Published:Updated:

திருமுருகன் காந்தி விடுவிப்புக்கு ஏன் தாமதம்?

திருமுருகன் காந்தி விடுவிப்புக்கு ஏன் தாமதம்?
திருமுருகன் காந்தி விடுவிப்புக்கு ஏன் தாமதம்?

"நான் என்ன ஆயுதம் ஏந்தவேண்டும் என்பதை எனது எதிரியே தீர்மானிக்கிறான்" என்றார் மாவோ. இன்றைய சூழலில் நியாயமான காரணத்துக்காக போராடக்கூடியவர்கள்மீது வழக்குகளைப் பதிவுசெய்து, அவர்கள் 'என்ன ஆயுதம் ஏந்த வேண்டும்' என்பதை மத்திய - மாநில அரசுகள் தீர்மானிக்கத் தொடங்கி விட்டன. 

ஈழப்போரில் உயிரிழந்தவர்களுக்கு, "நினைவேந்தல்" நிகழ்ச்சி நடத்த முயன்ற மே 17 இயக்க ஒருகிணைப்பாளர் திருமுருகன் காந்தி உட்பட நான்கு பேர் குண்டர் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நான்குபேரும் ஜாமீனில் வெளியேவர முகாந்திரங்கள் இருந்தபோதிலும், அவர்களை வெளியில் விடாதபடி மத்திய - மாநில அரசுகள் பல்வேறு தடைகளை ஏற்படுத்தி வருவதாக மே 17 இயக்கம் குற்றச்சாட்டியுள்ளது. 

2009-ம் ஆண்டு இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின்போது, இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மே 17 இயக்கம் உள்ளிட்ட தமிழீழ ஆதரவாளர்கள் ஆண்டுதோறும் 'நினைவேந்தல்' நிகழ்ச்சியை நடத்திவருகின்றனர். சென்னை மெரினாவில், கடந்த மே மாதம் 21-ம் தேதி, 'நினைவேந்தல்' நிகழ்ச்சி நடத்த மே 17 இயக்கம் திட்டமிட்டிருந்தது. ஆனால், மெரினாவில் நினைவேந்தல் நடத்துவதற்கு காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. போலீஸாரின் தடையை மீறி அஞ்சலி செலுத்த முயன்ற மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன், அருண்குமார் ஆகியோர் உள்பட பலர் போலீஸாரால் கைதுசெய்யப்பட்டனர். திருமுருகன் காந்தி உள்ளிட்ட நான்குபேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டது அரசு நிர்வாகம். அரசின் இந்த நடவடிக்கைக்கு, மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். திருமுருகன் உள்ளிட்ட நான்கு பேர் கைதுசெய்யப்பட்ட விவகாரத்தில் காவல்துறை வழங்கிய ஆவணங்களை பொது வெளியில் வைத்ததுடன், அதுதொடர்பாக போலீஸாருக்கு சில விளக்கங்களையும், கேள்விகளையும் எழுப்பினர் மனித உரிமை ஆர்வலர் ஹென்றி டிபைன். 

அரசியல் தலைவர்கள் சந்திப்பு 

இந்நிலையில், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திருமுருகன் காந்தியை, தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் ஏற்கெனவே சந்தித்துப் பேசியுள்ளனர். இந்நிலையில், ஆகஸ்ட் 7-ம் தேதி ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, சிறையில் உள்ள திருமுருகன் காந்தியை சந்தித்துப் பேசினார். "திருமுருகன் காந்தி  உள்ளிட்ட நான்கு பேரையும் குண்டர் சட்டத்தில் இருந்து விடுவிக்க சட்ட முகாந்திரங்கள் இருந்தும் அவரை விடுவிக்காதது ஏன்?" என்று அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

இதனிடையே திருமுருகனை விடுவிக்கக்கோரி அயல் நாடுகளில் இருந்தும் தமிழக முதலமைச்சருக்கு கடிதங்கள் வந்து கொண்டிருப்பதாக மே 17 இயக்கம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பின் நிர்வாகியான லேனா குமாரிடம் பேசியபோது, "திருமுருகன் மீதான வழக்கு 'அறிவுரை மையத்திற்கு' அனுப்பப்பட்டு, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த மையம்  வழக்கறிஞர்கள் இல்லாதவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்காக வாதாடக்கூடிய முறையைக் கொண்டது. இந்த அறிவுரை மையத்தின் நீதிபதிகளாக ஓய்வுபெற்ற நீதிபதிகள் செயல்படுகிறார்கள். 

