Published:Updated:

'தினகரனுக்கு நான் சர்டிபிகேட் கொடுக்க மாட்டேன்' - தா.பாண்டியன்

தி.ஜெயப்பிரகாஷ்
'தினகரனுக்கு நான் சர்டிபிகேட் கொடுக்க மாட்டேன்' - தா.பாண்டியன்
'தினகரனுக்கு நான் சர்டிபிகேட் கொடுக்க மாட்டேன்' - தா.பாண்டியன்

மத்திய அரசின் தற்போதைய நடவடிக்கைகளால் தமிழக அரசின் பொது விநியோக திட்டமான ரேஷன் கடைகள் முற்றிலும் மூடப்படும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக பல்வேறு தகவல்கள் வெளிவந்துகொண்டு இருக்கிறது.

இந்நிலையில், பொதுக்கூட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் தா.பாண்டியன் திருப்பூர் சென்றுள்ளார்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், "மத்திய அரசின் உணவு திட்டம்  2013-ம் ஆண்டு மத்தியில் ஆண்ட காங்கிரஸ் அரசு "உணவு உரிமைச் சட்டம்" என்ற பெயரில் ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தது. ஆனால், அது குடியரசுத் தலைவரின் அங்கீகாரத்தை பெறாமல்போனதால், தற்போதைய மோடி அரசு அதற்கு குடியரசுத் தலைவரின் அங்கீகாரத்தைப் பெற்று நடைமுறையில் கொண்டுவந்திருக்கிறார்கள்.

அந்த சட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு குறைந்தபட்ச விலையாக ஒரு கிலோ அரிசி 3 - ரூபாய்க்கும், கோதுமை 2 ரூபாய்க்கும் வழங்கப்பட வேண்டும் என்றும், அதிகபட்சமாக மாதம் 20 கிலோ வரை மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அந்தச் சட்டத்தை முற்றிலுமாக எதிர்த்த ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு, ஏற்கெனவே நாங்கள் மாதம் 20 -கிலோ அளவு வரை மக்களுக்கு விலையில்லா அரிசியை வழங்கிக்கொண்டு இருக்கிறோம். எனவே, உங்களது சட்டம் தமிழக அரசுக்கு பொருந்தாது என்று அறிவித்தது.

அப்படியானால் மத்திய அரசின் தொகுப்பில் இருந்து அரிசி, கோதுமை உள்ளிட்டவைகளுக்கான மானியங்கள் தமிழக அரசுக்கு தரப்படமாட்டாது என்று தெரிவித்தார் மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான். இருப்பினும் தன் உறுதியான நிலைப்பாட்டால் அந்த சட்டத்தை இறுதிவரை எதிர்த்தார் ஜெயலலிதா. ஆனால், அவர் மறைந்த பிறகு தற்போது பொறுப்பேற்று இருப்பவர்கள் ஒரே ஒரு நிபந்தனையை மட்டும் முன்வைத்துவிட்டு, அந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு உடன்படுவதாக ஒத்துக்கொண்டு இருக்கிறார்கள். அதாவது, ஏற்கெனவே மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் 20 -கிலோ விலையில்லா அரிசியையும், அம்மா உணவக விற்பனைக்கும் மத்திய அரசு தடை விதித்துவிடக்கூடாது என்பதே அந்த நிபந்தனை. இருப்பினும் அதை ஏற்காத மத்திய அரசு ஒரு வருட காலத்துக்குள் மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டத்துக்கு உடன்படவில்லை என்றால் தமிழகத்துக்கான மானியம் நிறுத்தப்படும் என்று மீண்டும் தெரிவித்திருக்கிறது. 
ஆனால் தற்போதைய தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ், மத்திய அரசு தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் என்று நம்புகிறோம் என்கிறார். அதை அவர் வேண்டுமானால் நம்பலாம். நாங்கள் ஒருபோதும் நம்பப்போவது கிடையாது. அதேபோல அ.தி.மு.க-வின் கட்சி பிரச்னையில் தினகரனின் தற்போதைய செயல்பாடு குறித்து எல்லாம் என்னிடம் கேட்காதீர்கள்.. அவருக்கு சான்றிதழ் கொடுப்பது என் வேலையல்ல" என்றார்.