Published:Updated:

மோடி 100 - ப்ளஸ், மைனஸ் என்ன?

பாரதி தம்பி, ஓவியங்கள்: ஹாசிப்கான்

மோடி 100 - ப்ளஸ், மைனஸ் என்ன?

பாரதி தம்பி, ஓவியங்கள்: ஹாசிப்கான்

Published:Updated:
மோடி 100 - ப்ளஸ், மைனஸ் என்ன?

ரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க., மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்று, 100 நாட்களை நிறைவுசெய்துவிட்டது. 10 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியைத் தூக்கி வீசிவிட்டு, அறுதிப் பெரும்பான்மையுடன் பா.ஜ.க-வை ஆட்சியில் அமரவைத்தார்கள் மக்கள். 'ஆப் கே பார் மோடி சர்க்கார்’ ஆட்சிக்கு வந்த 100 நாட்களின் ப்ளஸ், மைனஸ் என்ன? இரு தரப்பின் பல்ஸ் பார்ப்போம் இங்கே...

''வளர்ச்சிப் பாதையில் இந்தியா''

டாக்டர் தமிழிசை சௌந்தரராஷன், மாநிலத் தலைவர், பாரதிய ஜனதா கட்சி.

''பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தபிறகு நாடு முழுவதுமே ஒருவித சுறுசுறுப்பு தொற்றிக் கொண்டது. வர்த்தக நிறுவனங்கள் உற்சாகத்துடன் செயல்படுகின்றன. மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் உயர்வு ஒன்றே இதற்கான எடுத்துக்காட்டு. முக்கியமாக, பணவீக்கம் 9 சதவிகிதத்தில் இருந்து 7.4 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 'பணவீக்கத்தைக் குறைப்போம்... குறைப்போம்’ என்று சொல்லிக்கொண்டே இருந்தார்கள். அவர்களால் அவர்களது வாக்கு வங்கியைத்தான் குறைக்க முடிந்தது. ஆனால், நாங்கள் மூன்றே மாதங்களில் பணவீக்கத்தைக் குறைத்துக்காட்டியுள்ளோம். அதேபோல, மொத்த உள்நாட்டு உற்பத்தியான ஜி.டி.பி-யில் 10 சதவிகித வளர்ச்சி என்பது ஏதோ அடைய முடியாத இலக்கு என்று சொல்லிக்கொண்டிக்கின்றனர். ஆனால், பாரதிய ஜனதா அரசு மூன்றே மாதங்களில் ஜி.டி.பி-யை 4.6 சதவிகிதத்தில் இருந்து 5.7 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது. ஆக, 10 சதவிகிதம் என்பது விரைவில் எட்டக்கூடிய இலக்குதான்.

இந்த ஆட்சி, முதலாளிகளுக்கும் தொழில் செய்வோருக்கும் மட்டுமே சாதகமானது என்று ஒரு பிரசாரம் செய்யப்படுகிறது. அது உண்மையல்ல. ஒரே மாதத்தில் இரண்டு முறை பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளன. முதலில் 2 ரூபாய் 40 பைசா குறைத்தோம். இப்போது 1 ரூபாய் 80 பைசா விலை குறைத்துள்ளோம். இது காங்கிரஸ் ஆட்சியில் நடந்ததா?

மோடி 100 - ப்ளஸ், மைனஸ் என்ன?

வெறுமனே 'எண்ணெய் விலை நிர்ணயக்கொள்கை தவறு’ என்று குற்றம் சொல்லிக்கொண்டிருந்தால் மட்டும் போதாது... விலை குறைக்கப்பட்டுள்ளது குறித்தும் பேச வேண்டும். ஒரு வருடத்துக்கு 12 கியாஸ் சிலிண்டர்கள் மானிய விலையில் வாங்கிக்கொள்ளலாம் என்பது நடைமுறை. அந்த 12 சிலிண்டர்களை மாதம் ஒன்று வீதம் ஒரு வருடத்துக்கு வாங்கிக்கொள்ளலாம் என்றுதான் பலரும் எண்ணினார்கள். ஆனால், 'அது ஆண்டு முழுமைக்குமான எண்ணிக்கை. 12 சிலிண்டர்களை எப்போது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம்’ என்று அறிவித்துள்ளது மத்திய அரசு. இதுபோன்ற சிறிய சிறிய விஷயங்களில்கூட மக்களின் வசதியைக் கருத்தில்கொண்டு முடிவுகள் எடுக்கப்படுகின்றன.

