்டே

''அ.தி.மு.க-வின் மூன்று அணிகளுமே வேஸ்ட்!'' - எம்.ஜி.ஆர் நண்பர் ஹெச்.வி. ஹண்டே

மிழக அரசியலில், அ.தி.மு.க சூறாவளி சுழன்றடித்துவருகிறது. அ.தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பை நிலைநாட்டும்விதமாக, கட்சிக்கு புதிய பொறுப்பாளர்களை நியமித்து உத்தரவிடுகிறார் டி.டி.வி தினகரன். ஆனால், அடுத்த நொடியே 'கட்சிப் பொறுப்பை ஏற்கமாட்டோம்' என்று சுவரில் அடித்த பந்தாக திருப்பிவருகிறது எம்.எல்.ஏ-க்கள் சிலரது பதில்கள்.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடிவரும் வேளையில், அவர் நிறுவிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், அங்கீகாரத்தை இழந்து, இருப்பைத் தக்கவைத்துக்கொள்ளப் போராடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், எம்.ஜி.ஆரின் நீண்டகால நண்பரும், முன்னாள் அமைச்சருமான டாக்டர் ஹெச்.வி ஹண்டேவிடம் அ.தி.மு.க-வின் இன்றைய நிலை குறித்துப் பேச முற்பட்டோம். 

சைதை துரைசாமி ஏற்பாட்டில் நடைபெறவிருக்கும் 'எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா'வில் கலந்துகொள்வதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்த ஹண்டே, நம்மிடம் மனம் திறந்து பேசிய வார்த்தைகள் இங்கே அப்படியே...

'' 'புரட்சித் தலைவி அம்மா அ.தி.மு.க' என்று தங்கள் அணிக்குப் பெயர் வைத்திருக்கும் ஓ.பன்னீர்செல்வம், பி.ஹெச்.பாண்டியன், பொன்னையன் உள்ளிட்டவர்கள் எல்லோரும் அன்றைக்கு ஜெயலலிதாவை எதிர்த்து ஜானகி அணியில் இருந்து அரசியல் செய்தவர்கள்தான். 1989 சட்டசபைத் தேர்தலின்போது போடிநாயக்கனூர் தொகுதியில், ஜெயலலிதா போட்டியிட்டபோது, அவருக்கு எதிராக ஜானகி அணியில் நிறுத்தப்பட்டிருந்த வேட்பாளரான வெண்ணிறஆடை நிர்மலாவை ஜெயிக்கவைப்பதற்காகப் போராடியவர் ஓ.பன்னீர்செல்வம். காலப்போக்கில், அ.தி.மு.க-வை விட்டு ஜானகி வெளியேறிய பின்னர்தான், ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க-வில் வந்து இணைகிறார்கள் இவர்கள். எனவே, ஓ.பன்னீர்செல்வம் ரொம்பவும் புனிதமானவர் என்றெல்லாம் சொல்வதற்கு ஒன்றுமில்லை. 

ஜெயலலிதா அணி, ஜானகி அணி என அ.தி.மு.க இரண்டாகப் பிளவுப்பட்டு நின்றபோதே, ஜெயலலிதா அணியில், சேவல் சின்னத்தில் போட்டியிட்டு ஜெயித்தவர் எடப்பாடி பழனிசாமி. இப்போது அவரது தலைமையில்தான் 6 மாதங்களைக் கடந்து தமிழக ஆட்சியதிகாரம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில், 'எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு, அதிக காலம் நீடிக்காது... சீக்கிரமே கவிழ்ந்துவிடும்' என்றுதான் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் நினைத்தார்கள். ஆனால், அது பொய்த்துவிட்டது. இதற்கிடையில், இப்போது டி.டி.வி தினகரன் அணி என அ.தி.மு.க-வில் புதிதாக 3-வது அணியும் உருவாகிவிட்டது. இதுதான் இன்றைய அ.தி.மு.க-வின் நிலை.

இந்தச் சூழ்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றால், யார் வெற்றி பெறுவார்கள்? என்ற கேள்வி எழுந்துள்ளது. என்னைப் பொறுத்தவரையில், இப்போது உடனடியாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டால், அ.தி.மு.க-வைச் சேர்ந்த இந்த 3 அணிகளுமே வெற்றி பெறாது என்பதுதான் என் கணிப்பு. அதாவது இந்த 3 அணிகளும் ஒன்றுசேர்ந்து, இரட்டை இலைச் சின்னமும் திரும்பக் கிடைத்தாலும்கூட இவர்கள் வெற்றி பெறமாட்டார்கள்.

1964-தேர்தலிலேயே பூங்கா நகர் தொகுதியில், சுயேட்சையாகப் போட்டியிட்டு ஜெயித்தவன் நான். அ.தி.மு.க-வில் நான் எம்.ஜி.ஆரோடு கட்சிப் பணியாற்றியபோது, எல்லா இடைத்தேர்தல் தொகுதிகளுக்கும் என்னைத்தான் அனுப்புவார். ஒரேயொரு இடைத்தேர்தலைத் தவிர அ.தி.மு.க வென்ற பெரும்பான்மையான இடைத்தேர்தல்களிலும் அ.தி.மு.க பெற்றிருந்த வெற்றியில் எனது பங்களிப்பும் உண்டு. அந்த வகையில் மக்களுடைய நாடித்துடிப்பு என்னவென்பது எனக்கு நன்றாகவேத் தெரியும். 

இப்போது அ.தி.மு.க-வில் உள்ள இந்த 3 அணியினருமே ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக்கொண்டிருப்பதற்கான காரணம் ஒருவித போதை மனப்பான்மைதான். அதாவது யார் என்ன சொன்னாலும் உடனடியாக அவர்களுக்கு ஊடக வெளிச்சம் கிடைக்கிறது. வெற்றிவேல் அப்படிச் சொன்னார், முனுசாமி இப்படிச் சொன்னார் என்று பத்திரிகை செய்திகள் வெளிவருவதோடு அவரவர் முகங்களும்கூட 24 மணி நேரமும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிக் கொண்டேயிருக்கின்றன.  இதுவெல்லாம் தற்காலிக சந்தோஷம்தான். என்னதான் இவர்கள் தலைகீழாக நின்றாலும், மக்கள் ஆதரவு என்பது இவர்களில் யாருக்கும் கிடையாது.... எல்லாமே வேஸ்ட்!

கட்சி அங்கீகாரம் மீண்டும் கிடைக்குமா... கிடைக்காதா... என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்தான். இரட்டை இலைச் சின்னமும் அங்கீகாரமும் கிடைத்தால்கூட மக்கள் ஆதரவைப் பெற்று இவர்களால், தேர்தலில் வெற்றியடையமுடியும் என்று நான் நினைக்கவில்லை. நான் இப்போதும் மருத்துவத் தொழில் செய்துவருகிறேன். பொதுமக்களோடு கலந்து பழகுகிறேன். அவர்களது எண்ண ஓட்டங்களை அறிந்துவருபவன் என்ற அனுபவத்தில்தான் இந்தத் தகவலைச் சொல்கிறேன்.'' 

-என்று தனது மனவோட்டத்தை வார்த்தைகளால் விளக்கிமுடித்துவிட்டு விழாவுக்கு கிளம்பிச் சென்றார் ஹெச்.வி.ஹண்டே!

அடுத்த கட்டுரைக்கு