திருமுருகனுக்கு பேராசிரியர் சிவக்குமாரும், இளமாறனுக்கு காந்தியும், அருண்குமாருக்கு முகிலனும், டைசனுக்கு கொளத்தூர் மணியும் ஆஜராகி வாதாடினர். குண்டர் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டவர்களுக்கு எதிரான விசாரணையின்போது, ஓரிரு வாதங்களை முன்வைத்தாலே, அந்தச் சட்டத்தில் இருந்து விலக்கு அளித்து விடுவர். ஆனால், திருமுருகன்காந்தி வழக்கில் போலீஸ்  தரப்பில் சொல்லப்பட்ட பொய்யான தகவல்களை எடுத்துரைத்த பிறகும் இன்னும் அவரை குண்டர் சட்டத்தில் இருந்து விடுவிக்கவில்லை. சம்பந்தப்பட்டவர்கள்மீது குண்டர் சட்டம் போடுவதற்கு எந்த முகாந்திரமும் கிடையாது, எனினும் திட்டமிட்டே அதனை நிறைவேற்றியுள்ளனர். போலீஸாரின் தவறுகளைச் சுட்டிக்காட்டியதோடு எங்களுடைய வாதத்தில் முக்கியமான விஷயங்களையும் எடுத்துவைத்தோம். குறிப்பாக திருமுருகன் காந்தியின்மீது போடப்பட்ட வழக்குகளை வைத்தே குண்டர் சட்டம் பதியப்பட்டதாக முதலில் போலீஸார் தெரிவித்தனர். எங்களுடைய தரப்பில் இருந்து கேள்விகள் எழுப்பட்டது. எழும்பூர், ராயப்பேட்டை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம் ஆகிய காவல்நிலையங்களில் பதிவுசெய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் இதுவரை எதிலுமே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்ட 60 நாள்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும். அப்படிச் செய்யாமல் இருப்பதோடு, காவல்துறை அதிகாரிகளோ அல்லது மற்றவர்களோ இதுகுறித்து புகார் ஏதும் கொடுக்கவில்லை என்ற தகவலைச் சுட்டிக்காட்டியுள்ளோம்.

நுங்கம்பாக்கத்தில் நடந்த போராட்டத்தில் அனுமதியின்றி கூடியதாக வழக்குப் பதிவு செய்துள்ளது காவல்துறை. காவல்துறையின் இந்தக்கூற்றை உடைக்கும் வகையில்  அனுமதி வழங்கியதற்கான ஆதாரங்களை வழங்கி உள்ளோம். நான்கு பேரும் சிறையில் உள்ள நிலையில், அவர்கள் தொடர்பான ஆவணங்களை சிறைத்துறை கொடுக்க வேண்டும். ஆனால், இதுவரை அவற்றை கொடுக்கவில்லை. மேலும், நடந்த நிகழ்வுகள் தொடர்பாக, மேஜிஸ்திரேட்டுக்கு அனுப்பிய முக்கிய ஆவணமான 91-வது படிவத்துக்குப் பதிலாக 95-ம் படிவத்தில் எழுதி அனுப்பி உள்ளனர். இப்படியான தவறுகள் ஏற்படக் காரணம், போலீஸாருக்கு எங்கிருந்தோ கொடுக்கப்பட்ட நெருக்கடிதான் என்பது தெளிவாகிறது. ஒப்புதல் வாக்குமூலத்தில், திருமுருகன் காந்தி அப்பாவின் கையெழுத்தைப் போலியாகப் போட்டுள்ளனர் .அந்த ஆவணத்தில் போடப்பட்ட கையொப்பம் போலியானது என்பதற்கான ஆதாரங்களையும் வழங்கியுள்ளோம். மேலும் திருமுருகனுக்கு எதிராக நான்கு சாட்சிகளை போலீஸார் போலியாக உருவாக்கியுள்ளனர். அந்த சாட்சிகள் கொடுத்துள்ள முகவரியில் போய் பார்த்தபோது 'அப்படி ஒரு ஆள் யாருமே இல்லை' என்கிறார்கள். இதுபோன்ற பல்வேறு சதிவேலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் நீதிபதிகள் முன்பு தெரிவித்த பின்னரும், குண்டர் சட்டம் விலக்கிக் கொள்ளப்படவில்லை. அரசுத் தரப்பில் இருந்து வேறு ஏதோ நெருக்கடிகள் இருப்பதாலேயே நீதிபதிகள், இன்னமும் குண்டர் சட்டத்தில் இருந்து அவர்களை விடுவிக்கவில்லை. இதன்காரணமாகவே அவர்கள் ஜாமீனில் வெளியில் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது" என்றார்.

"நியாயமான, சரியான நோக்கத்துக்காக கூட்டமோ, போராட்டமோ நடத்தும் உரிமை அனைவருக்கும் உள்ளது" என்கிறது அரசியலமைப்புச் சட்டத்தின் 19-வது பிரிவு. ஆனால், சட்டம் தெரிந்த காவல்துறையே அதை மதிக்காமல், இதுபோன்று போலியான குற்றச்சாட்டுகளைக் கூறி, குண்டர் சட்டத்தில் கைதுசெய்யும் நடவடிக்கை தொடர்வது கவலை அளிக்கக்கூடியது.

பின் செல்ல