Published:Updated:

'மக்களை ரத்தப் பரிசோதனை செய்வதுதான் தேசியமா..?' - தேசியமும்... தேசிய இனப்போராட்டமும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
'மக்களை ரத்தப் பரிசோதனை செய்வதுதான் தேசியமா..?' - தேசியமும்...  தேசிய இனப்போராட்டமும்!
'மக்களை ரத்தப் பரிசோதனை செய்வதுதான் தேசியமா..?' - தேசியமும்... தேசிய இனப்போராட்டமும்!

'மக்களை ரத்தப் பரிசோதனை செய்வதுதான் தேசியமா..?' - தேசியமும்... தேசிய இனப்போராட்டமும்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

லகமயமாக்கலால் உதாசீனப்படுத்தப்பட்ட உள்ளூர் பூர்வகுடிகள், உலகம் முழுவதும் உத்வேகத்துடன் தேசிய இனப்போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். யுரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறியதற்கு பொருளாதார காரணிகள் இருந்தாலும், அங்கும் மைய அச்சாக இருப்பது தேசிய இனம், தேசியம், தேசிய விடுதலை குறித்தப் பார்வைதான்.

காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களில் தொடங்கி கர்நாடகத்தில் மெட்ரோ ரயிலில் இந்தியை தார் பூசி அழிக்கும் போராட்டங்கள்வரை... இந்தியச் சூழலில் முன்னெடுக்கப்படும் பெரும்பாலான போராட்டங்களின் வேர்களைத் தேடினால், அது தேசிய இனப் போராட்டத்தின் கூறுகளை சுமந்தே நிற்கிறது! 

தமிழகத்தில் அண்மைக்காலமாகப் பேசப்படும் ‘தூய குருதிவாதம்’ என்னும் பாசிசவாதம், தேசியவாதத்தின் பெயராலேயே முன் வைக்கப்படுகிறது. இவை அனைத்தும் சாமான்ய மக்களாகிய நம்மைச் சுற்றியே நடப்பதால், தேசியவாதம் என்றால் என்ன? பேரினவாதம் என்றால் என்ன? இந்த பதங்களின் வரலாறு என்ன? அரசியல் என்ன?  அதில் மக்களின் பங்கு என்ன... என்பதைப்பற்றியெல்லாம் அறிந்துகொள்வது இங்கே அவசியம் ஆகிறது.   

அந்த அவசியத்தை ஈழப் போராட்டப் பின்னணியின் ஊடாக, யுரோப்பிய எடுத்துக் காட்டுகளை முன் வைத்து கம்யூனிசப் பார்வையில் விளக்குகிறது, அகரமுதல்வனின் 'ஆகுதி பதிப்பகம்' வெளியிட்டுள்ள மு.திருநாவுக்கரசு எழுதிய ‘தேசியமும்... ஜனநாயகமும்’ புத்தகம்.  

'தேசியவாதம்... பேரினவாதம்!'

பழைய கலாசாரத்தில் இருந்து நவீனத்துக்கு தேவையான சில சிந்தனைகளைப் பின்பற்றலாம். ஆனால் பழமையை இலட்சியம் ஆக்கிவிடக்கூடாது.
 

“மண்ணின் மக்கள் சிறுபான்மையினர் ஆகி வருகிறார்கள். அதனால், வெளியாரை வெளியேற்ற வேண்டும்” என்ற கோஷம் ஓங்கி ஒலிக்கிறது. இது புறக்கணிக்க முடியாத கோஷம் தான். இந்தக் கோஷம்தான் அமெரிக்காவில் ட்ரம்ப் ஆட்சியைப் பிடிக்கக் காரணமாக இருந்தது. இந்தக் கோஷம்தான் அரபு நாடுகள் தொடங்கி, இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்கள் வரை ஓங்கி ஒலிக்கிறது. ஆனால், ஒரு தேசிய இனம் ஒன்றுசேர்ந்து ஒரே தேசத்தை அமைத்துவிட முடியுமா? எந்த ஜனநாயகமும் அற்ற ஒரு தேசிய இன அரசு, அதே தேசிய இனத்தைச் சேர்ந்த மக்களைச் சுரண்டிக் கொழுப்பதும் தேசியவாதத்தின் பெயரால் அதனை நியாயப்படுத்துவதும் சரியாகுமா..? என்பதை வரலாற்றுத் தரவுகளுடன் விளக்குகிறது ‘தேசியமும்... ஜனநாயகமும்’ புத்தகம்.  

தேசியவாதம் எப்போது ஆதிக்கவாதம் ஆகின்றதோ எங்கு இனவாதம் ஆகின்றதோ அப்போது அது ஜனநாயகத்திற்கு எதிர்வாதம் ஆகி ஜனநாயக விரோதப் பாத்திரத்தை வகித்துவிடுகின்றது.
 

‘தேசியவாதம்’  என்னும் சித்தாந்தம் ஒரே தேசிய இன மக்களால்தான் முன்வைக்கப்படுகிறது என்றாலும், ஓர் அரசு தன் தேசிய இன மக்களை சுரண்டும்போது, எதேச்சை அதிகாரத்துடன் செயல்படும்போது... மக்கள் அந்தத் தேசிய இனத்துக்கு எதிராகவேக் கிளர்ந்தெழுந்திருக்கிறார்கள். அமெரிக்காவில், ஃபிரான்சில் அதுதான் நிகழ்ந்திருக்கிறது. ஒரு தேசிய இன மக்கள் தங்கள் இனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசை ஏன் எதிர்க்கிறார்கள்... ஜனநாயகம் அற்றுப் போகும் போதுதான்! தேசியவாதத்துக்கும், பேரினவாதத்துக்கும் உள்ள வித்தியாசம் ஜனநாயகம் அற்றத் தன்மைதான். 

