Published:Updated:

அ.தி.மு.க-விலிருந்து விலகுவோம்...  எடப்பாடி பழனிசாமியை எச்சரித்த எம்.எல்.ஏ.

அ.தி.மு.க-விலிருந்து விலகுவோம்...  எடப்பாடி பழனிசாமியை எச்சரித்த எம்.எல்.ஏ.
அ.தி.மு.க-விலிருந்து விலகுவோம்...  எடப்பாடி பழனிசாமியை எச்சரித்த எம்.எல்.ஏ.

அ.தி.மு.க-விலிருந்து விலகுவோம்...  எடப்பாடி பழனிசாமியை எச்சரித்த எம்.எல்.ஏ.

'பா.ஜ.க-வுடன் அ.தி.மு.க கூட்டணி வைத்தால், அந்தக் கூட்டணியிலிருந்து விலகுவோம்' என்று மனித நேய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. தெரிவித்தார். 

நீங்கள் அ.தி.மு.க. அரசை தொடர்ந்து விமர்சிப்பதற்கு என்ன காரணம்?

 "காரணங்கள் அடிப்படையில்தான் எங்களது ஆதரவும் எதிர்ப்பும் அமைகிறது. நல்லெண்ண அடிப்படையிலும் அம்மா (ஜெயலலிதா) உருவாக்கிய அரசு நற்பெயரைப் பெறவேண்டும் என்பதற்காகத்தான், அ.தி.மு.க. அரசு மீது நியாயமான விமர்சனங்களை முன்வைக்கிறோம். உண்மையான நட்பு என்பது, ஆரோக்கியமான விமர்சனத்தை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அந்த அடிப்படையில்தான், எங்களுடைய மாற்றுக்கருத்துகளை சட்டமன்றத்திலும் வெளியிலும் பதிவுசெய்கிறோம். முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்களிடம் நேரில் விவாதித்துவருகிறேன். எங்களுடைய நியாயங்களை அமைச்சர்களும் புரிந்துகொள்கின்றனர். எங்களுடைய விமர்சனங்களை அ.தி.மு.க-வின் அடிமட்டத் தொண்டர்கள் வரவேற்றுப் பேசுகின்றனர். எந்தச் சூழ்நிலையிலும் மக்களுடைய வாழ்வாதாரப் பிரச்னைகளையும் கொள்கைகளையும் விட்டுக்கொடுக்க முடியாது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் குடிமராமத்துத் திட்டங்கள், உடனுக்குடன் கோப்புகளில் கையெழுத்திடும் செயல்பாடுகளை வரவேற்கிறோம். பாராட்டப்படவேண்டிய விஷயங்களைப் பாராட்டுகிறோம். மாற்றுக் கருத்துகளைச் சொல்வதில் எங்களுடைய கடமையைச் செய்கிறோம்."

 அ.தி.மு.க. அணிகள் இணையுமா? 

 "தற்போது, அ.தி.மு.க-வில் நடந்துவருவது சகோதரத்துவச் சண்டை. ஏதோ ஒரு ஈகோ, அவர்களை இணையவிடாமல் தடுக்கிறது. இதில் குளிர்காய்வது மத்திய அரசும் பா.ஜ.க-வும்தான். அ.தி.மு.க-வை பிளவுப்படுத்தி அழித்துவிட்டால், அந்த வெற்றிடத்தில் நாம் வளர்த்து விடலாம் என்று பா.ஜ.க கருதுகிறது. இதற்கு, தெரிந்தோ தெரியாமலோ அ.தி.மு.க-வுடைய சில தலைவர்கள் துணைபோகின்றனர். இந்த நிலையில், அ.தி.மு.க-வின் மூன்று தலைமையும் இணைந்தால்தான் இரட்டை இலை கிடைக்கும். சின்னம் கிடைத்தால்தான் அ.தி.மு.க. மறுவாழ்வுபெறும். அதற்காகவாவது அவர்கள் இணைய வேண்டும். தோழமைக் கட்சி என்கிற அடிப்படையில், எங்களால் அவ்வளவுதான் கருத்துச் சொல்ல முடியும். உண்மையில் அவர்களுடைய பிளவைக் கண்டு வருந்துகிறோம்." 

 பா.ஜ.க-வுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்தால் உங்களுடைய நிலைப்பாடு என்ன? 

"பா.ஜ.க-வின் கொள்கைகள்மீது எங்களுக்கு மாறுப்பட்ட கருத்துகள் உண்டு சமூகநீதிக்கு எதிரான கட்சி பா.ஜ.க. என்பதுதான் எங்களுடைய பார்வை. அப்படியிருக்கும்போது பா.ஜ.க -வுடன் அ.தி.மு.க. கூட்டணி வைத்தால், அந்த நிழலில்கூட நாங்கள் இருக்க மாட்டோம்." 

