Published:Updated:

''அதுங்க திமுதிமுனு வளர்றதைப் பார்க்கிறப்ப தித்திப்பா இருக்கு!'' - விவசாயத்தில் அசத்தும் அரசுப் பள்ளி மாணவர்கள் #CelebrateGovtSchool

எம்.புண்ணியமூர்த்தி
''அதுங்க திமுதிமுனு வளர்றதைப் பார்க்கிறப்ப தித்திப்பா இருக்கு!'' - விவசாயத்தில் அசத்தும் அரசுப் பள்ளி மாணவர்கள் #CelebrateGovtSchool
''அதுங்க திமுதிமுனு வளர்றதைப் பார்க்கிறப்ப தித்திப்பா இருக்கு!'' - விவசாயத்தில் அசத்தும் அரசுப் பள்ளி மாணவர்கள் #CelebrateGovtSchool

இடம் : தொண்டாமுத்தூர் ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி, கோவை.

நேரம்:  "மேகக்கூட்டங்கள் மழைத் தூரலுக்கு தயாராகிக்கொண்டிருந்த மாலை பொழுது".

சந்திப்பு : அற்புதம் நிகழ்த்தும் அரசுப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன்.

பொருள் :  அவசரம் வேண்டாம் பொறுமையாக முழுக் கட்டுரையையும் படிக்கக் கேட்கிறோம்.

"அண்ணே ஒரு நிமிஷம் இருங்கண்ணே. மத்தப் பசங்களையும் கூட்டிட்டு வந்திடுறேன்'' வேகமாக ஓடிய ஹரிஷ் மூச்சிரைக்க நான்கு மாணவர்களுடன் திரும்ப என்னிடமே ஓடிவந்தான். 'சார்… நாங்களே எக்ஸ்ப்ளைன் பண்ணிடுறோம். நீங்க எதுவும் சொல்லாதீங்க'' என்று ஐந்து மாணவர்களும் தங்கள் ஆசிரியர்களுக்கு அன்புக் கட்டளை இட, 'அதுக்குத்தான்டா உங்களை வரச்சொல்லியிருக்கோம். நாங்க எதுவும் சொல்லல. நீங்களே சொல்லுங்கடா சாமிகளா!'' சிரித்துக்கொண்டே சொல்கிறார்கள் அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள். எத்தனை பள்ளிகளில் வாய்க்கும் இந்தச் சுதந்திரம்... ஆசிரியர்கள் பெருமிதத்தோடு ஒதுங்கி நிற்க, பேச ஆரம்பித்தார்கள் மாணவர்கள்.

"எம்பேரு லோகேஷ், எம்பேரு சங்கர், நான் பரத்குமார்ணா, ஐ யாம் ஜோதிமணி ஸார்' என்று தன்னை ஒவ்வொரு மாணவனும் அறிமுகப்படுத்திய விதத்திலேயே உற்சாகம் கரைபுரண்டோடியது. 'இதுபேரு பள்ளித் தோட்டம்'. சப்ஜெக்ட்டுக்குள் நுழைந்தான் லோகேஷ். ''ரெண்டு மாசத்துக்கு முன்னாடிதான் இந்தத் தோட்டத்தை உருவாக்கினோம். இப்போ இங்க அரைகீரை, சிறுகீரை, பாலக்கீரை, தண்டுகீரை, செடி முருங்கை, தட்டைப்பயறு, பீர்க்கங்காய், சுரைக்காய், நாட்டு பப்பாளி, ம்ம்ம்ம்… அப்புறம், வெண்டைக்காய் எல்லாம் முளைச்சிருக்குண்ணா. இந்தக் குட்டியூண்டு இடத்துல இவ்வளவையும் பயிர் பண்ணியிருக்கோம். அதுங்க திமுதிமுனு வளர்றத பாக்கும்போது மனசுக்கு தித்திப்பா இருக்குண்ணே" ஸ்வீட்டாகப் பேசுகிறான் லோகேஷ்.

