Published:Updated:

புழல் சிறைக்கே இதுதான் கதி!

ந.பா.சேதுராமன்
புழல் சிறைக்கே இதுதான் கதி!
புழல் சிறைக்கே இதுதான் கதி!

புழல் ஏரி அருகிலிருந்தும்,  மத்திய புழல் சிறைச்சாலை குடிநீர் பற்றாக்குறையால் திண்டாடுகிறது என்ற தகவல் கண்முன் காட்சியாக விரிகிறது. சென்னையைச் சுற்றி ஏரிகள் பல இருந்தாலும், நீராதாரம் இதுதான் என்று நிறைந்த நீருடன் நிமிர்ந்து நின்ற புழல் ஏரி இப்போது மண்தரை வெடித்துக் காணப்படுகிறது. சென்னை மக்களுக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகள் அனைத்தும் திருவள்ளூர் மாவட்டத்தில்தான் உள்ளன. திருவள்ளூர் மாவட்ட பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் மட்டுமே 587 ஏரிகளும், ஒன்றிய ஆணையர்கள் கட்டுப்பாட்டில் 649 ஏரிகளும் என மொத்தம் 1,236 ஏரிகள் இருப்பதாக அரசின்  கணக்கில் உள்ளன.  இதில் புழல் ஏரி மட்டுமே 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவைக் கொண்டது. தற்போதைய நீர் இருப்பு  பூஜ்ஜியம் மில்லியன் கன அடியை தொட்டிருப்பதாக பொதுப்பணித்துறை அறிவித்து பல நாள்கள் ஓடிவிட்டது.


                                 

தண்ணீர்ப் பஞ்சத்தைத் தீர்க்க அதிகபட்சமாக வீட்டுக்கு வீடு வாட்டர் கேன்களைத்தான் அமைச்சர்களாலோ, தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்களாலோ  கொண்டு வந்து இறக்க முடியும். அதுவும்கூட எத்தனை நாள்களுக்கு என்பதும் கேள்விக்குறிதான். கடல்போல் பரந்து விரிந்து இயற்கையாய் பயமுறுத்திய புழல்போன்ற ஏரிகளை அந்தந்த காலத்தே பராமரித்து பாதுகாக்கத் தவறியது அரசு சக்திகளே. தமிழக மக்களின் நீர்ப் பற்றாக்குறைக்கு பத்து சதவிகித காரணமே பருவமழை பொய்த்தலாக இருக்கும். 90 சதவீதக் காரணம், அதிகார சக்திகளின் கையாலாகத்தனமே எனலாம். புழல் ஏரிக்கு மிக அருகில் இருப்பது மத்திய புழல்சிறை. இந்த  சிறைக் கண்காணிப்புப் பணிக்காக வாசலில் நிற்கும் போலீஸாரின் நிலைமையே  தண்ணீர்ப் பற்றாக்குறைக்கு சாட்சி. லோக்கல் புழல் போலீஸாரின் ரோந்து வாகனம் மூலம் சிறைக் கண்காணிப்பில் இருக்கும் போலீஸாருக்கு 'கேன்' வாட்டர் கொண்டு வந்து அன்றாடம் வழங்கப்படுகிறது.  கேன் மூலம்  குடிநீர் விநியோகம் எத்தனை நாளைக்கு என்பது அடுத்து எழுகின்ற கேள்வி.