Published:Updated:

டெங்கு முதல் குட்கா வரை... - விஜயபாஸ்கரை விளாசும் ஸ்டாலின்!

டெங்கு முதல் குட்கா வரை... - விஜயபாஸ்கரை விளாசும் ஸ்டாலின்!
டெங்கு முதல் குட்கா வரை... - விஜயபாஸ்கரை விளாசும் ஸ்டாலின்!

டெங்கு முதல் குட்கா வரை... - விஜயபாஸ்கரை விளாசும் ஸ்டாலின்!

‘பார்ட் டைம் மினிஸ்டர்’  என்ற அடைமொழியோடு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரைக் குறிப்பிடுகிறார் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின். “காலம், தனது கணக்கைச் சரியாக முடிக்கும்” என்ற விஜயபாஸ்கரின் அறைகூவலால், அவருக்கு எதிராக அறிக்கைப் போரை வேகப்படுத்திவருகிறார் மு.க.ஸ்டாலின்.

''சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும்'' என தி.மு.க-வின் வற்புறுத்தல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கிய அன்றே, ''குட்கா பிரச்னையில் அமைச்சருக்குத் தொடர்பு இருக்கிறது; ஆகவே, அவரைப் பதவியில் இருந்து நீக்க வேண்டும்'' என்று அதிரடி காட்டினார்கள் தி.மு.க-வினர். சட்டசபையின் நிறைவு நாள் அன்று, தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களைச் சட்டசபைக்குள் எடுத்துவந்து காட்டி அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தார் ஸ்டாலின். அதன்பிறகும் விஜயபாஸ்கருக்கு எதிராகத் தொடர் அறிக்கைப் போரினால், ஒருகட்டத்தில் விஜயபாஸ்கர் தரப்பிலிருந்தும் அறிக்கை வெளியானது. அதில், “மக்களுக்காகத் தொடர்ந்து பணியாற்றிக்கொண்டிருக்கும் அரசின் திட்டங்களையும், இந்திய அளவில் முதன்மையான மக்கள் நல்வாழ்வுத் துறையின் பணிகளையும், வேகத்தையும் முடக்கிவிடலாம் என்று மனப்பால் குடிக்கிறார் ஸ்டாலின். அவரின் முயற்சி ஒருபோதும் பலிக்காது. என்னைவிட வயதில் மூத்தவரான ஸ்டாலினுக்கு நான் சொல்லித் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை” என்று எதிர்ப்புக் காட்டினார் விஜயபாஸ்கர். 

இதனையடுத்து விஜயபாஸ்கருக்கு எதிராகத் தி.மு.க-வின் அஸ்திரம் வேகம் எடுத்துள்ளது. குட்காவில் இருந்து நீட் தேர்வுக்குத் தாவிய தி.மு.க., ''நீட் தேர்வில் அமைச்சரின் செயல்பாட்டில் திருப்தி இல்லை'' என்று அறிக்கைவிட்டனர். ''இப்போது நீட் தேர்வைத் தாண்டி, டெங்கு விவகாரத்தில் தவறான தகவலைச் சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 'பார்ட் டைம்' அமைச்சராக இருக்கும் சுகாதாரத் துறை அமைச்சரை மாற்றிவிட்டு, முழுநேர அமைச்சர் ஒருவரை நியமிக்க வேண்டும்'' என்று ஸ்டாலின் அறிக்கைவிட்டுள்ளார். 

“டெங்குவின் பாதிப்பு தமிழகத்தில் அதிகமாக இருக்கிறது” என்ற ஸ்டாலின் அறிக்கையின் உண்மைத் தகவலை, தமிழக அரசின் சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் டெல்லியில் பேட்டியளித்தபோது பகிரங்கமாக ஒப்புக்கொண்டிருக்கிறார். “ 'தமிழகத்தில் டெங்கு கட்டுப்பாட்டில் உள்ளது. யாரும் பீதியடைய வேண்டியதில்லை' என்று சட்டமன்றத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த வாக்குறுதி பொய்யென இப்போது சுகாதாரத் துறைச் செயலாளரின் பேட்டி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. ‘கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு நீடிக்காது’ என்பார்கள். ‘குதிரை பேர’ அ.தி.மு.க அரசில் ‘குவாரி முதல் குட்கா’ வரை ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் அமைச்சர் விஜயபாஸ்கர், சட்டமன்றத்தில் அளித்த பதிலின் புளுகும், சாயமும் வெளுத்துப் போய் விட்டது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

''ஊழல் புகார்களில் சிக்கியுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் டெல்லிக்குச் சென்று மத்திய அமைச்சர்களைப் பார்க்கிறார்... பிரதமர் நரேந்திர மோடியைப் பார்க்கிறார்... ஊழல் அமைச்சரை டெல்லிக்கு அனுப்பி மத்திய அமைச்சர்களுடனும், பிரதமருடனும் நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் எதிர்காலம் குறித்து விவாதிக்க முதலமைச்சர் அனுமதிக்கிறார். ஆனால், 'நீட்' தேர்வுக்கு மத்திய அரசு இதுவரை அனுமதியும் அளிக்கவில்லை. மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்குக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்றுத் தரவில்லை. இதனால் மாணவர்கள், மருத்துவக் கல்விக் கனவு சீரழிந்து இன்றைக்கு எதிர்காலம் சூன்யமாகிவிட்ட வேதனையில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே, ‘நீட்’ தேர்வுக்காக மத்திய அமைச்சர்கள் மற்றும் பிரதமரை அமைச்சர் விஜயபாஸ்கர் சந்தித்தாரா அல்லது தனது மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பித்துக்கொள்ள டெல்லிக்குக் காவடி எடுத்தாரா என்ற கேள்வி எழுகிறது. ஊழல் புகார் மலையில் உட்கார்ந்திருக்கும் அமைச்சர் விஜயபாஸ்கரால் சுகாதாரத் துறையை முழுநேரப் பணியாகக் கவனிக்க முடியவில்லை. அவர் ஒரு ‘பார்ட் டைம் மினிஸ்டர்’ போலவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இனியும் வேடிக்கை பார்க்காமல் சுகாதாரத் துறைக்கு ‘முழு நேர அமைச்சர்’ ஒருவரை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக நியமிக்க வேண்டும்” என விஜயபாஸ்கருக்கு எதிராகக் இந்தக் கடுமையான அறிக்கையை ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். 

''விஜயபாஸ்கர் மீதான குற்றச்சாட்டுகளை ஆரம்பத்தில் தி.மு.க கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதாக தி.மு.க-விலே அதிருப்தி எழுந்தது. குறிப்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கையின்போது, விஜயபாஸ்கருக்கு நெருக்கடி கொடுக்காமல் தி.மு.க-வினர் இருந்தது அனைவரிடத்திலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாகத்தான் தி.மு.க செயல்தலைவர் விஜயபாஸ்கருக்கு எதிராக அறிக்கைகள்விட ஆரம்பித்தார். ஆனால் விஜயபாஸ்கர்,  ஸ்டாலினைக் குறிப்பிட்டே அறிக்கைவிட்டதால்... சூடான தி.மு.க தரப்பு விஜயபாஸ்கருக்கு எதிராக இப்போது அறிக்கைப் போரை வேகத்துடன் செயல்படுத்தி வருகிறது'' என்றார் தி.மு.க. நிர்வாகி ஒருவர்.

அடுத்த கட்டுரைக்கு