"எங்க எல்லார் வீட்லயும் விவசாயம்தான் செய்யுறாங்க. ஆனாலும், எங்களுக்கு ரெண்டு மாசத்துக்கு முன்னாடிவரைக்கும் விவசாயத்தைப் பத்தி ஒண்ணுமே தெரியாது. விவசாயம்னாலே எங்களுக்குப் பிடிக்காது. விவசாயிங்கள்லாம் காலத்துக்கும் கஷ்டப்படுறவங்கன்னு மட்டும்தான் எங்க மனசுல இருந்துச்சி. 'எங்க கஷ்டம் உனக்கு வேணாம். எப்டியாவது படிச்சி பெரிய கம்பெனிக்கு வேலைக்குப் போயிடுரா'னு அம்மாவும் அப்பாவும் அடிக்கடி சொல்றதாலதான் எங்க மைண்ட் அப்படி செட் ஆகிருச்சான்னு தெரியலை. 

ஆனால்,  இப்ப அப்டி இல்லண்ணா. விவசாயத்தைப் பத்தி இன்னும் நெறைய தெரிஞ்சுக்கணும். படிச்சி பெரிய வேலைக்குப் போனாலும்கூட, பார்ட் டைம்லயாவது ஊர்ல  விவசாயம் பண்ணணும்னு தோணுது. இந்த ரெண்டுமாசத்துல விவசாயத்தைப் பத்தின நெனைப்பு முழுசா மாறிடுச்சிண்ணே. தினமும் காலையில் சீக்கிரமா வந்து தோட்டத்துக்கு தண்ணி விடுறது, களை எடுக்குறதுனு எங்களுக்கு ஒரே ஜாலியா இருக்கு! சாயங்காலமும் அப்படிதான் தோட்டத்து வேலைகளை முடிச்சிட்டுதான் போவோம். வீட்ல இதுமாதிரி சின்னதா ஒரு தோட்டம் அமைக்கிறதுக்கு ஐடியா பண்ணிட்டு இருக்கோம். இங்க விளையிறதை எங்க  சத்துணவுக்குதான் எடுத்துக்கப்போறோம். எங்க கையால விளைவிச்சு நாங்களே சாப்பிடும்போது வரப்போற சந்தோஷம் எப்டி இருக்கும்னு தெரியலை. அதுக்காக நாங்களெல்லாம் வெயிட் பண்ணிட்டு இருக்கோம்" சங்கர் பேச்சில் ஒரு பெரிய மனுஷன் குடியிருக்கிறான்.

''சார்… உங்களுக்கு ஜீவாமிர்தம் தெரியுமா?'' அதிரடியான கேள்வியோடு ஆரம்பிக்கிறான் ஜோதிமணி, "இந்தத் தோட்டத்துக்கு ஜீவாமிர்த உரம்தான் போடுறோம். ஆமா சார், இந்தத் தோட்டத்துல செய்யுறது முழுக்கமுழுக்க இயற்கை விவசாயம்தான். இதுக்காக ரெண்டு இயற்கை விவசாயிகள் வந்து எங்களுக்கு ஸ்பெஷல் ட்ரைனிங் கொடுத்திருக்காங்க. நாட்டு மாட்டு சாணம் 10 கிலோ, கோமியம் 10 லிட்டர், கரும்புச்சக்கரை ஒரு கிலோ, கடலை மாவு ஒரு கிலோனு எல்லாத்தையும் 1:3 விகிதத்தில் கலந்து மூணு நாள் ஊற வைத்து பயன்படுத்துறோம்'' அரசுப் பள்ளி மாணவர்கள்னா மேத்ஸ் ஃபார்முலாக்களை தலையில்  குட்டிக்கொண்டே மனப்பாடம் செய்பவர்கள் என்ற எண்ணச் சித்திரத்தை உடைத்து அபூர்வம் பூக்கிறது ஜோதிமணி வார்த்தைகளில். 

"அதுக்காக எங்களை படிப்புல டம்மின்னு நெனைச்சுராதீங்கண்ணே. அதுவேற டிப்பார்ட்மென்ட், இது வேற டிப்பார்ட்மென்ட். பாடப்புத்தகம் மட்டும் படிப்பு கிடையாதுண்ணே. விவசாயத்தைத் தெரிஞ்சிக்கிறதும் படிப்புதானே..? என்னடா நான் சொல்றது சரியா. அண்ணனுக்கு சொல்லுங்கடா…" தன்கருத்துக்கு வலுசேர்க்க அணிதிரட்டி அப்ளாஸ் அள்ளுகிறான் பரத்!

பள்ளியின் தலைமை ஆசிரியர் கோவிந்தராஜ் பேசியபோது, "எங்க சி.இ.ஓ-தான் இந்தத் திட்டத்தை ஆரம்பிச்சிருக்காங்க. முதன் முதலா, எங்க ஸ்கூல்லதான் இதைச் செயல்படுத்தியிருக்கோம். ஐந்தில் வளையாதது. ஐம்பதில் வளையாதுனு சொல்லுவாங்க. சின்ன வயசுலேயே விவசாயத்துமேல ஆர்வம் இல்லாம போறதாலதான், பிற்காலத்துல யாரும் விவசாயிகளைப் பத்தி யோசிக்கக்கூட மாட்டேங்குறாங்க. விவசாயம்னாலே கீழ்த்தரமா பாக்குறாங்க. ஏ.சி ரூம்ல உட்கார்ந்து லட்சங்கள்ல சம்பாதிச்சிட்டா போதும். ஹைஜீனான சாப்பாடு கிடைச்சுரும்னு நினைக்கிறான். அந்த அபாயகரமான சிந்தனையை மாத்தணும்னா, பள்ளிக் கூடத்திலிருந்தே மாணவர்களுக்கு விவசாயத்தின் அருமை பெருமையைப் புரியவைக்கணும். விஷம் கலந்த விவசாயத்தின் விளைவுகளைத் தெரிய வைக்கணும். இயற்கை விவசாயத்தைப் பத்தி அவங்களுக்குச் சொல்லிக்கொடுக்கணும். அதோட ஆரம்ப முயற்சிதான் இது.  இதுவரை இயற்கை விவசாயத்தைப் பத்தி எங்களுக்கும் எதுவும் தெரியாது. பல வருஷங்கள் நம்மாழ்வார்கிட்ட வேலை பார்த்த இருகூர் தங்கவேலு மற்றும் ஜெகதீசன் இருவரையும் இதுதொடர்பா அணுகினோம். இதைத்தான் சார் நாங்க எதிர்பார்த்துகிட்டு இருந்தோம்னு ஆர்வத்தோட, அடுத்த நாளே எங்க ஸ்கூலுக்கு வந்து எங்க ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் சேர்த்தே பயிற்சி கொடுத்தாங்க. திருவண்ணாமலையிலிருந்து சுரேஷ்னு ஒருத்தர் மூலமா நாட்டு விதைகளை இலவசமா வாங்கி கொடுத்தாங்க. பெற்றோர் ஆசிரியர் கழகத்திலேருந்து நிலத்தை இலவசமா உழுதுகொடுத்தாங்க. ரெண்டே மாசத்துல தோட்டம் அற்புதமா வந்திருக்கு, இதைத் தொடர்ச்சியா பாதுகாக்கணும்ங்கிறதுல உறுதியா இருக்கோம்'' என்றார்.

மத்திய மாநில அரசுகள் கண்டுகொள்ளாததால் இருள்சூழ்ந்துகிடக்கிறது விவசாயம். இதுபோன்ற முயற்சிகள் அந்தப் பேரிருள்மீது பாயும் வெளிச்சம்!