 தமிழக அரசு செயல்படுகிறதா? 

 "நீர்நிலைகளைத் தூர்வாரும் பணிகளைத் தமிழக அரசு சிறப்பாகச் செய்துவருகிறது. நீட் தேர்வு விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் முடிந்த அளவு போராடுகிறார். பள்ளிக் கல்வித்துறைச் சிறப்பாகச் செயல்படுகிறது. இப்படி நல்ல விஷயங்கள் பல இந்த ஆட்சியில் இருக்கிறது. ஒட்டுமொத்தமாகக் குறை சொல்வது நியாயமில்லை.  நிறைகளைப் பாராட்டி, குறைகளைச் சுட்டிக்காட்டுவதே எங்களுடைய நிலைப்பாடு." 


ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசு உள்விவகாரத்தில் மத்திய அரசின் தலையீடு அதிகமாக இருக்கிறதே?


 உண்மைதான். நீட் தேர்வு, உணவு பாதுகாப்பு மசோதா, ஜி.எஸ்.டி போன்ற விவகாரங்களில் ஜெயலலிதாவின் துணிச்சலான எதிர்ப்பைக் கண்டு மத்திய அரசு அதிர்ந்தது.  தற்போது, அ.தி.மு.க-வின் பிளவைப் பயன்படுத்தி,  இந்த அரசை பலவீனப்படுத்திவருகிறார்கள்  அமைச்சர்கள், மத்திய உளவுத்துறை கண்காணிப்பில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.மாநில காவல்துறையே மத்திய அரசுதான் இயக்குவதாகச் குற்றசாட்டு எழுந்துள்ளது. மாநில உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்படுகின்றன. இதை, அ.தி.மு.க ஏற்பட்ட சோதனையாகப் பார்க்காமல், தமிழகத்துக்கு ஏற்பட்ட சோதனையாகக் கருதி, தி.மு.க. உள்ளிட்ட திராவிடக் கட்சிகள், கம்யூனிஸ்ட் கட்சிகளும் சமூக நீதிக் கொள்கையில் உடன்பாடுகொண்ட இதர தலைவர் ஒருங்கிணைந்து எதிர்க்க வேண்டும். 


டெல்டா மாவட்டங்கள் மீது மத்திய அரசின்மீது என்னதான் கோபம்?

 " தென்னிந்தியாவுக்கே சோறுபோடும் தஞ்சை சமவெளிப்பகுதிகளை நாசப்படுத்த, மத்திய அரசு முனைவது அதிர்ச்சியளிக்கிறது. தஞ்சை விவசாயிகள் பொது மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல், மீத்தேன் ஹைட்ரோ கார்பன், பெட்ரோல் கெமிக்கல் மண்டலம் போன்ற அறிவிப்பு, எங்களுக்கு அதிர்ச்சியளிக்கிறது.
பல்வேறு அரசியல் கட்சிகளில் முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்கள் தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர். தமிழ்நாட்டின் நலன்கருதி அவர்கள் போராடுவதைப்போல 
 தஞ்சைச் சமவெளி நலன்கருதியும் போராட வேண்டும். இதனால்தான், சட்டமன்றத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று பேசினேன். மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களுக்கு இந்த மண்ணில் அனுமதிக்கக்கூடாது என்று வலியுறுத்தினேன்.
 இது, விவசாய பூமி. விவசாயத்துக்கு மதிப்பளிக்க வேண்டும். எதிர்காலத்தில் உணவுத்தட்டுப்பாடு ஏற்பட்டுவிடக்கூடாது. எனவே, காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அவசியத்தை அனைவரும் அறிய வேண்டும். இதுவரை, காவிரி மேலாண்மை வாரியத்தைக்கூட அமைக்கவில்லை. கர்நாடக அரசுக்கு ஆதரவாகச் செயல்படும் மத்திய அரசு, மீத்தேன் திட்டத்திலும் நாடகமாடுகிறது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியதுபோல நாகை, கடலூர் 46 கிராமங்களை உள்ளடக்கி, பெட்ரோலிய ரசாயன முதலீட்டு மண்டலமாக அறிவித்துள்ளது. இதை, தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது என்பது எங்களுடைய வேண்டுகோள். அதை மீறி மத்திய அரசு முடிவெடுத்தால், டெல்டா மாவட்ட வீதிகளில் மக்கள் போராட்டத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. நமது சோற்றில் மண்ணை அள்ளிப்போட்டுவிட்டு, வளர்ச்சிகுறித்துப் பேசுவது அயோக்கியத்தனம்." 
 
 

அடுத்த கட்டுரைக்கு