Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்

பெண்களின் மீது அமிலம் வீசுவது, திகைக்கவைக்கும் எண்ணிக்கையில் அதிகரித்து வருகின்றன. இரு வாரங்களுக்கு முன்பு நாகப்பட்டினம் பெண்ணின் மீது அமிலம் வீசியது உள்ளூர் உதாரணம். கடந்த ஏழு மாதங்களில் இந்தியா முழுவதும் 518 பெண்கள், அமில வீச்சுக்குள்ளாகியிருக்கிறார்கள்.

நாளுக்கு ஒரு பெண், ஊருக்கு ஒரு பெண் இப்படி அமிலத் தாக்குதலுக்கு ஆளாவது பயங்கரம். அமில வீச்சுக்கு இலக்கான பெண்களைப் பார்த்தால், பதறிப்போவோம். உடலும் உறுப்புகளும் உருக்குலைந்து சின்னாபின்னமாகச் சிதைந்து, வாழ்நாள் முழுவதும் ரண வேதனை தரும் கொடூரம் அது.

2013-ம் ஆண்டு, உச்ச நீதிமன்றம் அமில வீச்சுகளைக் கட்டுப்படுத்தாத மாநில அரசுகளைக் கடுமையாகக் கண்டித்தது. அதைத் தொடர்ந்து தமிழ்நாடு உள்பட பல மாநிலங்கள் அமில விற்பனை மீதான நிபந்தனைகளை இறுக்கமாக்கின. அமில வீச்சில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை அல்லது 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்க வேண்டும் என நீதிபதி லட்சுமணன் குழு பரிந்துரைத்தது. உண்மையில் மாற்றம் வரவேண்டியது, அமில விற்பனையில் மட்டும்தானா?

இந்தத் தலைமுறை இளைஞர்களுக்கு, எங்கும் எதிலும் கேட்டது கிடைக்க வேண்டும். இதன் மோசமான மறுபக்கம், தனக்குக் கிடைக்காத அழகு அழிக்கப்பட வேண்டும் என்கிற ஆபத்தான நோய்க்கூறு மனநிலைக்கு சிலரைத் தள்ளிவிட்டது. தவறான சகவாசம், போதைப் பழக்கம், வக்கிர மனோபாவம்... என வெறி பிடித்தவர்களாக உருமாறி உலவுகிறார்கள். ஒரு திடீர் கணத்தில் யாரோ ஒரு பெண்ணின் உயிரையே அழிக்கத் துணிகிற அளவுக்கு ஆபத்தானவர்களாகி, தங்கள் வாழ்வையும் நாசமாக்கிக்கொள்வதே நடக்கிறது.

இதில் இருந்து இளைஞர்களை விடுவிக்க, அவர்களின் மனங்களில் மாற்றத்தை உண்டாக்க வேண்டும். பள்ளி, கல்லூரி, பணியிடம், சமூகம்... என எங்கும் எப்போதும் தன்னை சூழ்ந்திருக்கும் இத்தகைய ஆபத்துக்கள் குறித்து பெண்கள் விழிப்புடன் இருப்பது மிக மிக அவசியம்.

குறிப்பாக, கல்வி நிலையங்களில் மதிப்பெண்களுக்கு வழங்கும் முக்கியத்துவத்தை, மதிப்பீடுகளுக்கும் வழங்க வேண்டும். தமிழகப் பள்ளிகளில் முன்பு நடைமுறையில் இருந்த நீதிபோதனை வகுப்புகளை மீண்டும் தொடங்க வேண்டும். நன்னெறியும் நற்கல்வியும் இணைந்தால்தான், நற்பண்புகள் கொண்ட இளைய சமுதாயம் உருவாகும்!