மோடி, தனது கேபினட் அமைச்சரவையை மிகவும் சிறியதாக அமைத்துக்கொண்டுள்ளார். இதன் மூலம் ஒரு மாதத்துக்கு மட்டும் 125 கோடி ரூபாய் மிச்சமாகிறது. திட்டக்கமிஷன் என்ற 'அவுட்டேட்டட்’ அமைப்பை ஒழித்துக்கட்டியுள்ளார். துணிச்சலான அந்த நடவடிக்கையின் மூலம் அரசுக்கு பல நூறு கோடி ரூபாய்கள் மிச்சமாகும்.

அண்மையில் மோடி சுதந்திர தின உரையாற்றினார். குண்டு துளைக்காத மேடை இல்லாமல் மனதில் இருந்து அவர் பேசிய உரை, இந்த நாட்டு மக்கள் மீது அவர் கொண்டிருக்கும் நேசத்தை உணர்த்தியது. குறிப்பாக, 'பெண் குழந்தைகளை எப்படி நாம் கண்டித்து வளர்க்கிறோமோ, அதுபோல ஆண் குழந்தைகளையும் கண்டித்து வளர்க்க வேண்டும்’ என்ற அவரது பேச்சு முக்கியமானது. ஒரு குடும்பத் தலைவரின் இடத்தில் இருந்து நம் வீட்டுப் பிள்ளைகளை எப்படிக் கண்டித்து வளர்க்க வேண்டும் என்று கவலைப்படுகிறார். இதன் மூலம் சாதாரண மக்களின் மனங்களை அவர் மிக எளிதாக வெல்கிறார்.

இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க வேண்டும் என்பதில் பாரதிய ஜனதா அரசு மிகவும் அக்கறையுடன் இருக்கிறது. இலங்கையுடன் மட்டுமல்ல... இந்தியாவைச் சுற்றியுள்ள நேபாளம், பூடான் போன்ற அண்டை நாடுகளுடனும் நட்புறவு பேணுவதில் கவனமாக இருக்கிறார் மோடி. அதே நேரம் பாகிஸ்தானின் ராணுவ அத்துமீறலைக் கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டிக்கவும் தவறவில்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக 'இந்தியா’ என்ற ஒரு நாட்டின் மீதான உலக அரங்கின் நம்பிக்கை பெருகியுள்ளது. இந்தியாவை நோக்கி முதலீடுகள் குவிகின்றன. கடந்த மூன்று மாதங்களில் இந்திய சந்தையில் வந்திருக்கும் புதிய முதலீடுகளைக் கவனியுங்கள். அது மோடி அரசு மீதான நம்பிக்கையின் அடையாளம். உடனே, ப.சிதம்பரம், 'இந்த முதலீடுகள் எல்லாம் நாங்கள் போட்டத் திட்டங்களினால்தான் வந்துள்ளன’ என்று சொல்கிறார். எனில், அவர் முதலீடுகள் வருவதையும், இந்தியப் பொருளாதாரம் உற்சாகமாக மேலே எழுச்சி பெறுவதையும் ஒப்புக்கொள்கிறார். இந்த வளர்ச்சியை இன்னும் மேல்நோக்கிக் கொண்டுசெல்வதும், நாட்டை வளப்படுத்தி மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதும்தான் இனிவரும் ஆண்டுகளில் எங்களின் இலக்கு. அதை நிச்சயம் செயல்படுத்திக்காட்டுவோம்!''

மோடி 100 - ப்ளஸ், மைனஸ் என்ன?

''சாமான்யர்களுக்கு நல்லது நடந்திருக்கிறதா?''

உ.வாசுகி, ஜனநாயக மாதர் சங்க தேசியத் துணைத் தலைவர், சி.பி.எம்.

''பாரதிய ஜனதா அரசு ஆட்சிக்கு வந்து 100 நாட்களுக்குள்ளேயே கல்வி மற்றும் பண்பாட்டுத் துறைகளைக் காவிமயமாக்குவதில் அதிவேக முனைப்புக் காட்டுகிறது. உதாரணமாக, தீனாநாத் பாத்ரா என்பவர் எழுதியுள்ள ஏழு புத்தகங்கள், குஜராத் மாநிலப் பள்ளிக்கூடங்களில் பாட நூல்களாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மூடநம்பிக்கைகளையும், மதம் சார்ந்த கட்டுக்கதைகளையும் அறிவியல் உண்மைகளைப்போல அந்தப் புத்தகங்கள் போதிக்கின்றன. 'மகாபாரதக் காலத்திலேயே ஸ்டெம் செல் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது; கௌரவர்கள் அதன் அடிப்படையில்தான் உருவானார்கள். வேத காலத்திலேயே கார், விமானம் போன்றவை இருந்தன.

மோடி 100 - ப்ளஸ், மைனஸ் என்ன?

பார்வையற்ற திருதராஷ்டிரருக்கு ஒரு ரிஷி, எங்கோ நடக்கும் பாரதப் போரை அரண்மனையில் உட்கார்ந்தபடியே காட்சியாக விவரித்தார். அந்த ஞான திருஷ்டிதான் டி.வி-யாக உருவானது’ என்று மாணவர்களின் மனங்களில் பொய்களை விதைக்கிறார்கள். 'குழந்தை இல்லாதவர்கள் பசுக்களைப் பாதுகாத்தாலே, குழந்தை பிறக்கும்’ என்றுகூட அந்தப் பாடப் புத்தகங்களில் இருக்கிறது. எதிர்கால சந்ததியை சொந்த புத்தியற்ற மதவாதிகளாக, அறிவியலின் வாசனையே இல்லாத அறிவிலிகளாக மாற்றும் இந்தப் பாடப் புத்தகத்தை, போற்றிப் புகழ்ந்து முன்னுரை எழுதியிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.  இப்படி பண்பாடு, வரலாறு தொடர்பாக கற்காலத்தில் சிந்திக்கும் இவர்கள், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தொண்டூழியம் செய்வதில் மட்டும் நவீன சிந்தனையுடன் உலா வருகிறார்கள். மோடியின் ஒரு கண் மதவாதம் என்றால், மறு கண் கார்ப்பரேட் நலன். உதாரணத்துக்கு, மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட 2013-ம் ஆண்டு செப்டம்பரில் இருந்து இந்த ஆண்டு ஆகஸ்ட் 22 வரை பெருநிறுவனங்களின் சந்தை மதிப்பு எந்த அளவுக்கு உயர்ந்துள்ளது என்பதைப் பார்த்தாலே புரியும்.

முகேஷ் அம்பானி குழுமம் 520%, அடானி 181%, டாடா 599%, ஆதித்யா பிர்லா 753%, பார்தி டெலிகாம் 1,026%, சன் ஃபார்மா 1,195% அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளன. இந்த நிறுவனங்களின் இத்தகைய அசுர வளர்ச்சிக்குக் காரணம், அவர்களின் திறமை அல்ல; மோடி அரசு கொடுத்துள்ள சலுகைகளே. இதே காலத்தில் தக்காளியின் விலை விண்ணைத் தொட்டிருக்கிறது. வெங்காயம், எண்ணெய்... முதலான சமையல் பொருட்களின் விலை உச்சத்தில் இருக்கின்றன. 45 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொதுத் துறை நிறுவனப் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய முடிவு எடுத்திருக்கிறார்கள். ராணுவம், காப்பீடு போன்ற துறைகளில் 49 சதவிகித அந்நிய முதலீட்டுக்கு அனுமதி வழங்கும் முடிவை எடுத்துள்ளனர். இப்படி முழுக்க, முழுக்க தனியார் பெருநிறுவனங்களின் நலன்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறது இந்த அரசு.

மொத்தத்தில் எந்தக் கொள்கைகளுக்காக, எந்த மக்கள் விரோத நடவடிக்கைகளுக்காக காங்கிரஸ் மீது மக்களுக்குக் கோபம் வந்ததோ, அதே கொள்கைகளை மேலும் பன்மடங்கு வேகத்தில் பாரதிய ஜனதா அமல்படுத்துகிறது. அதில் மிக முக்கியமான நடவடிக்கை திட்டக் கமிஷனை ஒழித்திருப்பது. அரசுக்கு வரும் வருமானத்தை சமூகநலனைக் கருத்தில்கொண்டு எப்படிச் சமச்சீராக செலவிடுவது என்பதைத் திட்டமிடுவதுதான் திட்டக் கமிஷன். நவீன தாராளமயக் கொள்கையின் வருகைக்குப் பிறகு திட்டக் கமிஷன் அதன் நோக்கத்துக்கு நேர்மாறாகிவிட்டது என்பது உண்மைதான். எனில், அதைச் சீர்ப்படுத்த வேண்டுமே ஒழிய, ஒழித்துக்கட்டக் கூடாது. திட்டக் கமிஷனை ஒழிப்பது என்பது, சமூகநலத் திட்டங்களையும் மானியங்களையும் ஒழிப்பதற்கான முதல் படி. இனிமேல் அரசின் மானியத் திட்டங்களைப் படிப்படியாக நீக்குவார்கள்!''