இந்தப் புரிதலின் பின்னணியில்தான் தூய குருதிவாதத்தையும் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது, ஜனநாயக அரசு வேண்டி ஒரு தேசிய இனப் போராட்டத்தை முன்னெடுத்து அதில் வெற்றி பெற்று ஓர் அரசை அமைக்கும்போது அவ்வரசு நெகிழ்வு தன்மையுடன் இருத்தல் அவசியம். அந்த நிலப்பரப்பில் பல நூற்றாண்டுகளாக வாழும் மக்களை தம் இனத்துடன் அடையாளப்படுத்த வேண்டும். அவ்வாறில்லாமல், எந்த ஜனநாயக நெகிழ்வு தன்மையும் அற்று தூய குருதிவாதம் பேசுதல், டி.என்.ஏ ஆய்வு செய்தல் பேரினவாதம் ஆகும்.  அந்தப் பேரினவாதம் முதலில் பிற இன மக்களை துன்புறுத்தி, பாசிச நிலையை அடைந்து பின் தன் சொந்த இன மக்களையும் துன்புறுத்தும்.  இதை அப்படியே மதவாதத்துக்கும் பொருத்திப் புரிந்துகொள்ளலாம். 

அரசியல் தீர்மானங்களில் மக்களுக்கு பங்கில்லை என்றால், அங்கு மக்களுக்கு என்று எதுவுமில்லை.
 

சரியான லட்சியம் என்பது இடம், பொருள், ஏவல், காலம், சூழல் என்பவற்றின் தன்மைக்கும் அளவிற்கும் ஏற்பவே வடிவமைக்கப்பட வேண்டும். அவ்வாறு அல்லாத ஓர் இலட்சியம் கற்பனவாதமாய் வடிவெடுத்து எதிரியின் காலடியில் வீழ்ந்து  முடிவடைந்துவிடும்.
 

'பழம் பெருமைகள் தேசியமா...?'  

பழம் பெருமைகளை முன் வைத்து ஒரு தேசியத்தைக் கட்ட முயலக் கூடாது என்பதை சிங்கள பெளத்த பேரினவாதத்தின் பின்னணியில் விளக்குகிறார் திருநாவுக்கரசு. சிங்கள இளைஞர்களின் தொடக்கக் காலப் போராட்டம் கம்யூனிசப் பின்னணியில்தான் இருந்திருக்கிறது. தமிழரான சண்முகதாசன் தலைமையிலான சீனச்சார்பு கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்காகப் போராடியிருக்கிறார்கள். ஆனால், கெடுவாய்ப்பாக பெளத்த பேரினவாதத்தால் ஈர்க்கப்பட்ட அந்த இளைஞர்கள், பின் தமிழர்களுக்கு எதிராகத் திரும்பியிருக்கிறார்கள்.  சிங்களர் நலன் என்ற புள்ளியில் திரண்ட இளைஞர்கள் பெளத்த பழம் பெருமைகளை மட்டும் பேசி பேரினவாதிகளாக மாறியிருக்கிறார்கள். பழம் பெருமைகளை மட்டும் பேசி வளரும் அல்லது வளர்க்கப்படும் தேசியம் பாசிச தேசியமாக மாறி, எந்த நெகிழ்வு தன்மையும் இல்லாமல் இயங்கும். இதை நாம் தமிழக பின்னணியில் சாதியை, சாதியப் பெருமைகளை முன்னிறுத்தி பிதற்றப்படும் தேசியத்துடன் பொருத்திப் பார்த்துப் புரிந்துகொள்ளலாம். 

தேசியவாதத்தின் முதற்கனி ஜனநாயகம். ஆனால் தேசியவெறிக்கு முதற்பலி ஜனநாயகம். ஆதலால், தேசியவெறி, தேசியவாதத்திற்கு எதிர்நிலையானது. மன்னர்களுக்கும் எதேச்சதிகாரிகளுக்கும், அந்நிய அதிக்கத்திற்கும், இன ஆதிக்கத்திற்கும் எதிரான ஜனநாயகத்தை ஸ்தாபிப்பதற்கான போராட்டமே தேசிய போராட்டமாகும். 

'எது தேசியம்...?'

இந்தப் புத்தகம் தேசியம்  குறித்து அழுத்தமான ஒரு விளக்கத்தை அளித்துச் செல்கிறது. அதாவது,  “தலைமைத்துவத்திலும் அரசியல் தீர்மானத்திலும் பரஸ்பர பங்களிப்பும், ஜனநாயக உள்ளடக்கமும், புவியியல் ரீதியான ஒருமைப்பாடும், பிரதேச ஐக்கியமும், பொருளாதாரப் பொது வாழ்வும், சமூக ஒருமைப்பாடும், வாழ்க்கை முறை ஐக்கியமும் இன்றித் தேசியம் பேசப்படுமேயானால், வெறுமனே இனவாதமாகவோ, அன்றி மதவாதமாகவோ, மன்னராட்சி வாதமாகவோ அல்லது எதேச்சதிகார வெறி வாதமாகவோத்தான் அமைய முடியும்” இதை உள்வாங்காமல், ஒரு தேசிய இனப்போராட்டம் நடக்குமேயானால், அது தற்கொலைக்கு நிகரின்றி வேறில்லை!

தேசிய இன அரசியல் பேசுவோர்... அதில் இயங்குவோர்... படிக்க வேண்டிய, உள்வாங்க வேண்டிய புத்தகம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு