Published:Updated:

ஜெயலலிதா பாணியில் எடப்பாடி பழனிசாமி சொன்ன குட்டிக்கதை!

ஜெயலலிதா பாணியில் எடப்பாடி பழனிசாமி சொன்ன குட்டிக்கதை!
ஜெயலலிதா பாணியில் எடப்பாடி பழனிசாமி சொன்ன குட்டிக்கதை!

ஜெயலலிதா பாணியில் எடப்பாடி பழனிசாமி சொன்ன குட்டிக்கதை!

''இந்த அரசை யாராலும் ஆட்டவோ... அசைக்கவோ முடியாது'' என்று டி.டி.வி.தினகரனுக்குப் பதிலடி கொடுக்கும்வகையில் சூசகமான வார்த்தைகளால் பதிலளித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதுமட்டுமல்லாமல், 'இங்கிருந்து வேறு அணிக்கு யாரும் சென்றுவிடாதீர்கள்' என்று கெஞ்சிக் கேட்கும் கூட்டமாகவே பெரம்பலூரில் நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா இருந்தது.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பல மாவட்டங்களில் நடைபெற்றுவருகிறது. அந்த வகையில், பெரம்பலூரில் வெகுசிறப்பாக நடைபெற்ற இந்த விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ''பெண் எம்.ஜி.ஆராக வாழ்ந்துகாட்டியவர் ஜெயலலிதா. மற்றவர்களை விமர்சனம் செய்வதையே தொழிலாகக் கொண்டவர்கள் ஒருபோதும் எம்.ஜி.ஆராக முடியாது. உலகில், ஒரு எம்.ஜி.ஆர்-தான் இருக்க முடியும். அரசியலுக்கு வருவதற்கு முன்பே ஏழை மக்களுக்கு உதவிசெய்து அவர்கள் மனதில் இடம்பிடித்தவர் எம்.ஜி.ஆர். மக்கள் மனதில் இடம்பிடிக்காதவர்கள் ஒரு காலத்திலும் ஜார்ஜ் கோட்டையைப் பிடிக்க முடியாது. ஜெயலலிதா ஆன்மா ஆசி இருக்கும்வரை இந்த அரசை யாராலும் ஆட்டவோ... அசைக்கவோ முடியாது.

நடிகராக இருந்து ஆட்சியைப் பிடிக்க நினைப்பவர்கள் மக்கள் பணி செய்ய முன்வர வேண்டும். மக்களின் மனக்கோட்டையைப் பிடிக்க இயலாதவர்கள் ஜெயின்ட் ஜார்ஜ் கோட்டையைப் பிடிக்க முடியாது. தமிழகத்தின் முன்னேற்றத்துக்காக இந்த அரசு பல்வேறு நலத் திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. 2,065 ஏரி, குளங்களைத் தூர்வாரவும், இயற்க்கை உரமான வண்டல் மண்ணை இலவசமாக விவசாயிகள் எடுத்துக்கொள்ளவும், 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிலத்தடிநீர் மட்டத்தை உயர்த்த கடந்த மூன்று ஆண்டுகளில் ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. நடப்பாண்டில் 350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 100 தடுப்பணைகள் கட்டப்படும். இதன்மூலம் தமிழகத்தில் நிலத்தடிநீர்மட்டம் மேலும் உயரும். வெறும் 32 சதவிகித மழை மட்டுமே பெய்து... 140 ஆண்டுகளில் இல்லாத கடும் வறட்சி தமிழகத்தில் நிலவுகிறது. இதைத் திறம்பட இந்த அரசு சமாளித்து மக்களின் குடிநீர்த் தேவையை நிறைவேற்றியது. நாட்டின் உயர் கல்வி  24 சதவிகிதம் மட்டுமே. ஆனால், தமிழகத்தின் உயர் கல்வி 44.3 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது என்றால், அதற்கு யார் காரணம்? அம்மாவின் ஆட்சிதான். விவசாயத்தை முக்கியத் தொழிலாகக் கொண்ட பெரம்பலூர் மாவட்டத்தில், பல முக்கியத் திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி உள்ளது. வேப்பந்தட்டையில் விசுவகுடி அணையில் மக்கள் பொழுதுபோக்க வசதியாக இரண்டு கோடி ரூபாயில் பூங்கா அமைக்கப்படும். கடலூர் - பெரம்பலூர் மாவட்டங்களை இணைக்கும்வகையில் கல்லாற்றின் குறுக்கே... கீழகல் பூண்டி - திருவாந்துரை இடையே 16 கோடி ரூபாயில் உயர்மட்ட பாலம் கட்டப்படும். இந்த மாவட்டத்தில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்துக்கு, 'எம்.ஜி.ஆர் விளையாட்டு வாளாகம்' எனப் பெயர் சூட்டபடும்'' என்றார். 


                        

எடப்பாடி சொன்ன குட்டிக்கதை!

இந்த நிகழ்வில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா பாணியில் எடப்பாடி பழனிசாமியும் ஒரு குட்டிக்கதை சொன்னார். ''ஒருகாடு திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அதைக் கண்ட விலங்குகளும் பறவைகளும் அங்கிருந்து ஓட்டம்பிடித்தன. ஆனால், ஒரு சிட்டுக்குருவி மட்டும் தனது சிறிய அலகால் தண்ணீரைக் கொண்டுவந்து ஊற்றித் தீயை அணைக்க முயற்சி செய்தது. இதைக் கண்ட இறைவன், சிட்டுக்குருவியிடம்... 'உனது சிறிய அலகால் தண்ணீரைக் கொண்டுவந்து எப்படிக் காட்டுத்தீயை அணைக்க முடியும்' எனக் கேட்டார். அதற்கு அந்தக் குருவி, 'நான் பிறந்து வளர்ந்து வாழ உதவியது இந்தக் காடு. அதற்கு ஆபத்து எனும்போது அதை விட்டுவிட்டு ஓடுவது மிகத் துரோகம். என்னால் ஆனச் செயலைச் செய்து இந்தக் காட்டை காப்பாற்ற முயல்கிறேன்' என்றது. இறைவன் அந்தக் குருவியின் தியாகத்தையும் கடமை உணர்ச்சியையும் கண்டு காட்டுத் தீயை அணைக்கச் செய்தார். அந்தச் சிட்டுக்குருவிபோல அ.தி.மு.க தொண்டர்கள் தியாக உணர்வுடனும் விசுவாசத்துடனும் இருக்க வேண்டும்'' என்றார். அதாவது, 'இந்த அணியைவிட்டு வேறு அணிக்கு அ.தி.மு.க தொண்டர்கள் சென்றுவிடக் கூடாது' என்பதற்காகவே இந்தக் கதையை அவர் சூசகமாகச் சொல்லிமுடித்தார்.

அடுத்த கட்டுரைக்கு